Sunday, December 18, 2011

கடைசி சிறைக் கைதியை அமெரிக்க ராணுவம் ஈராக்கிடம் ஒப்படைத்தது


US hands over last detainee in Iraq

பாக்தாத்:அமெரிக்க ராணுவத்தின் காவலில் இருந்த கடைசி சிறைக் கைதியும் ஈராக் அரசிடம் ஒப்படைக்கப்பட்டார். லெபனானில் ஹிஸ்புல்லாஹ் உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் அலி மூஸா தக்தகி என்பவர்தாம் இறுதியாக ஈராக் அரசிடம் ஒப்படைக்கப்பட்டார்.
2007-ஆம் ஆண்டு கர்பலாவில் ஐந்து அமெரிக்க ராணுவத்தினரை கடத்திச் சென்று கொலைச்செய்த வழக்கில் அலி மூஸா கைது செய்யப்பட்டார். கைதி ஒப்படைக்கப்பட்டதை குறித்து பதிலளிக்க மறுத்த ஈராக்கில் அமெரிக்க ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் புக்கன்னான் இக்கேள்வியை வாஷிங்டனில் இருப்பவர்களிடம் கேளுங்கள் என கூறினார்.
அதேவேளையில் அலி மூஸாவை அமெரிக்காவிடம் ஒப்படைப்பார்கள் என ஒபாமா அரசு நம்புவதாக வெள்ளைமாளிகை செயலாளர் ஜெ.கார்ணி தெரிவித்துள்ளார். ராணுவ கமிஷன் முன்பாக அலி மூஸா விசாரணை செய்யப்படுவார். இது தொடர்பாக ஈராக் தலைமையுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது. அலி மூஸா மீதான குற்றத்திற்கு அவரை விசாரணை செய்யலாம் என்ற உறுதி கிடைத்துள்ளதாக கார்ணி தெரிவித்தார்.
ஒபாமா அரசு அமெரிக்க மக்களை ஏமாற்றியுள்ளது என குடியரசு கட்சியின் தலைவர் ஜான் மெக்கய்ன் குற்றம் சாட்டியுள்ளார். அதேவேளையில் அலி மூஸா, அமெரிக்க ராணுவத்தினரை கொலைச் செய்தார் என்பதற்கு தெளிவான ஆதாரம் இல்லை என ஈராக் நீதிமன்ற அதிகாரி தெரிவித்துள்ளார். ஆதாரம் இல்லை என்பது நீதிமன்றத்தில் நிரூபணமானால் அலி மூஸாவை விடுதலைச் செய்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment