Friday, February 17, 2012

அமெரிக்க உளவு விமானம் "RQ-170" ஈரான் அதிகாரிகளிடம் சிக்கியது!


பிப்ரவரி :17, ஈரானில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க உளவு விமானமொன்றினை ஈரான் இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர். அதி உயர் தொழில்நுட்பம் கொண்ட நவீன RQ-170 என்ற விமானமே இவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. மேலும் இந்த விமானத்தை கைப்பற்றியுள்ளதாகவும் ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விமானம் தம்முடையது தான் என்ற உண்மையை அமெரிக்க அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர். சி.ஐ.ஏ உளவு விமானத்தை எப்படி ஈரான் கைப்பற்றியது என்பது இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை. இந்த விமானம் வெளிநாடுகளை உளவு பார்ப்பதற்காக சி.ஐ.ஏ.வால் இரகசியமாக உபயோகிக்கப்பட்ட விமானம் ஆகும்.
 பாகிஸ்தானில் பின்லேடன் மறைந்திருந்த வீட்டை வானில் இருந்து மாதக் கணக்கில் உளவு பார்த்து தகவல் கொடுத்த விமானமும் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. சி.ஐ.ஏ.க்கு இது மிகப்பெரிய இழப்பு என்பதை சி.ஐ.ஏ அதிகாரிகளே ஒப்புக்கொள்கின்றனர். RQ-170 விமானம் சி.ஐ.ஏ.-க்கு மிக முக்கியமானது என்ற வகையில் அதன் இருப்பு பற்றியே சி.ஐ.ஏ. ரகசியம் காத்து வருகிறது.
 நீண்டகாலமாக இந்த விமானத்தின் ஒளிப்படங்கள்கூட வெளியே செல்லாதபடி பார்த்துக் கொண்டது. RQ-170 தமது நாட்டுக்கு மேலாகப் பறந்து உளவு பார்த்தபோது கைப்பற்றப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது. விமானம் தம்முடையதுதான் என்பதை ஒப்புக்கொண்டுள்ள அமெரிக்க அதிகாரிகள், விமானம் ஈரானிய வான்பரப்பில் பறந்ததா என்பது தொடர்பாக கருத்துத் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
 தமது நாட்டு அணு உலைகளை உளவு பார்க்கவே விமானம் பறந்ததாக ஈரான் கூறுகின்றது. இந்த விமானத்தை ஈரான் எப்படிக் கண்டுபிடித்தது என்பதும், பறந்து கொண்டிருந்த விமானத்தை எப்படி தரைக்கு கொண்டு வந்தது என்பதும் இந்த நிமிடம் வரை மர்மமாகவே உள்ளது.

No comments:

Post a Comment