அகமதாபாத்: கர்நாடக சட்டசபையில் பாஜக அமைச்சர்கள் 3 பேர் செல்போனில் ஆபாச வீடியோ பார்த்தது பரபரப்பான நிலையில், குஜராத் சட்டசபையிலும் 2 பாஜக எம்எல்ஏக்கள் ஐ-பேடில் ஆபாச படங்கள் பார்த்து பிடிபட்டுள்ளனர். சங்கர்பாய் லகாதிர்பாய் செளத்ரி, ஜேதாபாய் கெலாபாய் அகிர் பர்வாட் ஆகிய இருவர் தான் இந்த பாஜக எம்எல்ஏக்கள் ஆவர்.
சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, நீர்வளத்துறை அமைச்சர் எழுந்து பதில் சொல்லிக் கொண்டிருக்க, இந்த இருவரும் ஆபாச படங்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். இதை ஒரு தனியார் செய்தித் தொலைக்காட்சி படமும் பிடித்துள்ளது. இவர்கள் ஆபாச படங்கள் பார்த்ததை முதலில் கண்ட குஜராத் பத்திரிக்கையின் நிருபர் ஜானக்பாய் புரோகித் கூறுகையில்,
முதலில் இந்த இரு எம்எல்ஏக்களும் சுவாமி விவேகானந்தரின் படத்தை பார்த்தனர். ஆனால், அதைத் தொடர்ந்து பெண்களின் ஆபாசமான படங்களை பார்க்க ஆரம்பித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த நான் அங்கிருந்த மற்ற நிருபர்களிடம் கூற, ஒரு தொலைக்காட்சி நிருபர் அதை படம் பிடித்தார். இதையடுத்து சபாநாயகரின் பி.ஏவிடம் சென்று இந்த இரு பாஜக எம்எல்ஏக்களும் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருப்பதைக் கூறினேன். ஆனால், அதற்குப் பிறகும் அவர்கள் தொடர்ந்து அந்தப் படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர். பின்னர் சபாநாயகர் தலையிட்டு அந்த ஐ-பேடை அங்கிருந்து அகற்றச் செய்தார் என்றார்.
இது தொடர்பான செய்தி இன்று குஜராத் மீடியாக்களில் வெளியானது. இதையடுத்து இன்று இந்த விவகாரம் சட்டசபையில் வெடித்தது. பாஜக-காங்கிரஸ் எம்எல்ஏக்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து அவை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி கூறுகையில், பாஜக ஆளும் மாநிலங்களில் ஜனநாயகத்தின் கோவில்களான சட்டமன்றங்கள் அவமதிக்கப்பட்டு வருவது கவலை தருகிறது. இது தான் அவர்களது உண்மையான சுயரூபம் என்றார்.
No comments:
Post a Comment