Saturday, December 31, 2011

சவுதிஅரேபியாவுக்கு ஈரான் அச்சுறுத்தலாம் - அமெரிக்கா போர் விமானங்கள் வழங்குகிறது


சவுதிஅரேபியாவுக்கு அமெரிக்கா போர் விமானங்களை விற்கிறது.   சவுதிஅரேபியாவுக்கு அதன் அண்டை நாடான ஈரான் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே அது தனது ராணுவ பலத்தை பெருக்கி வருகிறது. அதற்காக தனது நட்பு நாடான அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கி குவிக்கிறது. 

இந்த நிலையில் போர் விமானங்களை வாங்குவது குறித்து கடந்த ஆண்டு அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து இருந்தது. அதன்படி சவுதி அரேபியாவுக்கு 84 போயிங் எப்-15 ரக போர் விமானங்களும், மற்றும் 70 அதிநவீன போர் விமானங்களையும் அமெரிக்கா வழங்குகிறது. மேலும் ஹெலி காப்டர்கள், ஏவுகணைகள், வெடி குண்டுகளும் வழங்கப்பட உள்ளன. அவற்றின் விலை ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி.

இதற்கான அதிகாரப் பூர்வ தகவல் ஹவாயில் இருந்து நேற்று வெளியிடப்பட்டது. தற்போது அங்குதான் அதிபர் ஒபாமா விடுமுறையை கழித்து வருகிறார். 

இந்தியா: லோக்பால் மசோதா வருகின்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் உறுதியாக நிறைவேறும் - ப.சிதம்பரம்.

புதுடெல்லி:  மாநிலங்களவையில் 187 திருத்தங்களை செய்யச்சொல்லி கடும் அமளியில் எதிர்கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகள் ஈடுபட்டதால் லோக்பால் மசோதா நிறைவேறாமல் மாநிலங்களவை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. 


 வருகின்ற பட்ஜெட் கூட்ட தொடரில் லோக்பால் மசோதா கண்டிப்பாக நிறைவேறும், எதிர்கட்சிகள் கூறும் 187 திருத்தங்களை செய்யமுடியாது, மூன்று திருத்தங்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளமுடியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்தார். கூட்டணி கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சமாதானபடுத்தி வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

குவைத்: ஓட்டுக்கு பணம் - தடுப்பதற்கு குழுக்கள் அமைக்கப்படும்.

குவைத் சிட்டி: வருகின்ற பிப்ரவரி 2 அன்று நடைபெற இருக்கும் பொது தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்கு தனித்தனி குழுக்கள் அமைத்து கண்கானிக்கபோவதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார், இந்த குழுவில் அரசு சாரா அமைப்புகளின் உறுப்பினர்களும் இடம்பெறுவார்கள் என்று கூறினார். குவைத் வெளிப்படை சமூகம், குவைத் வழக்கறிஞர்கள் சங்கம், மற்றும் குவைத் பத்திரிக்கையாளர்கள் சங்கம் போன்ற அமைப்புகள் அடங்கும். மேலும் தேர்தலின் போது அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

அமெரிக்கா: மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதில் ஒபாமா அரசு தோல்வியடைந்து விட்டது-மிட் ரூம்னே

US election 2012: Mitt Romney re-establishes himself as favourite with one week to go to Iowa நியூயார்க்: அடுத்த வருடம் நடைபெற உள்ள பொது தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக உள்ள மிட் ரூம்னே ஒபாமா அரசு மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதில் தோல்வியடைந்து விட்டது என்று கடுமையாக சாடியுள்ளார். வேலையில்லா திண்டாட்டம், வறுமை போன்ற மக்களின் பிரதான பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஆரோக்கியமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தவறிவிட்டது, கடந்த ஆண்டை விட வேலையில்லா பட்டதாரிகள், வறுமையில் வாடகூடிய மக்கள் அதிகரித்து விட்டனர், இதன் காரணமாக தான் மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 

Friday, December 30, 2011

இந்தியா: தொகாடியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் -பாப்புலர் பிரான்ட்


கோழிகோடு: விஷ்வ ஹிந்து பரிஷத்தின் அகில உலக தலைவரான பிரவீன் தொகாடியா மீது மாநில அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள பாப்புலர் பிரான்ட்டின் பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் சமூகம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களின் ஓட்டுரிமையை பறிக்க வேண்டும். இதன் பிறகு இந்தியாவை ஹிந்து ராஷ்டிராவாக அறிவிக்க வேண்டும் என்ற தொகாடியாவின் பேச்சு மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.இந்திய தேசத்தின் இறையான்மைக்கும் அதன் வளர்ச்சிக்கும் எதிரான இக்கருத்தை தெரிவித்துள்ளதால் பிரவீன் தொகாடியா மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட  வேண்டும் என கேரள பாப்புலர் பிரான்ட்டின் பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது செய்தி வெளியிட்டுள்ளார் .கொச்சியில் விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் முழுக்க முழுக்க முஸ்லிம்களுக்கு எதிரான துவேஷ கருத்துக்களையே தெரிவித்துள்ளார் .முஸ்லிம்களிடத்தில் இருந்து அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் தொகாடியா .

முஸ்லிம்கள் கட்டாய மத மாற்றத்தில் ஈடுபடுவதாகவும், வெளிநாடுகளிலிருந்து கருப்பு பணங்கள் பெறப்பட்டு இந்துக்களின் நிலங்களை அபகரிப்பதாகவும், இந்து பெண்களை போலியாக காதலித்து மதமாற்றம் செய்வதாகவும் கூறியுள்ளார் தொகாடியா.எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாத இத்தகைய செய்திகளை கொண்டு மத மோதல்களை ஏற்படுத்தவே சங்கப்பரிவாரங்கள் முயற்ச்சி செய்து வருகின்றன.

மத சாற்பற்று ஒற்றுமையோடு வாழ நினைக்கும் இந்திய மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தவும் அதன் மூலம் இரு சமூகங்கள் மத்தியில் கலவரத்தை ஏற்ப்படுத்தும் நோக்கிலேயே பிரவீன் தொகாடியா இத்தகைய நச்சுக்கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.இதே போன்று கருத்துக்களை வெளியிட்டு வரும் ஹிந்து ஐக்கிய வேதி,விஷ்வ ஹிந்து பரிஷத்,பஜ்ரங்தள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மதச்சார்ப்பற்று இயங்கும் பிற இயக்கங்களும் தங்களுடைய மௌனமான நிலையை கைவிட்டு இத்தகைய வகுப்பு வாத சக்திகளுக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்யவேண்டும் என அப்துல் ஹமீது தெரிவித்துள்ளார்.

ஏழைகளுக்கு கம்பளி போர்வைகளை வழங்கியது பாப்புலர் ஃப்ரண்ட்


குல்பர்கா: கர்நாடகா மாநில பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா சார்பாக குல்பர்கா மாவட்டத்தில் ஏழைகள் குளிரில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்காக கம்பளிப் போர்வைகள் வழங்கப்பட்டது. பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா தற்போது அதிக அளவில் கவனம் செலுத்தி வரும் துறையான சமூக மேம்பாட்டு துறையில் மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை நிறைவேற்றி வருகிறது. அதன் அடிப்படையில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள குல்பர்கா மாவட்டத்தில் உள்ள மக்கள் குளிரிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள கம்பிளி போர்வையின்றி தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு போர்வைகளை இலவசமாக வழங்கியது. பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியாவின் குல்பர்கா மாவட்ட தலைவர் டாக்டர். ஹமீது மக்துமி, துணை தலைவர் செய்யது ஜாகிர் மற்றும் திப்பு சுல்தான் எஜுகேசன் சொசைட்டியின் தலைவர் வழக்கறிஞர் அஜிமுதின் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Thursday, December 29, 2011

பிரிட்டன் முஸ்லிம்கள் மீது இனரீதியான தாக்குதல் - மனித உரிமைக்கு சவால்


2011-ஆம் ஆண்டு முடிவுறும் வேளையில் பிரிட்டன் மனிதஉரிமையை பாதுகாப்பதில் மிகவும் பின் தங்கியுள்ளது. இவ்வாண்டு நடந்த பல்வேறு சம்பவங்களில் அரசு அணுகுமுறைகளை ஆராயும் வேளையில் பிரிட்டனின் மனித உரிமை பாதுகாப்பில் மிகவும் மோசமான ஆண்டாக 2011 மாறியுள்ளது.

அரசின் 2011-ஆம் ஆண்டைய தீவிரவாத எதிர்ப்பு சட்டம்தான் மனித உரிமை மீறலுக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது.

இச்சட்டம் மனிதஉரிமைகளை வெளிப்படையாக மீறுவதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் உள்ளிட்ட  அமைப்புகள் கூறியுள்ளன. சர்வதேச சட்டங்களுக்கு எதிரானதுதான் பிரிட்டனின் தீவிரவாத எதிர்ப்பு சட்டம் என ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறுகிறது.

ஃபலஸ்தீன் தலைவர் ஷேக்ரஈத் ஸாலிஹ் கடந்த ஜூன் 28-ஆம் தேதி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டார். இதனை மனிதஉரிமை மீறல் என பிரிட்டன் நீதிமன்றம் கூறியது.

இஸ்ரேலிய போர்க் குற்றவாளிகளை சட்டத்தின் முன்னால் கொண்டுவருவதற்கான ஜெனீவா கன்வென்சனின் பொது சட்டப் பிரிவை திருத்துவதற்கான அரசின் தீர்மானம், செலவுகளை குறைப்பதற்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸ் நடத்திய தாக்குதல், லண்டனில் கலவரத்தை உருவாக்கிய டாட்டன் ஹாம் மார்க்டக்கனின் கொலை, கலவரக்காரர்களை கூட்டாக கைது செய்தது, சமூக இணையதளங்கள் மீது கட்டுப்பாட்டை விதிக்க முயற்சி ஆகியன மனிதஉரிமைகள் மீது அரசு நடத்திய அத்துமீறல்களுக்கான உதாரணங்களாகும்.

