Sunday, March 11, 2012

எடியூரப்பாவுக்கு மீண்டும் ஏமாற்றம்: முதல்வராக்க கட்காரி மறுப்பு !


பெங்களூர் : தன்மீது சுமத்தப்பட்டிருந்த சுரங்க மோசடி புகார் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் தன்னை முதல்வராக்க வேண்டுமென கோரிக்கை விடுத்த எடியூரப்பாவின் கோரிக்கையைப் பாஜக தலைவர் நிதின் கட்காரி நிராகரித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் முதல்வராக பதவியிலிருக்கும்போது சுரங்க மோசடியில் ஈடுபட்டதாக எடியூரப்பாமீது லோக்ஆயுக்தா அறிக்கை குற்றம் சுமத்தியது. இதனைத் தொடர்ந்து எடியூரப்பாவைப் பாஜக முதல்வர் பதவியிலிருந்து நீக்கியது.



எடியூரப்பா பதவியிழந்த பின்னர், அவர்மீது மேலும் 5 நிலமோசடி புகார்கள் பதிவாகின. இதில் ஒருவழக்கில் 24 நாட்கள் சிறையிலிருந்தார். மேலும் இரு வழக்குகளில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இரு வழக்குகளில் ஜாமீன் பெற்று விடுதலையானதும் தனக்கு மீண்டும் முதல்வர் பதவி தரவேண்டுமென பாஜக மேலிடத்துக்கு எடியூரப்பா நெருக்குதல் கொடுத்தார். ஒரு கட்டத்தில் இறுதி கெடுவும் விதித்தார். இருப்பினும் பாஜக தலைவர் கட்காரி அசைந்து கொடுக்கவில்லை.

இந்நிலையில், எடியூரப்பா பதவி விலக காரணமாக இருந்த சுரங்க மோசடி தொடர்பான புகாரை பெங்களூர் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதை தொடர்ந்து எடியூரப்பா மீண்டும் முதல்வர் பதவி கேட்டு பாஜக மேலிடத்துக்கு 24 மணி நேர கெடு விதித்தார்.

எடியூரப்பாவின் ஆதரவாளர்களான பசவராஜ் பொம்மை, முருகேஷ் ஆர்.நிரானி, சி.எம்.உதாசி, உமேஷ் வி.கட்டி ஆகியோர் நேற்று கோவா சென்று, கோவா முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக வந்திருந்த நிதின்கட்கரியை சந்தித்து எடியூரப்பாவை மீண்டும் முதல்வராக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் அவர்களின் கோரிக்கையை நிதின்கட்காரி மறுத்துவிட்டார். இதனைத் தொடர்ந்து பாஜக மூத்த தலைவர் அத்வானியைச் சந்திக்க முயற்சி செய்தனர். ஆனால், அத்வானியைச் சந்திக்க முடியாமல் அவர்கள் ஏமாற்றத்துடன் கர்நாடகா திரும்பினர்.

No comments:

Post a Comment