Monday, March 26, 2012

நானும் வறுமைக் கோடும்


காலை 07:30 மணியளவில் புழுக்கம் குறைந்த, மிதமான சூரிய வெளிச்சத்துடன் தொடர்ந்த பொழுதில் பசிப்பதாய் உணர்கிறேன். இறைவனின் உதவியால் நான் ஒரு நாளும் பசியால் வாடியிருந்ததில்லை. உடலின் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய உணவருந்த அமர்ந்தேன். என் இந்திய தேசத்தில் திட்ட கமிஷன் என்ற அறிவாளிகளின் கூடாரத்திலிருந்து வெளியான வறுமைக் கோட்டிற்கான வரையறை மனதில் ஆடியது. நாளொன்றுக்கு ரூ. 28.65 (மாதமொன்றிற்கு ரூ. 859.60) சம்பாதிக்கும் (அ) செலவழிக்கும் திராணி உடைய யாரும் வறுமை கோட்டிற்குள் வர மாட்டார்கள் என்ற அதிர்ச்சியான அறிவிப்பை பற்றியே மனம் ஓடியது. 

இந்த சென்னை முழுவதும் தேடினாலும் இப்படி ஒரு ஏழைத் தமிழனை (அ) இந்தியனைக் காண முடியுமா? வறுமைக் கோட்டிற்கான இன்றைய சமன்பாடு இதுவென்றால், கடந்த 5 வருடங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று கூறியிருப்பதற்கு பயன்படுத்தப் பட்ட வாய்ப்பாடு என்னவாக இருக்கும்?
பெரு மதிப்பிற்குரிய நமது திட்டக் கமிஷன் "ஏழை" என்பதற்கான வரையறையாக என்ன கூறுகிறது? ஓர் ஏழை கழிப்பறை வசதியுடன் கூடிய வீடும், அவன் பசியாற அரிசி அல்லது கோதுமை வாங்கும் சக்தியும் இருந்தால் அவன் வறுமைக் கோட்டிற்குள் வராதவனாகிறான். நாள் ஒன்றுக்கு ரூ. 28.65 சம்பாதிக்கும் ஒரு சக இந்தியன் எவ்வாறு  கழிப்பறை வசதியுடன் கூடிய வீட்டிற்கு சொந்தக் காரனாக முடியும்? என்ன ஒரு முரண்பாடான உடன்பாடு?

வளர்ந்தோங்கும் ரியல் எஸ்டேட் வியாபாரத்தால், புற சென்னை முழுவதும் வெளி மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்த மக்கள் ஊழியம் செய்து வருகின்றனர். ஓங்கி உயர்ந்த கட்டடங்களின் நிழல்களில் இவர்களின் குடிசைகள் அமைந்துள்ளன. இவர்களின் சமையலோ திறந்த வெளியில் தான். திட்டக் கமிஷனின் வரையரைப் படி இவர்கள் பெரும் பணக்காரர்கள். ஏனெனில் இவர்களின் தினசரி வருமானம் ரூ.100. அதாவது, திட்டக் கமிஷனின் வரையறை படி மூன்று மடங்கு அதிகம்.

 தொட்டுக் கொள்ள ஊறுகாய் வைத்துக் கொண்டு இரண்டு ரொட்டி சாப்பிட்டாலே ரூ.8 ஆகி விடுகிறது. டீ முடித்து பில் பார்த்த பொழுது, டீக்கு ரூ.6 போட்டிருந்தது. பாலின் விலையையும் (லிட்டருக்கு ரூ.29), சர்க்கரையின்  விலையையும் (கிலோ ரூ.40) எண்ணிய பொழுது, டீயின் விலை நியாயமாகவே பட்டது. வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள இந்தியனின் நிலைமையை இன்று ஒரு நாள் மட்டும் நான் வாழ நினைத்தாலும் என்னால் முடியாது போலுள்ளது. (நான் ஏற்கனவே என் சிற்றுண்டிக்காக ரூ.14 காலி செய்து விட்டேன், இனி வேலைக்குப் போகும் பேருந்து செலவை மிச்சம் செய்ய நினைத்தால் 12 கிலோ மீட்டர் நடந்தாக வேண்டும்). நாளொன்றுக்கு சுமார் ரூ.100 (அல்லது அதிகமாக) சம்பாதிக்கும் கொல்லர்களும், தொட்டிகள் பழுது பார்ப்பவர்களும், கட்டிட தொழிலாளிகளும் இனி என் இந்தியாவில் ஏழைகள் அல்ல. ஆக, இந்தியா இப்போது தான் ஒளிர ஆரம்பித்திருக்கிறது.

புற சென்னையில் அதிகமதிகம் பழகிப் போன பேருந்து போக்குவரத்து அதீதமாகிப் போய் விட்டது போல் தோன்றியது. பெரும்பாலும் சொந்த அல்லது வாடகை கார்களில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். நம் தேசம் நிஜமாகவே பணக்கார நாடாகி விட்டது என்ற எண்ணத்தை, "சார் ரிக்க்ஷா வேணுமா" என்ற குரல் கலைத்தது. 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு 5 ரூபாய்க்கு செல்வதாக பேரம் பேசினான். பேச்சுக்  கொடுத்து பார்த்ததில் நல்ல சவாரிகள் கிடைத்தால் நாளொன்றுக்கு ரூ.150 வரை சம்பாதிப்பானாம். இவனும் இப்போது பணக்காரன், திட்டக் கமிஷனின் வரையறை படி.

அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து பேருந்தில் ஏறி அலுவலகம் செல்ல ரூ.8 கொடுத்து டிக்கெட் எடுத்தேன். (நான் இது வரை ரூ. 22 செலவழித்து விட்டேன்). சக பயணி ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் ராசியான மோதிரம் விற்று சராசரியாக ரூ. 70 சம்பாதிப்பதாக கூறினார். மூட நம்பிக்கைகளில் லயித்தவர்களை அதிகம் சந்திப்பதில் அவர்களின் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறினார். குடும்பம் சகிதமாக மோதிரங்களை மொத்த வியாபாரிகளிடம் வாங்க செல்வதாக கூறினார். அவருடைய ராசியான மோதிர வியாபாரம் அவருக்கு எந்த அதிர்ஷ்டத்தையும் பெற்று தர வில்லையே என்ற சிந்தனையுடன்  அலுவலகம் வந்தேன்.

ஒரு நாள் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள ஏழையாக வாழ மீதமுள்ள ரூ.7க்குள் நான் இன்றைய மீதப் பொழுதை எவ்வாறு கழிப்பேன்? மதியச் சாப்பாடு மட்டுமே ரூ.20 ஆச்சே. மறு சாப்பாடு இல்லாமல் பொட்டலம் கட்டி வாங்கி வந்தால் கூட ரூ.15 ஆகுமே. ஒரு வழியாக கூட வேலை செய்யும் நண்பரின் சாப்பாட்டை பகிர்ந்த்துண்டேன். பசியடங்க வில்லை. சோர்வும், ஓய்வும் ஒரு சேர ஓர் ஓரமாய் அமர்ந்து இந்த கட்டுரையை எழுத ஆரம்பித்தேன். ஆதரவற்ற ஏழைகளை இந்த அரசு நிரந்தரமான பசியிலும் பட்டினியிலும் விட்டு விடுமோ என்று அஞ்சுகிறேன். 

நான் இது வரை உட்கொண்ட உணவுகளின் மொத்த கலோரிகள் 650. தேசிய ஊட்டச் சத்து நிலையத்தில் பணி புரியும் நிபுணர் திரு. வீணா சத்ருக்னாவின் கூற்றுப் படி 75 கிலோ உடைய என் போன்ற வளர்ந்த ஆண் குறைந்த பட்சம் 1200 கலோரிகளைக் கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும். வாழ்வாதாரத்திற்கு மட்டுமே இந்த கணக்கு. கடின வேலை செய்வதாக இருப்பின் இந்த அளவுகள் கூடுமே தவிர குறையாது. உழைப்பதைத் தவிர வேறு எதையும் செய்ய நினைக்காத ஓர் ஏழைக்கு இந்த 650 கலோரி எவ்வாறு போதுமானதாகும்?

இந்த புதிய "வறுமைக் கோடு" பற்றிய வரையறை, ஏழை என்பவனை "நாள்தோறும் பட்டினியிருப்பவனாக" பார்க்கச் சொல்லுவதாகவே என் புத்திக்குப் படுகிறது. ஒரு வேலை ரூ. 28.65 -க்குள் மூன்று வேலை உணவையும் குறைந்த கலோரிகளுடன் சாப்பிட நேரும் ஒரு தாய் தனது குழந்தைக்கு எவ்வாறு பாலூட்ட போகிறாள். அப்படியே ஊட்டினாலும் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்து  கிடைக்காமல் போகுமே. விளைவு அக்குழந்தைகள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சரியான வளர்ச்சியை அடைய முடியுமா?  

     பிச்சைக்காரர்கள் இந்த வரம்பை விட அதிகமாகவே சம்பாதிக்கிறார்கள். வீடுகளையும், குடும்பங்களையும் பிரிந்து புலம் பெயர்ந்த எல்லா தொழிலாளிகளும் இந்த வரம்பிற்குள் வரப்போவதுமில்லை. பிறகு யார் தான் வறுமைக்கோட்டிற்கு கீழே வசிக்கப் போகிறார்கள்?

·          மாதம் ரூ.859.60-க்கு யாரையாவது ஒப்பந்தத் தொழிளார்களாக்கி அவர்களை வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்கள் என்று அரசு முத்திரையிட்டு, பின் அரசு நிவாரணங்களை வழங்க இருக்கிறதா?

·          பட்டினிச் சாவுகளையும், கூட்டம், கூட்டமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதையும் அரசு வேறு கோணங்களில் நோக்குகிறதா? அல்லது கண்டுகொள்ளவே இல்லையா?

·          தன் உயர் நிலை துறந்து கீழ் நிலைக்கு மனமுவந்து உதவத்துடிக்கும் சில நல்ல உள்ளங்களையும் தடுத்து நிறுத்த முயல்கிறதா?

·          அல்லது அடுத்த ஐ.நா. கூட்டத்தில் இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் யாருமே இல்லை என பிரகடனப்படுத்த போகிறார்களா?
-மு. சிக்கந்தர் பாஷா

1 comment:

JAHIR HUSSAIN said...

மக்களின் வறுமை நிலை. நாட்டின், மக்களின் வறுமையை அறியாத திட்ட கமிஷன். பிச்சைகாரனை தவிர கீழ்நிலை ஊழியர்கள் இன்று அரசு பார்வைக்கு செல்வந்தர்கள்! என்று நினைக்கும் போது என் நாட்டின் வறுமை நிலை என்றும் மாறாது. இதை மாற்ற வரும் ஆட்சியர்களை வரவேற்ப்போம்.

இக்கட்டுரையை தெளிவாக கொடுத்த நண்பர் சிக்கந்தர் பாஷா அவர்களுக்கும், இக்கட்டுரையை பிரசுரித்த ஆசிரியர் அவர்களுக்கும். சமூகத்தை தெளிவுபடுத்த உங்கள் பணியை தொடருங்கள். இறைவன் உங்களோடு ஆமீன்…..

Post a Comment