மேலும் பிரிட்டனில் சிறுபான்மையின வகுப்பினரான முஸ்லிம்கள் மீது நடக்கும் இனரீதியான தாக்குதல்களும் மனித உரிமையை பாதுகாப்பதில் சவாலாக எழுந்துள்ளது.

வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப்பணம்? தொழிலதிபர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்.


வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை குவித்து வைத்துள்ள தொழில் அதிபர்கள் பலர், தங்களுக்கு அப்படிப்பட்ட கணக்கு எதுவும் இல்லை என, மறுத்து வருவதால், அவர்களின் பழைய வருமான மற்றும் பணப் பரிமாற்ற கணக்கு விவரங்களை தோண்டித் துருவ, வருமான வரித்துறையினர் தீர்மானித்துள்ளனர்.

வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில், இந்தியர்கள் ஏராளமான அளவில் கறுப்புப் பணத்தை குவித்து வைத்துள்ளனர். இந்தப் பணத்தை மீட்டுக் கொண்டு வர வேண்டும் என, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், அரசு மேற்கொண்ட முயற்சியின் காரணமாக, சில நாடுகளிலிருந்து வங்கிக் கணக்கு வைத்துள்ள மற்றும் கறுப்புப் பணத்தை டெபாசிட் செய்துள்ள இந்தியர்களின் பெயர் விவரங்கள் கிடைத்துள் ளன. குறிப்பாக, சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ள வங்கிகளில் இருந்து இத்தகவல்கள் கிடைத்துள்ளன.

135 கோடி ரூபாய் வசூல்: அவற்றில் கறுப்புப் பணத்தை டெபாசிட் செய்துள்ளவரின் பெயர், அவரின் பாஸ்போர்ட் நம்பர், டெபாசிட் செய்துள்ள தொகை போன்ற விவரங்கள் தெரிய வந்துள்ளன. பிரான்ஸ் அரசிடம் இருந்து இதுபோல், 700க்கும் மேற்பட்டோரின் கணக்கு விவரங்கள் கிடைத்துள்ளன. இவர்களில் 80 பேருக்கு, கணக்கில் வராத 438 கோடி ரூபாய் சொத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களிடம் வரியாக 135 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், வேறு பலரோ, குறிப்பாக மும்பை மற்றும் டில்லியில் வசிக்கும் பலர், தங்களுக்கு வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு இல்லை; கறுப்புப் பணத்தையும் டெபாசிட் செய்யவில்லை என, மறுத்து வருகின்றனர். ஆனால், அவர்களின் பெயர் விவரங்கள் எல்லாம், வெளிநாடுகளில் இருந்து வந்த தகவல்களில் இடம் பெற்றுள்ளன.

பழைய விவரங்கள்: அதனால், இந்த நபர்களுக்கு உண்மையிலேயே வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு இருக்கிறதா அல்லது இல்லையா என்ற விவரத்தை கண்டறியவும், அவர்கள் சொல்வது உண்மையா என்பதை உறுதி செய்யவும், அதற்காக அவர்களின் பழைய கணக்கு விவரங்களை தோண்டித் துருவவும், வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இப்படி பழைய கணக்கு விவரங்களை தூசி தட்டி பார்ப்பதன் மூலம், அவர்கள் கறுப்புப் பணத்தை குவித்துள்ளனரா, இல்லையா என்பது தெரிய வரும் என, நினைக்கின்றனர்.

வரித்துறை நோட்டீஸ்: இப்படிப்பட்ட நபர்கள் பலரின் பெயர் விவரங்களை, மத்திய நேர்முக வரிகள் வாரியம், வருமான வரித்துறையின் மதிப்பீட்டு பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளது. அதனடிப்படையில், மும்பை, பெங்களூரு, டில்லி மற்றும் ஆமதாபாத்தைச் சேர்ந்த பலருக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதன் பின், அந்த நபர்களின் வருமானம் மற்றும் பணப் பரிமாற்ற விவரங்கள் எல்லாம் மின்னணு முறையிலும், அதிகாரிகள் மூலமும் பரிசோதிக்கப்படும். அவர்கள் ஏமாற்றியிருப்பது தெரியவந்தால், கடும் நடவடிக்கைகள் பாயும்.

இந்தியா:மத்திய பட்ஜெட் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படும் .

புதுடெல்லி :நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாத இறுதியில் மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் .அதற்கு முன்பாகவே இரயில்வே பட்ஜெட்டும், பொருளாதார ஆய்வறிக்கையும் தாக்கல் செய்யப்படும்,எதிர்ப்பாராத விதமாக பிப்ரவரியில் நாடாளுமன்ற தேர்தல் வந்தால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு பின்னர் புதிய அரசு பதவி ஏற்றதும் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் மற்றபடி வேறு எந்த காரணத்துக்காகவும் பட்ஜெட் தாக்கல் தள்ளிப்போகாது .ஆனால் எதிர்வரும் பிப்ரவரி மாதம் 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது ,தேர்தல் நடவடிக்கைகள் மார்ச் 9-ந் தேதி தான் முடிவடையும் .இதனால் மார்ச் 9 முதல் 15-குள் மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று நிதி அமைச்சக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர் .

எகிப்து: முன்னாள் அதிபர் முபாரக் மீதான விசாரணை மீண்டும் தொடக்கம்.

கைரோ: கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற அரபு வசந்தத்தின் போது பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டார் என்று முன்னாள் அதிபர் முபாரக் மீது குற்றம் சுமத்தப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மூன்று மாதங்களுக்கு பிறகு இந்த விசாரணை மீண்டும் தொடங்கியுள்ளது. மேலும் இவர் மீது ஊழல் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன, இதில் முன்னாள் அமைச்சர்களும் அடங்கும். பொதுமக்களுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைய காரணமாக இருந்ததற்கு தூக்கு தண்டனை வழங்கபடலாம் என்று எதிர்பர்க்கபடுகிறது.

Wednesday, December 28, 2011

எகிப்து: ஹமாஸ்-இஹ்வானுல் முஸ்லிமின் சந்திப்பு

பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான இஸ்மாயில் ஹனியன் எகிப்தின் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கடந்த 2007-ம் ஆண்டு காசா எல்லையை இஸ்ரேல் மூடியதை தொடர்ந்து ஹமாஸின் இந்த சுற்றுபயணம் மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது. காசா பகுதியை மீண்டும் கட்டி எழுப்புவதே இந்த சுற்றுபயணத்தின் பிரதான நோக்கம் என்பதை ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது, இதன் தொடர்ச்சியாக சூடான்,கத்தார்,பஹ்ரைன் மற்றும் துருக்கி போன்ற நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். நடந்து முடிந்த இரண்டு கட்ட தேர்தலிலும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது, இச்சந்திப்பு இஸ்ரேலுக்கு குழப்பத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியிருக்கும் என்று ஹனியன் கூறியுள்ளார்.  

நொறுக்கு தீனி சாப்பிடும் இளைஞர்கள் கவனத்திற்கு..!


டிரான்ஸ் ஃபேட் எனப்படும் கொழுப்பு அதிகமுள்ள நொறுக்கு தீனிகளை சாப்பிடும் இளைஞர்களுக்கு விந்தணு பாதிப்பு ஏற்படக்கூடும் என்று அமெரிக்கா, ஸ்பெயின் நாடுகளின் ஆராய்ச்சி எச்சரிக்கிறது. இதுகுறித்து ஹார்வேர்டு பல்கலைக்கழகம், ஸ்பெயினின் முர்சியா பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில் வெளியான தகவல் வருமாறு,

ஊட்டச் சத்து உணவை சாப்பிட்டு வந்த 18 முதல் 22 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களைவிட ஜங்க் புட் எனப்படும் நொறுக்கு தீனி, சாட் வகைகளை அதிகம் சாப்பிட்டு வந்த இளைஞர்களுக்கு உயிரணு எண்ணிக்கை குறைந்தது ஆய்வில் தெரிய வந்தது. நொறுக்கு தீனி, சாட் வகைகளை தொடாத இளைஞர்களைவிட அவற்றை சாப்பிடும் இளைஞர்களில் உயிரணுக்கள் சரியாக இருந்தவர்களுக்கும் அவற்றின் ஊர்ந்து சென்று கரு உண்டாக்கும் வேகம் (மொபிலிடி) குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சரியான உடல் எடை, உடற்பயிற்சி பழக்கத்துடன் இருந்தவர்களிடமும் இது ஏற்பட்டது தெரிந்தது.

இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டது. இதே விஷயத்தில் ஜப்பானில் நடந்த ஆய்வும் இதையே தெரிவித்துள்ளது. 215 இளைஞர்களிடம் நடந்த சோதனைகளில் இது நிரூபணமானது. இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் டிரான்ஸ் ஃபேட் எனப்படும் கொழுப்பு அதிகமுள்ள கேக், பீட்சா, பர்கர், சாக்கோ டிரிங்க், சிப்ஸ், கேண்டி ஆகியவற்றை அதிகம் சாப்பிடும் இளைஞர்களுக்கு உயிரணு எண்ணிக்கை பாதிக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டது. தினசரி உணவில் 2 கிராம் டிரான்ஸ் ஃபேட் போதுமானது. ஆனால், இந்த நொறுக்கு தீனி, சாட் வகைகளில் அவை கூடுதலாக இருப்பது இளைஞர்களிடம் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

சவுதிஅரேபியா: ஷலபி சித்தாந்தத்தை தொடர்ந்து கடைபிடிக்கும்.


ரியாத்: தாங்கள் கடைபிடித்து வரும் ஷலபி சித்தாந்தத்தை தொடர்ந்து சவுதி அரசாங்கம் கடைபிடித்துவரும் என்று இளவரசர் நயீப் "சலபிசிம்-ஷரியாவின் அணுகுமுறையும் தேசத்தின் தேவையும்" என்ற தலைப்பில் இமாம் முஹம்மது பின் சவுத் பல்கலைகழகம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கூறினார். அவர் மேலும் கூறுகையில் "நங்கள் கடைபிடிக்கும் இந்த கொள்கையை தீவிரவாதத்துடனும், பயங்கரவாததுடனும் ஒப்பிட்டு பேசுவதை வன்மையாக கண்டித்தார், இது குரான் மற்றும் ரசூல்(ஸல்) காட்டித்தந்த வழிமுறை" என்று கூறினார். இதற்கு எதிராக பிரச்சாரம் செய்யும் அனைத்து முயற்சிகளையும் முறியடிக்க நாம் முன்வர வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.

Tuesday, December 27, 2011

இந்தியா: லோக்பால் மசோதா மக்களவையில் நிறைவேறியது

புதுடெல்லி: நீண்ட காலமாக மக்களால் எதிர்பார்க்கப்பட்ட லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா மசோதா இன்று பார்லியில் பதினொரு மணி நேர விவாததிற்கு  பிறகு நிறைவேறியது. இதில் அரசு கொண்டுவந்த 7 திருத்தங்களும் ஏற்றுகொள்ளபட்டன. அரசு தரப்பில் அமைச்சர்கள் நாராயணசாமி, கபில்சிபில் இது வலுவான மசோதா, பா.ஜா.க இதற்கு தடையாக இருக்கிறது என்று கூறினார்கள். எதிர்கட்சிகள் இது பலவீனமான மசோதா, இதில் குறைபாடுகள் உள்ளன என்று கூறினார்கள். தமிழகத்தின் தி.மு.க மற்றும் அ.தி.மு.க லோக் ஆயுக்தா மாநில உரிமைகளை பறிக்கிறது என்று தங்களுடைய வாதங்களை பதிவு செய்தனர்.

இந்தியா: தடையை மீறி ரெயில் மறியல் எஸ்.டி.பி.ஐ.,யினர் 150 பேர் கைது !



கோவை, டிசம்பர். 26-2011 முல்லை பெரியார் அணை விவகாரத்தில் கேரள அரசின் போக்கை கண்டித்தும், மவுனம் காத்து வரும் மத்திய அரசை கண்டித்தும் 
சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா சார்பில் கோவையில் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்த மறியல் போராட்டத்திற்க்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.

தடையை மீறி எஸ்.டி.பி.ஐ., மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது தலைமையில் மாநில பொருளாளர் பாஷா மற்றும் மாவட்ட நிர்வாகிகள்
அபுதாஹிர், உம்மர், கட்சி நிர்வாகிகள் ரெயில் நிலையத்துக்குள் செல்ல முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர் அப்போது 
போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே கடும் வாக்கு வாதம் மற்றும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து தடையை மீறி ரெயில் மறியலுக்கு
முயன்றதாக 150 பேரை போலீசார் கைது செய்தனர். பிறகு மாலை விடுதலை செய்யபட்டது.

செய்தி:புகைப்படம்- கோவை தங்கப்பா

பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் புதிய காரணிகள் - ஆய்வில் சுவாரசிய தகவல்கள்


ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் கணக்கிடுவதற்கு, "மொத்த உள்நாட்டு உற்பத்தி' (ஜி.டி.பி.,) என்ற அளவீட்டு முறை மட்டும் உதவாது என, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பெலிசியா ஹுப்பெர்ட் தலைமையில், ஐரோப்பாவின் 23 நாடுகளில் பொருளாதார வளர்ச்சிக்கான அளவுகோல்கள் பற்றிய ஆய்வு நடந்தது. இந்த ஆய்வில், 23 ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 43 ஆயிரம் பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.

மக்கள் தங்கள் வாழ்க்கையை நல்லவிதமாக அனுபவிக்கின்றனரா என, அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் ஹுப்பெர்ட். இதில் "நல்லவிதமான அனுபவம்' என்பதை அவர், நல்ல மன ஆரோக்கியம் என்ற பொருளில் கூறுகிறார். மன அழுத்தம், கவலை, அதிக பதட்டம் ஆகிய மனநிலைகளுக்கு எதிரானது தான், நல்ல மன ஆரோக்கியம் அல்லது மன வளம் என அவர் விவரிக்கிறார்.

திறமை, உணர்ச்சிகளை உறுதியாகக் கையாளுதல், மன உறுதி, புரிதல், எதிர்மறையாகச் சிந்திக்காத தன்மை, நல்ல உணர்ச்சிகளை வெளிப்படுத்தல், நல்ல நட்புறவுகள், எதையும் தாங்கிக் கொள்ளுதல், தன்னம்பிக்கை மற்றும் உற்சாகம் ஆகிய 10 குணங்கள் மூலம், இந்த மன வளத்தை நாம் அறிய முடியும் என்கிறார் ஹுப்பெர்ட்.

Saturday, December 24, 2011

இந்தியா: 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு.


இந்தியா: மணிபூர், பஞ்சாப், உத்தரகான்ட், கோவா, மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான ஆயுட்காலம் முடிவடைவதை தொடர்ந்து இந்த 5 மாநில தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. உ.பி மாநிலத்தில் 7 கட்டமாகவும் மற்ற மாநிலத்தில் ஒரே கட்டமாகவும் நடைபெறும். மணிப்பூரில் ஜனவரி 28 அன்றும், பஞ்சாப் மற்றும்  உத்தரகான்ட் ஜனவரி 30 அன்றும் கோவாவில் மார்ச் 3 அன்றும் நடைபெறும், உத்தர பிரதேசத்தில் பெப்ரவரி 4, 8, 11, 15, 19, 23, 28  அன்றும் நடைபெறும். 5 மாநில ஒட்டு எண்ணிக்கை மார்ச் 4-ம் தேதி அன்று நடைபெறும்.

