Sunday, March 4, 2012

ஈரானில் மிகப்பெரிய எண்ணெய்க்கிணறு கண்டுபிடிப்பு !



தென் ஈரான் பிராந்தியத்தில் மிகப்பெரியதோர் எண்ணெய்க் கிணறு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என ஈரானின் தேசிய எண்ணெய்க் கம்பெனியின் பணிப்பாளர் செய்யத் மஹ்மூத் மஹத்திஸ் நேற்று(சனிக்கிழமை, 03.03.2012) செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இப்பிராந்தியத்தில் ஏற்கெனவே ஓர் எண்ணெய்க் கிணறு தோண்டப்பட்டிருந்தது எனவும், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள எண்ணெய்க் கிணறு இதுவரை ஈரானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிணறுகளிலேயே மிகப் பெரியதாகும் என்றும் தெரிவித்துள்ளார். புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எண்ணெய்க் கிணற்றைப் பரிசோதித்த ஈரானிய நிபுணர்கள், இக்கிணற்றில் மிக உயர்தரமான எண்ணெய், பெருமளவில் சுரப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.


இதே போன்ற இன்னும் இரண்டு அல்லது மூன்று புதிய எண்ணெய்க் கிணறுகள் பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு வெகு விரைவிலேயே வெளியிடப்படும் என்றும்  செய்யத் மஹ்மூத் மஹத்திஸ்  மேலும் தெரிவித்தார். ஈரானில் இதுவரை பாரசீக வளைகுடாவின் ஃபிர்தௌசி எண்ணெய்க் கிணறு உட்பட 18 மிகுவளம் பொருந்திய எண்ணெய்க் கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஈரான் சவூதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக உலகின் மிகப்பெரிய எண்ணெய் வள நாடாக இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.

ஈரான், மத்தியகிழக்கு நாடுகளில் அதிக சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளும் நாடாக இருந்துவருகின்றது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய நாடுகளுடனான முறுகல் நிலை தொடர்ந்து உக்கிரமடைந்துவரும் நிலையில் ஈரானின் இந்தப் புதிய அறிவிப்பு, உலகின் கவனத்தை ஒட்டுமொத்தமாக அதன் பக்கமாய் ஈர்க்கும் என்பதோடு, ஈரான் எதிர்ப்பு நாடுகளுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

No comments:

Post a Comment