பெங்களூர்: சுரங்க முறைகேடு வழக்கிலிருந்து தாம் விடுவிக்கப்பட்டுவிட்டதால் நிச்சயமாக தம்மை பாஜக மேலிடம் முதல்வ்ராக்கிவிடும் என்று 100 சதவீத்ம் நம்பிக்கை இருப்பதாக கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
சுரங்க முறைகேடு வழக்கில் எடியூரப்பா மீதான எப்.ஐ.ஆரை நேற்று முன்தினம் கர்நாடக நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. இதைய்டுத்து நேற்று தமது ஆதரவாளர்களுடன் எடியூரப்பா ஆலோசனை நடத்தினார்.
சுரங்க முறைகேடு வழக்கில் நிரபராதி என நிரூபித்தால் நிச்சயம் எடியூரப்பா மீண்டும் முதல்வராக்கப்படுவார் என்று ஏற்கெனவே பாஜக தலைவர் நிதின் கட்காரி உறுதியளித்திருந்தார். இதனால் தமக்கு மீண்டும் முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்றும் எடியூரப்பாவும் அவரது ஆதரவாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் எடியூரப்பாவும் கோர்ட் உத்தரவு நகலை கத்காரிக்கு உடனடியாக அனுப்பி வைத்துள்ளார். அதில் தான் நிரபராதி என்று கோர்ட் தீர்ப்பளித்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார்.
இதற்கிடையே, எடியூரப்பா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பெங்களூரை முற்றுகையிட்டு வருகின்றனர். மேலும் டெல்லி சென்று பாஜக தலைமையுடன் ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். எடியூரப்பா விவகாரம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்கிடையே, முதல்வர் சதானந்த கவுடா, தன் ஆதரவாளர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து அவர் கூறுகையில், எடியூரப்பாவுக்கு மீண்டும் முதல்வர் பதவி வழங்குவது குறித்து, நான் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. இது குறித்து கட்சி மேலிடம் தான் முடிவெடுக்க வேண்டும். சமீபத்தில் நிதின் கட்காரி பெங்களூரு வந்திருந்த போது, மாநில அரசு தலைமை (முதல்வர் பதவி) மாற்றம் குறித்து யாரும் ஆலோசனை செய்ய வேண்டாம் என்று தெளிவாகக் கூறி விட்டு சென்றுள்ளார். இவ்விஷயத்தில் கட்சி மேலிடம் என்ன சொல்கிறதோ, அதன்படி செயல்படுவோம் என்றார்.
ஹூப்ளியில் வெடிக்குமா பிரளயம்?
இந்த நிலையில் ஹூப்ளி நகரில் 11ம் தேதி எடியூரப்பா ஆதரவாளர்கள் ஒரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் அது உண்மையில் தனது பலத்தைக் காட்ட எடியூரப்பாவே ஏற்பாடு செய்துள்ள விழா என்கிறார்கள். அந்த நிகழ்ச்சியில் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களைத் திரட்டிக் கொண்டு வந்து நிறுத்தப் போகிறார் எடியூரப்பா என்றும் பேசப்படுகிறது. மீண்டும் எடியூரப்பாவின் நாடகம் தொடங்கி விட்டது. பாஜக தலைமை இந்த நாடகத்தை எப்படி சமாளிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
No comments:
Post a Comment