ஹமாஸ் - பதாஹ் சந்தித்துப் பேச்சு - இணங்கிச் செயற்படவும் முக்கிய தீர்மானம்


இஸ்ரேலின் மிரட்டலுக்கு இடையே ஃபலஸ்தீனில் ஐக்கிய அரசை உருவாக்க ஹமாஸும், ஃபத்ஹும் சம்மதம் தெரிவித்துள்ளன. அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் பதவி பிரமாணம் மேற்கொண்டு ஆட்சியில் அமரும் வகையில் அரசை உருவாக்க எகிப்து தலைநகரமான கெய்ரோவில் நடந்த பேச்சுவார்த்தையில் ஹமாஸ் தலைவர் காலித் மிஷ்அலும், ஃபத்ஹ் தலைவர் மஹ்மூத் அப்பாஸும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரு தலைவர்களும், ஃபலஸ்தீன் தேசிய பாராளுமன்ற சட்டமியற்றும் கவுன்சிலில் கலந்துகொள்ள ஒப்புதல் தெரிவித்தனர். ஐக்கிய அரசை உருவாக்குவதுடன் ஃபதஹிற்கு செல்வாக்கு உள்ள ஃபலஸ்தீன் விடுதலை இயக்கத்தை(பி.எல்.ஒ) புனரமைப்பதற்கான பரிசோதனை குழுவில் ஹமாஸின் பிரதிநிதிகளை சேர்க்கவும் இரு அமைப்புகளும் ஒப்புக்கொண்டுள்ளன. ஆனால்,பி.எல்.ஓவில் சேருவது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை என ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் ஃபவ்ஸி பர்ஹூம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே,ஹமாஸுடன் பேச்சுவார்த்தை நடத்திய நடவடிக்கையின் மூலமாக ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸிற்கு சமாதான பேச்சுவார்த்தையில் விருப்பமில்லை என்பது நிரூபணமாகியுள்ளது என இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. ஹமாஸ் அரசியல் இயக்கம் இல்லை எனவும், தீவிரவாத இயக்கம் எனவும் இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.

துனீசியா: சட்டசபையில் புதிய அரசாங்கத்திற்கு அங்கீகாரம்.

துனீசியா: அரபு புரட்சியின் தொடர்ச்சியாக நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க தேர்தலில் இஸ்லாமிய கட்சியான அல்நஹ்த கட்சி அருதிப்பெரும்பன்மையுடன் ஆட்சியை பிடித்தது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று துனீசிய சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் ஹமத் ஜபலி வெற்றி பெற்றார். இந்த அரசுக்கு 153 பேர் ஆதரவாகவும், 38 பேர் எதிராகவும் வாக்களித்தனர், 11 பேர் ஓட்டளிக்கவில்லை.வெற்றி பெற்ற பிறகு அவர் அளித்த பேட்டியில் "தன்னுடைய முதல் பணியாக புதிய அரசியலமைப்பு சட்டத்தை வரையறுப்பதும், வேலைவாப்பின்மையை முற்றிலும் அகற்றுவதுமே ஆகும். மேலும் பொருளாதார வளர்ச்சியில் அதிகமான கவனம் செலுத்த போவதாகவும்" கூறினார் . 

Friday, December 23, 2011

ஈரான்: கடற்படையின் 10 நாள் போர் பயிற்சி ஆரம்பம்

ஈரானின் கடற்படையின் சார்பாக 10 நாட்கள் போர் பயிற்சியை ஆரம்பிக்க போவதாக அறிவித்துள்ளது, ஏடன் வளைகுடாவின் கிழக்கு பிராந்தியத்தில் நடைபெறும் என்று அரசு செய்தி தொலைகாட்சி மூலம் அறிவித்தது. மேலும் போர் ஏற்பட்டால் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற விசயத்தில் அதிகமான கவனம் செலுத்துவதாகவும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஈரானுக்கும் மேற்குலகுக்கும் இடையே உள்ள கருத்து முரண்பாடுகளை மேலும் அதிகரித்துள்ளது.

இந்தியா: லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட லோக்பால் மசோதாவின் அம்சங்கள்


புதுடெல்லி: நடப்பு லோக்சபா கூட்டத்தில் பத்தாவது முறையாக தாக்கல் செய்யப்பட்ட லோக்பால் மசோதாவின் சிறப்பம்சங்கள்,

  • இந்த மசோதாவின்படி மத்திய அளவில் லோக்பால் அமைப்பும், மாநில அளவில் லோக்ஆயுக்தா என்ற அமைப்பும் செயல்படும். இந்த அமைப்புகளுக்கு ஊழல் தடுப்பு சட்டத்தின் அடிப்படையில் வழக்கு தொடருவதற்கும், முதற் கட்ட விசாரணை நடத்த உத்தரவும் பிறபிப்பதற்கும், மேற்பார்வையிடும் அதிகாரமும் உண்டு. 
  • இந்த அமைப்பிற்கு ஒரு தலைவரும், எட்டு உறுப்பினர்களும் உண்டு, அவர்களில் ஐம்பது சதவீதம் சிறுபான்மையினரும், தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள் மற்றும் பெண்களும் அடங்கும்.
  • இவர்களை தேர்வு செய்யும் குழுவில் பிரதமர், லோக்சபா சபாநாயகர், எதிர்கட்சி தலைவர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அல்லது அவரால் நியமிக்கப்படும் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மற்றும் ஜனாதிபதியால் நியமிக்கப்படும் சட்ட நிபுணர் அடங்கிய குழு தேர்வுசெய்யும்.
  • தேர்வு குழுவிற்கு உதவி செய்ய தேடுதல் கமிட்டி உதவி செய்யும் அதில் ஐம்பது சதவிகிதம் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள், பெண்கள் குழுவும் அடங்கும்.
  • பிரதமருக்கு எதிராக புகார் கூறப்பட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றால் லோக்பால் குழுவின் மொத்த உறுப்பினர்களும் கூடி நான்கில் மூன்று பங்கு ஆதரவு பெறவேண்டும், அந்த விபரங்கள் வீடியோ பதிவுகளாக பதிவுசெய்யபடும். ஆனால் சர்வதேச உறவுகள், உள்நாடு மற்றும் வெளிநாடு பாதுகாப்பு, விண்வெளி தகவல்கள், அணுசக்தி விபரங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதில் இருந்து விலக்கு அளிக்கபடுகிறது.
  • அரசு ஊழியர்களில் குரூப், "ஏ","பி","சி" மற்றும் "டி" பிரிவு ஊழியர்கள் லோக்பால் விசாரணை வரம்பிற்குள் வருவார்கள், ஆனால் குரூப், "ஏ",மற்றும் "பி" ஊழியர்களின் மீதுள்ள புகார்களை லோக்பால் அமைப்பு மத்திய ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்திற்கு பரிந்துரை செய்யும், அவர்கள் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பது தொடர்பாக லோக்பால் அதிகாரிகளுக்கு அறிக்கை அளிப்பார்கள். மேலும், "சி" மற்றும் "டி" பிரிவு ஊழியர்கள் மீது உள்ள புகார்களை ஆதாரத்தின் அடிப்படையில் ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையமே நடவடிக்கை எடுக்கும் அது தொடர்பான அறிக்கையை மட்டும் லோக்பால் குழுவுக்கு அளிக்கும்.
  • ஒரு அமைப்போ அல்லது நபரோ ஆண்டு ஒன்றுக்கு பத்து லட்சத்திற்கு மேல் நன்கொடை பெற்றால் அதுவும் லோக்பால் விசாரணை வரம்பிற்குள் வரும். ஆனால் லோக்பால் அமைப்பு தானாக முன்வந்து விசாரணை செய்ய இயலாது.
  • லோக்பால் அமைப்பு விசாரிக்கும் வழக்குகளில் நடவடிக்கைகளை மேற்கொள்ள எந்த முன் அனுமதியும் பெற தேவை இல்லை . மேலும், வழக்கு நடைபெறும் போது முறைகேடான வழிகளில் சேர்த்த சொத்துகளை முடக்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • லோக்பால் விசாரணை வரம்பிற்குள் சி.பி.ஐ வராது, ஆனால் லோக்பால் அமைப்பு விசாரணையில் உள்ள வழக்குகள் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ க்கு உத்தரவிடவும், மேற்பார்வையிடவும் முடியும்.
  • லோக்பால் அமைப்பிற்கு வரும் புகார்கள் தொடர்பாக முதல் கட்ட விசாரணை மூன்று மாதத்திற்குள் முடிக்க வேண்டும், தேவை ஏற்பட்டால் மேலும் மூன்று மாதங்கள் நீடிக்கலாம். அதேபோல் முழுமையான விசாரணை என்றால் ஆறு மாதத்திற்குள் முடிக்க வேண்டும், அதிலும் தேவை ஏற்பட்டால் மேலும் ஆறு மாதங்கள் நீடிக்கலாம். 

குண்டுவெடிப்பு வழக்குகளை முடக்குவதற்கு பாசிஸ்டுகள் சதி - பாப்புலர் ஃப்ரண்ட்

புதுடெல்லி: குண்டுவெடிப்பு வழக்குகளை முடக்குவதற்கு பாசிஸ்டுகள் சதி செய்கிறார்கள் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர் இ.எம்.அப்துர்ரஹ்மான் கூறியிருக்கிறார். அவர் தனது அறிக்கையில் மேலும் கூறியதாவது " குண்டுவெடிப்பு வழக்கில் பாசிஸ்டுகளின் பங்களிப்பை பற்றி நடந்து வரும் விசாரணையை முடக்குவதற்கு தான் பாசிஸ்டுகள் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை பதவி விலக சொல்லி பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மலேகான், மக்கா மஸ்ஜித், அஜ்மீர், சம்ஜோத எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புகளின் வேகம் குறைந்து வருவதை பார்க்கும் போது பாரதிய ஜனதா கட்சி எடுத்த முயற்சியில் வெற்றி பெற்று வருவதை நம்மால் உணர முடிகிறது.  
             ஒரு குழு திட்டம் போட்டு குண்டு வெடிப்புகளை நடத்தியிருப்பது தெளிவாக தெரியும் போது அவர்களை கைது செய்யாமல் இருப்பது ஆச்சரியமளிக்கிறது. ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக பதவி ஏற்ற பிறகு தான் குண்டுவெடிப்புகளில் பாசிஸ்டுகளின் பங்களிப்பை பற்றி தைரியமாக வெளிக்கொண்டுவந்தார். இதை மனதில் கொண்டு தான் பா.ஜ.க வினர் ப.சிதம்பரத்திற்கு எதிராக சதிகளை அரங்கேற்றிவருகின்றனர்."

Thursday, December 22, 2011

இஸ்ரேலின் அத்துமீறல்களை அமெரிக்கா காணாததுபோல் நடிப்பு - ரஷ்யா குற்றச்சாட்டு



ஐ.நா:ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீனில் புதிய குடியிருப்புகளை கட்ட அனுமதி அளித்துள்ள இஸ்ரேலின் நடவடிக்கையை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலும், இந்தியா உள்பட வளரும் நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.


ஃபலஸ்தீன் உடனான அமைதி பேச்சுவார்த்தையை சீர்குலைக்க இஸ்ரேல் முயல்வதாக பிரிட்டன், பிரான்சு, ஜெர்மனி, போர்சுகல் ஆகிய நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன.

கிழக்கு ஜெருசலம் உள்ளிட்ட ஃபலஸ்தீன் பகுதிகளில் சட்ட விரோதமாக குடியிருப்புகளை கட்டுவோம் என்ற இஸ்ரேலின் பிரகடனம் ஆபத்தான செய்தியாகும். இஸ்ரேல் உடனடியாக குடியிருப்புகளை கட்டுவதை நிறுத்தவேண்டும். குடியிருப்பு வாசிகள் ஃபலஸ்தீனர்கள் மீது நடத்தும் தாக்குதலையும் உடனடியாக நிறுத்தவேண்டும் என கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்நாடுகள் கூறியுள்ளன.

இஸ்ரேலின் அத்துமீறல்களை அமெரிக்கா காணாததுபோல் நடிப்பதாக ரஷ்யாவின் தூதர் விட்டலி சுர்கின் குற்றம் சாட்டியுள்ளார். இஸ்ரேல் குடியிருப்புகளை கட்டுவதுதான் பிராந்தியத்தில் பிரச்சனைக்கு காரணம் என இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தூதர்கள் கூறினர்.

ஆபிரிக்காவின் பின்னடைவுக்கு கிறிஸ்தவமே காரணம் - தென்னாபிரிக்கா ஜனாதிபதி


ஆபிரிக்கக் கண்டத்தில் 19 ஆம் நூற்றாண்டுப் பகுதியில் கிறிஸ்தவம் அறிமுகப்படுத்தப்பட்டமையே அங்கு தற்போது நிலவும் பிரச்சினைகளுக்குக் காரணம் என தென்னாபிரிக்க ஜனாதிபதி கருத்து தெரிவித்துள்ளமை பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஜேகப் சூமா தனது சொந்த மாகாணமான கிவாசூலு - நடாலில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே இக்கருத்தினைத் தெரிவித்துள்ளார். 
கிறிஸ்தவமே அனாதைகள் மற்றும் முதியோர் இல்லத்தினை ஆபிரிக்காவுக்கு கொண்டுவந்ததெனவும் இதனால் ஆபிரிக்காவின் பாரம்பரியம், கலாசாரம் ஆகியன பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

புதிய மதங்களின் வருகைக்கு முன்னர் ஆபிரிக்கா தனக்கென தனித்துவத்தைக் கொண்டிருந்ததாகவும், அது இருண்ட காலம் என பலர் கூறியபோதிலும் அக்காலப்பகுதியில் மேற்கூறிய பிரச்சினைகள் எதுவும் இருக்கவில்லையெனவும் சூமா குறிப்பிட்டுள்ளார். 

இவரின் இக்கருத்திற்கு அங்குள்ள கிறிஸ்தவ அமைப்புகள் தமது கவலையைத் தெரிவித்துள்ளன. மேலும் பல அமைப்புகள் அவரின் கருத்துக்குக் கண்டனம் வெளியிட்டுள்ளன. 

எனினும் அந்நாட்டு ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இதனை மறுத்துள்ளது. சூமா தவறான அர்த்தத்தில் அக்கருத்தைத் தெரிவிக்கவில்லையெனவும், ஆபிரிக்கர்கள் தங்களது பாரம்பரியத்தைக் காக்கவேண்டுமெனும் அர்த்தத்திலேயே அவர் அவ்வாறு கூறியதாகவும் அப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. சூமா தென்னாபிரிக்காவின் முதல் 'சூலு' இன ஜனாதிபதியான அவர் பழங்குடியின மக்களின் கலாசாரத்தையே அதிகமாகப் பின்பற்றுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.