Tuesday, March 27, 2012

கூடங்குளம்: அரசு- போராட்டக் குழு பேச்சுவார்த்தை- உண்ணாவிரதம் வாபஸ்!


Kudankulam Protestersராதாபுரம்: கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரம் குறித்து போராட்டக் குழுவுடன் அரசு அதிகாரிகள் நடத்தி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதையடுத்து உண்ணாவிரதத்தை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. கூடங்குளம் அணு மின் நிலைய பிரச்சனையி்ல் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் போராட்டக்காரர்கள் திடீரென்று பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தனர். பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தது ஏன் என்பது குறித்த பின்னனி தகவல்கள் வெளியாகியுள்ளன.



கூடங்குளம் அணு மின் நிலைய பிரச்சனையில் தமிழக அரசின் நிலைப்பாட்டை கண்டித்து போராட்டகுழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் உள்பட 15 பேர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்கள் இன்று 9வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கின்றனர்.



இதனால் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் மற்றும் பொன் இசக்கியம்மாள், பிரேமா, தாமஸ், நேரூஜி, அஞ்சலி ஜெயராஜ் ஆகியோரின் உடல் நிலை மோசமாகியுள்ளது. இடிந்தகரையைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி பொன்இசக்கி மேடையிலேயே மயங்கினார். அவரை அருகில் உள்ள லூர்து அன்னை மருத்துவமனையில் சேர்த்தனர். ஏற்கனவே நேற்று முன்தினம் மயக்கம் அடைந்த அதே ஊரை சேர்ந்த ராஜு மனைவி மெல்ரட் என்பவருக்கு இரண்டாவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 



இந்நிலையில் உண்ணாவிரத பந்தலில் உதயகுமார் பேசியதாவது, மத்திய மாநில அரசுகள் குழுக்கள் அமைத்தும் இதுவரை எங்களிடம் யாரும் பேசவில்லை. பொதுமக்களை எந்த குழுவும் சந்திக்கவில்லை. நாங்கள் மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். மாநில அரசின் பிரிதிநிதிகள் வந்தால் அவர்களுடன் பேசுவோம். அணு மின் நிலையத்திலிருந்து 30 கி்மீ சுற்றளவு எல்லைக்குள் இருப்பவர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளித்தல் வேண்டும். 



நிலவியல், நீரியல், கடலியல் பிரச்சனைகளை ஆய்வு செய்வதற்கு அரசே ஒரு குழுவை அமைக்க வேண்டும். அணு உலை பாதிப்பால் ஏற்படும் காப்பீடு தொடர்பாக இந்தியா-ரஷ்யா இடையே ரகசிய ஒப்பந்தம் போட்டுளளனர். அதை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிட வேண்டும். போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீது உள்ள வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்றார்.



பேச்சுவார்த்தை வெற்றி:



இந்நிலையில் இன்று பிற்பகல் 1 மணியளவில் கூடங்குளம் விவகாரம் குறித்து போராட்டக் குழுவுடனான பேச்சுவார்த்தையை அரசு துவங்கியது. போராட்டக் குழுவினரின் கோரிக்கைகள் மற்றும் உறுதிமொழிகளுடன் பேச்சுவார்த்தை துவங்கியது.



ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் துவங்கிய இந்தப் பேச்சுவார்த்தையில் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழு சார்பில் பேராயர் யுவான் அம்புரோஸ், மதுரை பேராயர் பீட்டர் பெர்னாண்டோ, கிராம மக்கள் 10 பேருக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



அரசின் சார்பில் நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜ், எஸ்.பி. விஜயேந்திர பிதாரி, அவரது மனைவியும் மாவட்ட துணை கலெக்டருமான ரோகிணி பிதாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போராட்டக் குழுவினர் 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தனர். 



அதன் விவரம் வருமாறு,



1) கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும்.

2) போராட்டக்குழு மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். 

3) அணு உலை விபத்து இழப்பீடு குறித்த இந்திய- ரஷ்ய ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை தெரிவிக்க வேண்டும்.

4) அணு உலையைச் சுற்றி 30 கி.மீ. பரப்பளவிற்குள் பேரிடர் மேலாண்மை பயிற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.

5) அணு உலையிலிருந்து வெளியேறும் கழிவுகளை எந்த முறையில் அப்புறப்படுத்துவது என்பது குறித்து விளக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.



ராதாபுரம் பகுதியில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்று போராட்டக் குழுவினர் கோரிக்கை விடுத்தனர். கூடங்குளம் பகுதியில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவு தொடரும். அதே சமயம் ராதாபுரத்தில் 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்படும் என்று கலெக்டர் செல்வராஜ் உறுதியளித்தார். மேலும் போராட்டக் குழுவினர் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது சட்டப்பூர்வமாகத் தான் நடக்கும் என்றும், இது குறித்து அரசுக்கு தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார். 



பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததாகவும், மாவட்ட நிர்வாகத்தினர் பரிவுடன் பேசியதாகவும் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர். இதையடுத்து உண்ணாவிரதத்தை வாபஸ் பெற அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment