Thursday, December 29, 2011

வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப்பணம்? தொழிலதிபர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்.


வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை குவித்து வைத்துள்ள தொழில் அதிபர்கள் பலர், தங்களுக்கு அப்படிப்பட்ட கணக்கு எதுவும் இல்லை என, மறுத்து வருவதால், அவர்களின் பழைய வருமான மற்றும் பணப் பரிமாற்ற கணக்கு விவரங்களை தோண்டித் துருவ, வருமான வரித்துறையினர் தீர்மானித்துள்ளனர்.

வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில், இந்தியர்கள் ஏராளமான அளவில் கறுப்புப் பணத்தை குவித்து வைத்துள்ளனர். இந்தப் பணத்தை மீட்டுக் கொண்டு வர வேண்டும் என, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், அரசு மேற்கொண்ட முயற்சியின் காரணமாக, சில நாடுகளிலிருந்து வங்கிக் கணக்கு வைத்துள்ள மற்றும் கறுப்புப் பணத்தை டெபாசிட் செய்துள்ள இந்தியர்களின் பெயர் விவரங்கள் கிடைத்துள் ளன. குறிப்பாக, சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ள வங்கிகளில் இருந்து இத்தகவல்கள் கிடைத்துள்ளன.

135 கோடி ரூபாய் வசூல்: அவற்றில் கறுப்புப் பணத்தை டெபாசிட் செய்துள்ளவரின் பெயர், அவரின் பாஸ்போர்ட் நம்பர், டெபாசிட் செய்துள்ள தொகை போன்ற விவரங்கள் தெரிய வந்துள்ளன. பிரான்ஸ் அரசிடம் இருந்து இதுபோல், 700க்கும் மேற்பட்டோரின் கணக்கு விவரங்கள் கிடைத்துள்ளன. இவர்களில் 80 பேருக்கு, கணக்கில் வராத 438 கோடி ரூபாய் சொத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களிடம் வரியாக 135 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், வேறு பலரோ, குறிப்பாக மும்பை மற்றும் டில்லியில் வசிக்கும் பலர், தங்களுக்கு வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு இல்லை; கறுப்புப் பணத்தையும் டெபாசிட் செய்யவில்லை என, மறுத்து வருகின்றனர். ஆனால், அவர்களின் பெயர் விவரங்கள் எல்லாம், வெளிநாடுகளில் இருந்து வந்த தகவல்களில் இடம் பெற்றுள்ளன.

பழைய விவரங்கள்: அதனால், இந்த நபர்களுக்கு உண்மையிலேயே வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு இருக்கிறதா அல்லது இல்லையா என்ற விவரத்தை கண்டறியவும், அவர்கள் சொல்வது உண்மையா என்பதை உறுதி செய்யவும், அதற்காக அவர்களின் பழைய கணக்கு விவரங்களை தோண்டித் துருவவும், வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இப்படி பழைய கணக்கு விவரங்களை தூசி தட்டி பார்ப்பதன் மூலம், அவர்கள் கறுப்புப் பணத்தை குவித்துள்ளனரா, இல்லையா என்பது தெரிய வரும் என, நினைக்கின்றனர்.

வரித்துறை நோட்டீஸ்: இப்படிப்பட்ட நபர்கள் பலரின் பெயர் விவரங்களை, மத்திய நேர்முக வரிகள் வாரியம், வருமான வரித்துறையின் மதிப்பீட்டு பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளது. அதனடிப்படையில், மும்பை, பெங்களூரு, டில்லி மற்றும் ஆமதாபாத்தைச் சேர்ந்த பலருக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதன் பின், அந்த நபர்களின் வருமானம் மற்றும் பணப் பரிமாற்ற விவரங்கள் எல்லாம் மின்னணு முறையிலும், அதிகாரிகள் மூலமும் பரிசோதிக்கப்படும். அவர்கள் ஏமாற்றியிருப்பது தெரியவந்தால், கடும் நடவடிக்கைகள் பாயும்.

No comments:

Post a Comment