கூடங்குளம்: கூடுதல் டிஜிபி ஜார்ஜ் தலைமையில் 10 மாவட்ட எஸ்.பிக்கள் மற்றும் பெருமளவில் ஆயுதப் போலீஸார் கூடங்குளத்தில் குவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை அதிரடியாக அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுவைச் சேர்ந்த 10 பேரை போலீஸார் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர். கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் மீது தமிழக காவல்துறை தற்போது தனது முதல் கட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளது. அதன் ஒரு கட்டமாக 10 பேரை போலீஸார் இன்று காலை கைது செய்தனர். இதனால் கூடங்குளம் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பதட்டமும் நிலவுகிறது.
கைது செய்யப்பட்டவர்களில் முக்கியமானவர் வக்கீல் சிவசுப்பிரமணியம். இவர் கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுவில் முக்கிய உறுப்பினர் ஆவார். போராட்டக் குழுவில் இடம் பெற்று முதல்வர் ஜெயலலிதாவை இரண்டு முறை இவர் சந்தித்துள்ளார். அதேபோல பிரதமரை சந்தித்த குழுவிலும் இடம் பெற்றிருந்தார்.
அதேபோல ராஜலிங்கம், ஜேம்ஸ் அன்னதுரை, கணேசன் ஆகியோர் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைவரையும் கைது செய்த போலீஸார் அவர்களை கூடங்குளத்திலிருந்து கொண்டு சென்றுள்ளனர். என்ன காரணத்திற்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது தெரிவிக்கப்படவில்லை. இந்த கைது நடவடிக்கை கூடங்குளத்தில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அசம்பாவிதங்களைத் தடுக்க போலீஸார் பல்வேறு முன்னெச்சரிக்கைகளை ஏற்கனவே எடுத்துள்ளனர்.
கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை பத்து மண்டலமாகப் பிரித்து ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு எஸ்.பி. தலைமையில் போலீஸாரைக் குவித்து வைத்துள்ளனர். ஐஜி ராஜேஷ் தாஸ் தலைமையில் போலீஸார் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். வஜ்ரா வாகனங்கள், ஆயுதப் படையினர், துப்பாக்கி ஏந்திய போலீஸார் என சகல விதத்திலும் தமிழக போலீஸார் பாதுகாப்புப் பணிகளை ஏற்படுத்தியுள்ளனர். மேலும் அணு மின் நிலையப் பகுதியில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment