துபாய்:தலித்துகளை குறித்து தயாரித்த ‘ஜெய் பீம்காம்ரேட்’ என்ற ஆவணத் திரைப்படத்தை திரையிடுவதற்காக துபாய் சர்வதேச திரைப்பட விழாவிற்கு வருகைத் தந்துள்ளார் இந்தியாவின் பிரபல ஆவண பட இயக்குநர் ஆனந்த்பட்வர்தன்.
அவர் பேட்டியளிக்கையில் கூறியதாவது: இந்தியாவில் முஸ்லிம், தலித், பழங்குடி இன மக்கள் வளர்ச்சி பெறுவதை தடுக்க முயலுகின்றனர். அது முடியாத சூழலில் அழித்தொழிக்கும் முயற்சிகள் நடைபெறுகிறது.
இந்தியாவின் அரசியல் சட்டத்தை உருவாக்கிய சிற்பி டாக்டர் அம்பேத்கரின் ஆதரவாளர்களை மாவோயிஸ்டுகளாக சித்தரிக்கின்றனர். போலீசாரின் மூலம் சில மர்ம கரங்கள் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்கின்றன .
1997-ஆம் ஆண்டு அம்பேத்கரின் மஹாராஷ்ட்ராவில் அவருடைய ஆதரவாளர்கள் 10 பேரை சுட்டுக்கொலைச் செய்த வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரையும் ஒரு நாள் கூட சிறையில் அடைக்கவில்லை.
மும்பை கலவரத்தில் ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் குற்றம் சாட்டிய குற்றவாளிகளின் நிலைமையும் இதுவேயாகும்.
முஸ்லிம்,ஒடுக்கப்பட்டசமூகங்கள் மீது நடக்கும் தாக்குதல்களின் பின்னணியில் செயல்படுபவர்கள் தண்டிக்கப்படுவதில்லை. அதனால்தான், அத்துமீறல்கள் குறைவதில்லை. இந்தியாவில் ஒவ்வொரு தினமும் இரண்டு தலித்துகள் கொல்லப்படுகிறார்கள். மூன்றுபேர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
அம்பேத்கரின் நினைவு தினமான டிசம்பர் 6 இல் ஹிந்துத்துவாவாதிகள் பாப்ரி மஸ்ஜிதை தகர்ப்பதற்கு காரணம் அந்த மாமனிதரின் நினைவுகளை மூடிமறைப்பதற்காக இருக்கலாம்.
இந்தியாவில் ஜாதீய கட்டமைப்பு முடிவுக்கு வர கலப்பு திருமணத்திற்கு ஊக்கமளிக்க வேண்டும். இவ்வாறு ஆனந்த் பட்வர்தன் கூறினார்.
No comments:
Post a Comment