கெய்ரோ: கடந்த திங்கட்கிழமை (12.03.2012) எகிப்திய எல்லைக்கு ஊடாக சட்டவிரோதமாக ஆயுதங்களைக் கடத்திய குற்றத்துக்காக இரண்டு இஸ்ரேலியர்களுக்கும் ஒரு உக்ரேன் நாட்டவருக்கும் எகிப்திய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. எகிப்திய எல்லையில் கடத்தப்பட்ட ஆயுதங்களுடன் பாதுகாப்பு அதிகாரிகளிடம் அகப்பட்டுக்கொண்ட மூவரும் விளக்க மறியலில் அடைக்கப்பட்டனர்.
விசாரணைகளின்போது, எகிப்தின் ஷாம் அல் ஷெய்க் நகரில் சுற்றுலா நிறுவன முகாமையாளராகப் பணிபுரியும் உக்ரேன் நாட்டவர், 'தான் தற்காப்புத் தேவைகளுக்காகவே மேற்படி இஸ்ரேலியர்களிடம் ஆயுதக் கொள்வனவு செய்ய முயன்றதாகத்' தெரிவித்துள்ளார். எகிப்து, மத்திய கிழக்கு நாடுகளில் முதன்முதலாக 1979 ஆம் ஆண்டு இஸ்ரேலுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டு அதன் நீண்ட கால நட்பு நாடாகத் திகழ்ந்து வந்துள்ளது.
காஸா மக்களுக்கு எதிராக இஸ்ரேல் அமுல்நடாத்திவந்த சட்டவிரோத முற்றுகைக்கு ஈடாக, ரஃபா எல்லைக் கடவையை மூடி வைத்திருந்ததில் இருந்து, பலஸ்தீன் விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்கான முயற்சிகளில் முழு முனைப்பாக ஈடுபட்டதுவரை எகிப்திய அதிகாரத் தரப்பும் இஸ்ரேலுக்குப் பக்கபலமாகவே செயற்பட்டுவந்தது. இந்நிலையில், அந்நாட்டின் சர்வாதிகாரி ஹொஸ்னி முபாரக்கின் பதவி இழப்பை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு நிலையில் படிப்படியான மாற்றம் ஏற்படத்தொடங்கியது.
அதற்கு சிகரம் வைத்ததுபோல், அண்மையில் எகிப்திய உயிர்வாயு வினியோகக் குழாய்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை குண்டுவைத்துத் தகர்த்த சம்பவத்தின் பின் இஸ்ரேல்-எகிப்து உறவுநிலையில் இருந்த விரிசல் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இத்தகைய பின்புலத்தில் இரண்டு இஸ்ரேலியருக்கு எதிராக எகிப்திய நீதிமன்றம் விதித்துள்ள இந்த அதிரடித் தீர்ப்பு, இஸ்ரேலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.
No comments:
Post a Comment