Sunday, December 11, 2011

ஸ்வீடனில் ஹிஜாப் அணிந்த முதல் பெண் போலிஸ் அதிகாரி


donna -isvec-police

ஸ்டாக்ஹோம்:டோன்னா எல்ஜம்மால் என்கிற 26  வயது பெண்மணியே ஸ்வீடனில் ஹிஜாப் அணிந்து பணி புரியும் முதல் பெண் காவலதிகாரி என்று மெட்ரோ சே என்னும் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. அவர் ஹிஜாப் அணிவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே காவல்துறையில் தாம் இணைய விருப்பப்பட்டார் என்றும் அப்பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து டோன்னா எல்ஜம்மால் தாம் சிறுவயது முதலே மக்களுக்கு சேவை செய்ய ஆர்வம் கொண்டுள்ளதாகவும் கணினி முன் அமர்ந்து பொழுது போக்க தாம் விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் நீண்ட விவாதங்களுக்கு பின்னர் சில வருடங்களுக்கு முன்புதான் போலிஸ் சீருடையின் ஒரு பகுதியாக ஹிஜாப் அணிய தனக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அவரை பொறுத்தவரையில் ஸ்வீடன் ஒரு பன்முக கலாச்சாரத்தை கொண்ட நாடு எனவும் அனைத்து துறைகளிலும் பல்வேறுபட்ட மக்கள் பணிபுரிந்தால்தான் அறிவும் புரிதலும் வளரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
டோன்னா எல்ஜம்மால் சிறுவயது முதலே மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க கூடியவர். மேலும் அவரின் குடும்பம் வெளிநாட்டிலிருந்து ஸ்வீடனில் போய் குடியேறியவர்கள். அவர் சிறைத்துறையில் பணிபுரியும்போதே ஹிஜாப் அணியும் பழக்கம் உடையவர் ஆவார். மேலும் முன்னதாக ஹிஜாப் பற்றி பலரும் விமர்சனம் செய்தனர் என்றும் பின்னர் தன்னை நன்றாக புரிந்துகொண்டதன் விளைவாக விமர்சனங்கள் நின்று போனது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் ஹிஜாப் எந்த வகையிலும் தனது பணிக்கு இடையூறாக இல்லை என்றும் அது தனது உடலில் ஒரு பகுதி என அவர் கருதுவதாகவும் மற்றும் ஹிஜாப் அணிந்து கொண்டே அணைத்து பணிகளையும் சிறப்பாக செய்ய முடிகிறது என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment