Sunday, March 11, 2012

ஜப்பானை நிலநடுக்கம், சுனாமி தாக்கி ஒரு வருடம் நிறைவு: மக்கள் கண்ணீர் அஞ்சலி


Japan Tsunamiடோக்கியோ:  ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம், சுனாமி ஆகிய இரட்டைப் பேரழிவுகளுக்கு 16,000 பேர் பலியான சம்பவம் நடந்து இன்றுடன் ஒரு வருடமாகிறது. இதையடுத்து பலியானவர்களுக்கு ஜப்பானியர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


11-3-2011 அன்று பிற்பகல் 2.26 மணிக்கு வடகிழக்கு ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 9 ஆக பதிவானது. இதையடுத்து சுனாமி பேரலைகள் எழுந்து அப்பகுதியை சின்னாபின்னமாக்கியது. ஜப்பான் வரலாற்றிலேயே மோசமான இயற்கை பேரழிவு இது தான். இந்த இரட்டைப் பேரழிவுகளால் ஃபுகுஷிமாவில் உள்ள 6 அணுஉலைகளில் 4 உலைகள் வெடித்துச் சிதறின. இதனால் அங்கு கதிர் வீச்சு அபாயம் ஏற்பட்டது. 



இதையடுத்து அணுஉலையைச் சுற்றி 20 கிமீ தூரத்தில் தங்கியிருந்த 80,000 பேர் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அணுஉலைகளை குளிர வைக்கும் பணி கடந்த 6 மாத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. தற்போது அணுஉலைகளால் பாதிப்பில்லை என்று கூறப்படுகின்றது. இதற்கிடையே மீட்புப் பணிகளில் அரசு மெத்தனமாக செயல்பட்டது என்று குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அந்நாட்டு பிரதமர் நோட்டோகான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.



இந்த இரட்டைப் பேரழிவுகளில் சிக்கி 16,000 பேர் பலியாகினர். 3,647 பேர் காணாமல் போயினர். இந்த துயர சம்பவம் நடந்து இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவடைகிறது. இதையடுத்து பலியானவர்களுக்கு ஜப்பானியர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் அணுசகதிக்கு எதிராக பேரணியும் நடக்கின்றது. இந்த இயற்கை சீற்றங்களால் இன்னும் 3,26,000 பேர் வீடுகள் இல்லாமல் தவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment