ஈழப் போரில் இலங்கையின் வெற்றிகளுக்குப் பின் நின்றோரில் கணிசமான பங்களிப்பினை வழங்கியது இந்தியா என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். முப்பதாண்டு காலத் தார்மீகப் போரை முடிவிற்கு கொண்டு வருவதில் இலங்கையினை விட,இந்தியா தான் பல வழிகளிலும் ஆக்ரோசத்துடன் நின்று தனது பங்களிப்பினை போர்க் களத்தில் வளங்கியிருந்தது. கடற் கண்காணிப்பு, விமானங்களைக் கண்காணிக்கும் ரேடர் (ராடர்) உதவி, கள முனையில் திட்டமிடல் உதவி, உட்பட பல உதவிகளைச் செய்ததோடு, இலங்கையினைச் சர்வதேச யுத்த மீறல் விசாரணைகளிலுருந்தும் பாதுகாத்து வந்த பெருமை இந்தியாவிற்கும், இந்திய காங்கிரஸ் மத்திய அரசிற்குமே உரியது.
இப்போது இலங்கையின் முகத்தில் காரி உமிழாத குறையாக, கள முனையில் நீங்கள் இப்படியெல்லாம் செய்யுங்கள் என ஐடியா கொடுத்து விட்டு, இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த ஐ.நா தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என இலங்கை கெஞ்சி மன்றாடியும் செவிமடுக்காது இந்தியா பல்டி அடித்திருக்கிறது. இது இலங்கைக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியையும், பிள்ளையினை கிள்ளி விட்டு, தொட்டிலை ஆட்டாது இந்தியா இடை நடுவில் இந்தியா கை விட்டு விட்டதே எனும் ஏமாற்றத்தினையும் கொடுத்திருக்கிறது. இதன் விளைவாக இப்போது இலங்கை இராஜதந்திர ரீதியில் இந்தியாவைப் பழிவாங்க களமிறங்கியிருக்கிறது.
காஷ்மீரில் இந்தியப் பழங்குடிகள் கொல்லப்பட்ட சம்பவங்கள், இந்தியாவில் வெளிச்சத்திற்கு வராத காஷ்மீர் படுகொலைகள் எனப் பழைய வரலாறுகளைத் தேடி எடுத்து, சீனா, பாகிஸ்தான், அரபு நாடுகளின் உதவியோடு ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த தயாராகிறதாம் இலங்கை.இலங்கையின் இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கோள் காட்டி AFP, மற்றும் தமிழ் இணையத் தளங்கள் இந்த அதிரடிச் செய்தியினை வெளியிட்டிருக்கின்றன. இலங்கையின் போர்க் குற்ற ஆதார வீடியோக்கள் உலகத் தமிழர் பேரவைக்கு கிடைப்பதற்கு இந்திய இராணுவ உயர் அதிகாரிகளும் பங்களிப்பு நல்கியதாக ஏலவே இலங்கைக்கு சந்தேகம் இருந்து வந்த நிலையில், இலங்கை இப்போது வட்டியும் முதலுமாக தன் குரோதத்தை தீர்க்க களமிறங்கியிருக்கிறது.
இலங்கையின் இந்த நடவடிக்கைக்குப் பின்னால் சீனா பிரதான சக்தியாக நிற்பதால், இலங்கையினைக் கைப் பொம்மையாகப் பாவித்து இந்தியாவை அடக்க நினைக்கிறது சீனா. இன்னோர் வகையில் கூறினால், இந்தியா மீது அமெரிக்க உதவியுடன் ஓர் அழுத்தத்தை கொண்டு வந்து, அமெரிக்க - இந்திய நல்லுறவில் விரிசலை ஏற்படுத்தினால் ஆசியாக் கண்டத்தில் அமெரிக்காவின் நடவடிக்கைகளை இந்திய இராணுவ பலத்துடன் கட்டுப்படுத்த முடியும் என இலங்கை கனவு காண்கிறது. எது எப்படியோ....புலி எதிர்ப்பாளர்கள் முதல், தமிழாதரவு சக்திகள் வரை இலங்கையின் குணம் பற்றி பல்வேறு வழிகளிலும் எடுத்துக் கூறி, இந்தியா செவிசாய்க்காது ஈழப் போரில் தன் ஈனச் செயலைக் காட்டியிருந்தது. இப்போது அதற்கான பலனை அனுபவிக்க தயாராகிறது.
No comments:
Post a Comment