Sunday, March 18, 2012

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கூடாதாம் - ஆர்எஸ்எஸ் 'புதுக் கரடி'!


Rssடெல்லி: இலங்கை அரசுக்கு எதிராக ஐநாவில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக்கூடாது என்று ஆர்எஸ்எஸ் திடீர் எதிர்ப்பு காட்டியுள்ளது. சுப்பிரமணியசாமி போன்ற ஒரு சிலர் தவிர, பிற மாநிலத்தவர் கூட ஈழத்தமிழருக்கு இலங்கைப் போரில் நிகழ்ந்த கொடூரத்தைப் பார்த்து ஆவேசப்பட்டு வருகின்றனர். மனிதாபிமானமும், தன் சொந்த மக்கள் மேல் அபிமானமும் இல்லாத இலங்கை அரசுக்கு சர்வதேச அளவில் பெரிய அளவிலான தண்டனை தரப்பட்டே தீர வேண்டும் என பல நாட்டு மக்களும் கருத்து கூறி வருகின்றனர்.

இலங்கைக்கும் ஈழத்தமிழருக்கும் சம்பந்தமே இல்லாத 23 நாடுகள், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் மனித உரிமை மீறல் தீர்மானத்தை ஆதரிக்கும் போது, தொப்புள் கொடி உறவு உள்ளதாகக் கூறப்படும் இந்தியா மட்டும் இன்னும் மவுனம் காத்து வருகிறது. அந்த மவுனத்தை உடைத்து, இலங்கைக்கு எதிராக இந்தியா முடிவெடுக்க ப.சிதம்பரம் போன்றவர்கள் முயன்று வரும் வேளையில், மதவாத அமைப்பான ஆர்எஸ்எஸ் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளது.

அமெரிக்காவின் இந்த தீர்மானத்தின் மூலம் ஒரு ஜனநாயக அரசை அடி பணியவைக்க மேற்கத்திய நாடுகள் முயற்சிக்கின்றன என அந்த அமைப்பு 'புதுக்கரடி' விட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்குமா, ஆதரிக்காதா என்பதை உடனே தெளிவுபடுத்த வேண்டும் என்றும், தங்களுடன் நேரடியாக தொடர்பில்லாத விவகாரங்களில் தலையிடும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக இந்தியா வலுவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ்ஸின் ஆர்கனைஸர் பத்திரிகை தலையங்கம் வெளியிட்டுள்ளது.

இதன் மூலம், ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் நிழலில் செயல்படும் இயக்கத்தினர் தமிழீழ மக்களுக்கு ஆதரவாக இருப்பதாக சிலர் கொண்டிருந்த மாயை நொறுங்கியுள்ளது. மதவாத, ஆதிக்க சக்திகள் ஒருபோதும் சுதந்திரப் போராட்டங்களை ஆதரித்ததில்லை என்பதற்கு இது இன்னுமொரு உதாரணம் என்று தமிழுணர்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

No comments:

Post a Comment