Wednesday, December 14, 2011

துனீசியா:புதிய அதிபர் பதவி ஏற்பு

Moncef Marzouki promised to be faithful to the martyrs
துனீஸ்:அரபுலக புரட்சியின் பிறப்பிடமான துனீசியாவில் முன்ஸிஃப் மர்ஸூகி புதிய அதிபராக உறுதிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
நாட்டின் விருப்பங்களும், சட்டங்களும் பாதுகாக்கப்படும் என உறுதி அளிப்பதாக திருக்குர்ஆனின் மீது கைவைத்தவாறு சட்டமியற்றும் அவையில் நடந்த நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:நாட்டிற்காக இரத்த சாட்சிகளாக மாறியவர்களிடம் கடமைப்பட்டிருக்கிறோம். அவர்களின் உயிர் தியாகம்தான் என்னை இப்பதவியில் அமர வைத்துள்ளது. புரட்சியின் லட்சியம் முழுமை அடைவதற்காக செயல்படுவேன். அரபுலக புரட்சிக்கு வித்திட்ட பூமியில் ஏகாதிபத்திய யுகத்திற்கு பிறகு முதல் அதிபராக பதவியேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு மர்ஸூகி கூறினார்.
துனீசியாவின் முன்னாள் சர்வாதிகாரி பின் அலியின் ஆட்சி காலக்கட்டத்தில் 10 ஆண்டுகள் வெளிநாட்டில் வசித்துவந்தார் மர்ஸூகி. 217 உறுப்பினர்களை கொண்ட அவையில் 153 உறுப்பினர்களின் ஆதரவுடன் மர்ஸூகி அதிபராக தேர்வுச் செய்யப்பட்டார்.
202 உறுப்பினர்கள் அவையில் இருந்த வேளையில், மூன்று பேர் மட்டுமே எதிர்த்து வாக்களித்தனர். 44 எதிர்கட்சி உறுப்பினர்கள் வாக்குச்சீட்டில் எதுவும் நிரப்பாமல் அளித்தனர்.
பிரான்சில் டாக்டர் பட்டம் பெற்ற மர்ஸூகி 1989-ஆம் ஆண்டு முதல் 1994-ஆம் ஆண்டு துனீசியாவை விட்டு வெளியேறும் வரை துனீசியன் லீக் ஃபார் டிஃபன்ஸ் ஆஃப் ஹியூமன் ரைட்ஸின் தலைவராக பதவி வகித்தார்.
பிரஞ்சு மற்றும் அரபி மொழிகளில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு வருகை தந்துள்ளார். மர்ஸூகியின் காங்கிரஸ் பார்டி ஃபார் தி ரிபப்ளிக் கட்சிக்கு 29 இடங்கள் உள்ளன. மர்ஸூகி ஆளுங்கட்சியான அந்நஹ்ழாவின் கைப்பாவை என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின.
இஸ்லாமிய கட்சியான அந்நஹ்ழாவின் தலைவர் ஹமதி ஜபலியை பிரதமராக நியமிப்பது மர்ஸூகியின் முதல் பணியாகும்.

No comments:

Post a Comment