Friday, December 23, 2011

இந்தியா: லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட லோக்பால் மசோதாவின் அம்சங்கள்


புதுடெல்லி: நடப்பு லோக்சபா கூட்டத்தில் பத்தாவது முறையாக தாக்கல் செய்யப்பட்ட லோக்பால் மசோதாவின் சிறப்பம்சங்கள்,

  • இந்த மசோதாவின்படி மத்திய அளவில் லோக்பால் அமைப்பும், மாநில அளவில் லோக்ஆயுக்தா என்ற அமைப்பும் செயல்படும். இந்த அமைப்புகளுக்கு ஊழல் தடுப்பு சட்டத்தின் அடிப்படையில் வழக்கு தொடருவதற்கும், முதற் கட்ட விசாரணை நடத்த உத்தரவும் பிறபிப்பதற்கும், மேற்பார்வையிடும் அதிகாரமும் உண்டு. 
  • இந்த அமைப்பிற்கு ஒரு தலைவரும், எட்டு உறுப்பினர்களும் உண்டு, அவர்களில் ஐம்பது சதவீதம் சிறுபான்மையினரும், தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள் மற்றும் பெண்களும் அடங்கும்.
  • இவர்களை தேர்வு செய்யும் குழுவில் பிரதமர், லோக்சபா சபாநாயகர், எதிர்கட்சி தலைவர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அல்லது அவரால் நியமிக்கப்படும் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மற்றும் ஜனாதிபதியால் நியமிக்கப்படும் சட்ட நிபுணர் அடங்கிய குழு தேர்வுசெய்யும்.
  • தேர்வு குழுவிற்கு உதவி செய்ய தேடுதல் கமிட்டி உதவி செய்யும் அதில் ஐம்பது சதவிகிதம் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள், பெண்கள் குழுவும் அடங்கும்.
  • பிரதமருக்கு எதிராக புகார் கூறப்பட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றால் லோக்பால் குழுவின் மொத்த உறுப்பினர்களும் கூடி நான்கில் மூன்று பங்கு ஆதரவு பெறவேண்டும், அந்த விபரங்கள் வீடியோ பதிவுகளாக பதிவுசெய்யபடும். ஆனால் சர்வதேச உறவுகள், உள்நாடு மற்றும் வெளிநாடு பாதுகாப்பு, விண்வெளி தகவல்கள், அணுசக்தி விபரங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதில் இருந்து விலக்கு அளிக்கபடுகிறது.
  • அரசு ஊழியர்களில் குரூப், "ஏ","பி","சி" மற்றும் "டி" பிரிவு ஊழியர்கள் லோக்பால் விசாரணை வரம்பிற்குள் வருவார்கள், ஆனால் குரூப், "ஏ",மற்றும் "பி" ஊழியர்களின் மீதுள்ள புகார்களை லோக்பால் அமைப்பு மத்திய ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்திற்கு பரிந்துரை செய்யும், அவர்கள் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பது தொடர்பாக லோக்பால் அதிகாரிகளுக்கு அறிக்கை அளிப்பார்கள். மேலும், "சி" மற்றும் "டி" பிரிவு ஊழியர்கள் மீது உள்ள புகார்களை ஆதாரத்தின் அடிப்படையில் ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையமே நடவடிக்கை எடுக்கும் அது தொடர்பான அறிக்கையை மட்டும் லோக்பால் குழுவுக்கு அளிக்கும்.
  • ஒரு அமைப்போ அல்லது நபரோ ஆண்டு ஒன்றுக்கு பத்து லட்சத்திற்கு மேல் நன்கொடை பெற்றால் அதுவும் லோக்பால் விசாரணை வரம்பிற்குள் வரும். ஆனால் லோக்பால் அமைப்பு தானாக முன்வந்து விசாரணை செய்ய இயலாது.
  • லோக்பால் அமைப்பு விசாரிக்கும் வழக்குகளில் நடவடிக்கைகளை மேற்கொள்ள எந்த முன் அனுமதியும் பெற தேவை இல்லை . மேலும், வழக்கு நடைபெறும் போது முறைகேடான வழிகளில் சேர்த்த சொத்துகளை முடக்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • லோக்பால் விசாரணை வரம்பிற்குள் சி.பி.ஐ வராது, ஆனால் லோக்பால் அமைப்பு விசாரணையில் உள்ள வழக்குகள் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ க்கு உத்தரவிடவும், மேற்பார்வையிடவும் முடியும்.
  • லோக்பால் அமைப்பிற்கு வரும் புகார்கள் தொடர்பாக முதல் கட்ட விசாரணை மூன்று மாதத்திற்குள் முடிக்க வேண்டும், தேவை ஏற்பட்டால் மேலும் மூன்று மாதங்கள் நீடிக்கலாம். அதேபோல் முழுமையான விசாரணை என்றால் ஆறு மாதத்திற்குள் முடிக்க வேண்டும், அதிலும் தேவை ஏற்பட்டால் மேலும் ஆறு மாதங்கள் நீடிக்கலாம். 

No comments:

Post a Comment