பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ராஜ்யசபா எம்.பி. பதவிக்காக இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவர் தனது சொத்து விவரங்களையும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார். கடந்த 2007ம் ஆண்டு ஜூன் மாதம் ரூ.52 கோடி சொத்து வைத்திருந்த அவர் தற்போது ரூ.111.26 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் வைத்துள்ளார். அவர் உத்தர பிரதேச முதல்வராக இருந்த கடந்த 5 ஆண்டுகளில் தான் அவரது சொத்து இரண்டு மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
அவர் தனது மனுவில் வெளியிட்டுள்ள சொத்து விவரம் வருமாறு,
ரூ. 10.20 லட்சம் ரொக்கம், ரூ. 96.53 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள், ரூ.9.32 லட்சம் மதிப்புள்ள 18.5 கிலோ வெள்ளி டின்னர் செட், ரூ. 15 லட்சம் மதிப்புள்ள ஓவியங்கள் என ரூ. 15.26 கோடி அசையும் சொத்துக்கள். ரூ.5,390 மதிப்புள்ள துப்பாக்கி. இது தவிர வங்கிக் கணக்கு மற்றும் பிக்சட் டெபாசிட் தொகையும் அசையும் சொத்துக்களில் அடக்கம்.
அவருக்கு ரூ.96.38 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்கள் உள்ளன. அதில் 9, மால் அவினியூ, லக்னோவில் உள்ள புதிய வீடு, டெல்லியில் கன்னாட் பிளேசில் 3,628 சதுர அடி மற்றும் 4,535 சதுர அடி வியாபார இடங்கள் அடக்கம். இந்த இரண்டு இடங்களின் தற்போதைய விலை ரூ. 9.39 கோடி மற்றும் ரூ. 9.45 கோடி ஆகும்.
டெல்லி சர்தார் பட்டேல் மார்க்கில் 42, 907 சதுர அடி நிலத்தில் ஒரு வீடு மற்றும் லக்னோவில் 71,282 சதுர அடியில் ஒரு வீடும் உள்ளது. அவர் 2010-11ம் ஆண்டில் ரூ.6.51 கோடி வருமான வரியாக செலுத்தியுள்ளார். சட்டசபை தேர்தலில் வென்ற பிறகு சமாஜ்வாடி கட்சி செய்யும் அட்டூழியங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர ராஜ்யசபா பதவி உதவிகரமாக இருக்கும் என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment