வாஷிங்டன்:ஈரான் வான் எல்லையில் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் ஆளில்லா(ட்ரோன்)உளவு விமானத்தை திருப்பி தருமாறு ஈரானுக்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் ஈராக் ஆக்கிரமிப்பு முடிந்துவிட்டதாக அறிவிக்க நடத்தப்பட்ட பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இதனை ஒபாமா தெரிவித்தார். விமானத்தை திரும்ப தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரானின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என ஒபாமா கூறினார்.
வெள்ளை மாளிகையில் ஈராக் பிரதமர் நூரி அல் மாலிக்கியுடன் நடந்த சந்திப்பிற்கு பிறகு இருவரும் இணைந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் உரையாற்றினர்.
அதே வேளையில், ஈரானின் வான் எல்லையையும், சர்வதேச சட்டங்களையும் மீறியுள்ள அமெரிக்கா மன்னிப்பு கோரவேண்டும் என ஈரான் பாதுகாப்பு அமைச்சர் அஹ்மத் வாஹித் பதிலளித்துள்ளார். அமெரிக்காவின் உளவு விமானம் தற்பொழுது ஈரான் வசம் உள்ளது என்றும், அதனை திருப்பி தர முடியாது என்றும் அஹ்மத் வாஹித் தெரிவித்தார்.
அமெரிக்க உளவு விமானத்தின் தொழில்நுட்பத்தை குறித்து நிபுணர்கள் ஆராய்ந்துவருவதாக நேற்று முன் தினம் வெனிசுலா நாட்டின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் தெரிவித்தார்.
ஈரானின் ரகசியங்களை வேவு பார்க்க வந்த அமெரிக்காவின் உளவு விமானத்தை திருப்பி தரமாட்டோம் என ஈரான் புரட்சிப் படையின் துணை தலைவர் ஜெனரல் ஹுஸைன் ஸலாமி தெரிவித்துள்ளார். அமெரிக்க விமானம் ஈரானின் எல்லையில் அத்துமீறிய சம்பவத்தை குறித்து ஐ.நாவில் ஈரான் புகார் அளித்துள்ளது.
No comments:
Post a Comment