Tuesday, March 20, 2012

மக்கள் புடை சூழ மாதா கோவிலில் உதயக்குமார்- கைது செய்யத் தவிக்கும் போலீஸ்!


Udayakumarஇடிந்தகரை: கூடங்குளம் அணு மின் நிலையப் போராட்டக் குழுத் தலைவர் உதயக்குமார் ஆயிரக்கணக்கான மக்கள் புடை சூழ இடிந்தகரையில் உள்ள புனித லூர்துமாதா சர்ச் வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்து வருவதால், மக்கள் தடுப்பை மீறிச் சென்று அவரைக் கைது செய்ய முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். இருப்பினும் எந்த நேரத்திலும் அவரைக் கைது செய்வோம் என்று தென் மண்டல ஐஜி ராஜேஷ் தாஸ் கூறியுள்ளார்.


முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தின்போது தேனி மாவட்ட மக்கள் லட்சக்கணக்கில் அலை அலையாக திரண்டு சென்று போராடிய போராட்டத்தை தடியடி உள்ளிட்டவை மூலம் தடுத்தப் புகழுக்குரியவர் ராஜேஷ் தாஸ் என்பதால் உதயக்குமாரை எந்த ரூபத்தில் இவர் கைது செய்யப்போகிறாரோ என்ற பதைபதைப்பும், பரபரப்பும் கூடங்குளம், இடிந்தகரை பகுதிகளில் நிலவுகிறது.


கூடங்குளம் அணு மின் நிலையம் குறித்த தமிழக அரசின் நிலைப்பாடு நேற்று வெட்ட வெளிச்சமானது. இதையடுத்து கூடங்குளம் போராட்டக் குழுவினரைக் கைது செய்ய ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து இடிந்தகரை விரைந்த உதயக்குமார், அங்குள்ள லூர்து மாதா சர்ச் வளாகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுடன் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார்.

தொடர்ந்து அங்கேயே தங்கியிருக்கும் அவர் இன்று 2வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரைக் கைது செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர். ஆனால் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உதயக்குமார் அமர்ந்திருப்பதால் மக்கள் தடுப்பை மீறிச் சென்றால் ஏதாவது பிரச்சினையாகி விடுமோ என்று போலீஸார் அஞ்சுகின்றனர். இதனால் மக்களுடன் பேச்சுவார்த்தையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். உதயக்குமாரைக் கைது செய்ய ஒத்துழைப்பு தருமாறு அவர்கள் கோரி வருகின்றனர்.

இதுகுறித்து ஐஜி ராஜேஷ் தாஸ் கூறுகையில், உதயக்குமாரை போலீஸாரிடம் ஒப்படைக்கும்படி மக்களை கேட்டு வருகிறோம். இதற்காக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் ஒத்துழைப்புடன் உதயக்குமாரைக் கைது செய்வோம். எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படுவார் என்றார். கைது செய்யப்படவுள்ள உதயக்குமார் மீது ஏற்கனவே போலீஸார் 55 வழக்குகளைப் போட்டுள்ளனர். அவர் மீது மட்டுமல்லாமல், கூடங்குளம் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீதும் 250க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன என்பது நினைவிருக்கலாம். உதயக்குமாரை கைது செய்த பின்னர் அவரை டெல்லிக்குக் கொண்டு போகவுள்ளதாகவும் ஒரு தகவல் அடிபடுகிறது.

No comments:

Post a Comment