Friday, February 24, 2012

ஹலா பிப்ரவரி - பிப்ரவரி திருவிழா

வருடந்தோறும் பிப்ரவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் குவைத் திருவிழா கோலம் பூணுகிறது. இந்த இரட்டை நாட்களை கொண்டாட முதன்மை காரணம் பிப்ரவரி 25-யை தேசிய தினமாகவும், பிப்ரவரி 26-யை சுதந்திர நாளாகவும் குவைத் அரசாங்கம் அனுஷ்டிப்பதே ஆகும். பிரிட்டிஷாரின் காலனியாதிக்கத்தில் இருந்து 1961-இல் விடுபட்ட பிறகு வருடத்தில் ஒரு நாளை மட்டுமே கொண்டாடி வந்த குவைத் மக்கள், மறைந்த ஈராக் அதிபர் சதாம் ஹுசைனின் ஆக்கிரமிப்பை சர்வதேச சக்திகளின் ஆதரவுடன் அகற்றிய பிறகு இரட்டை தின கொண்டாட்டமாக பிப்ரவரி 25 மற்றும் பிப்ரவரி 26 தேதிகளில் "ஹலா பிப்ரவரி" என்ற பெயரில் 1999-ம் ஆண்டு அறிமுகபடுத்தபட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆண்டு திருவிழாவாக நடத்தி அமர்களபடுத்தி வருகிறது. மேலும் இவ்விழாவுக்கான ஏற்பாடுகள் ஒரு மாத காலத்திற்கு முன்பாக திட்டமிடப்பட்டு கோலாகலபடுதபடுகிறது. 


இந்த வருடமும் பிப்ரவரி திருவிழாவுக்கான ஏற்பாடுகள் பிப்ரவரி 2 அன்று  தொடங்கப்பட்டு  அதை கொண்டாட தயாராகி கொண்டிருக்கிறார்கள் குவைத் மக்கள். இதன் ஒரு பகுதியாக ஓங்கி உயர்ந்த தனியார் மற்றும் அரசு கவர்னரேட், முனிசிபாலிடி கட்டடங்கள் குவைதின் மூவர்ண தேசிய கொடியை மின்விளக்குகளால் கம்பீரமாக ஜொலித்து கொண்டிருக்க செய்கின்றன.



விற்பனை நிலையங்களில் சலுகைகளும், அரசு சாரா நிறுவனங்களின் அன்பளிப்புகளும், பந்தயங்களும், பரிசு கூப்பன்களும், கவிதை போட்டிகளும் மாதத்தின் தொடக்கதில் இருந்தே பிரபல படுத்த தொடங்கி விடுகின்றன. பத்திரிக்கைகள் இவ்விழாவுக்கென்று தனி அட்டவணைகளும், அழைப்புகளையும் பிரசுரிக்க தொடங்கி விடுகின்றன. காட்சி ஊடகங்களோ எல்லா விற்பனை சாலைகளையும் இரவை பகலாக்கி நிகழ்சிகளை வழங்க தொடங்கி விடுகின்றன. 


இவ்விழா வருடந்தோறும் கொண்டாடப்பட்டாலும், சென்ற 2011-ம் ஆண்டு 50வது தேசிய தினமாகவும் 20வது சுதந்திர தினமாகவும் 5ஆம் ஆண்டு இந்த மன்னரின் ஆட்சி பூர்த்தியடைந்த தினமாகவும் சேர்த்து ஒரு முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. "குவைத் அவளை நேசிப்பவர்களுக்காக " (Kuwait for her Lovers) என்ற பிரகடனத்துடன் கொண்டாடபட்ட இம்முப்பெரும் விழாவில் குவைத் மன்னர் ஒவ்வொரு குடிமகன்களுக்கும் ஆயிரக்கணக்கான தினாரை அன்பளிப்பாக கொடுத்து ஒவ்வொருவரும் ஆத்மார்த்தமாக கொண்டாட வழிவகுத்தது. உலகின் மிக நீளமான தேசிய கொடியை மாணவர்கள் வடிவமைத்தனர். 


வளைகுடா தலைவர்கள் மட்டுமே பங்கேற்று வந்த இவ்விழா கடந்த ஆண்டின் போது சர்வதேச தலைவர்களின் வருகையும், பங்களிப்பும் சர்வதேச கவனத்தை ஈர்த்த விசயமாக இருந்தன. இந்த அன்பளிப்புகளும், குதூகலங்களும் துநீசியாவில் தொடங்கிய அரபு புரட்சியையும், எகிப்தில் நடந்த கிளர்ச்சியையும் விட்டு குவைத் மக்களை சற்றே திசை திருப்பி விட்டனவோ என்ற எண்ணம் கொள்ள செய்தது. இவ்வருட திருவிழாவை கொண்டாட இருக்கும் வேளையில் குவைத் தேசதிற்குள்ளும், சர்வதேச அரங்கிலும் ஏற்பட்டு விட்ட பல மாற்றங்களை பற்றி சுருக்கமாக காண்பது அவசியமாகிறது. 


துநீசியாவை தொடர்ந்து புரட்சி தீயின் வேகமும், வீரியமும் எகிப்து அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரகை வெளியேற்றியது. அதை தொடர்ந்து நடைபெற்ற பொதுதேர்ததில் இஹ்வான்களின் "பிரீடோம் அண்ட் ஜஸ்டிஸ் பார்ட்டி"  பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியது. லிபியாவில் கடாபி கொல்லப்பட்டதும், சிரியாவில் தொடர்ந்து புரட்சி நடைபெற்றும் வருகிறது. குவைத் மற்றும் விதிவிலக்கா என்ன? 


இங்கும் பிதுன் என்றழைக்கப்படும் பழங்குடியின மக்கள் தங்களுக்கு குடியுரிமை கோரி போராட்டங்கள் நடத்தினர், மேலும் எதிர்கட்சியினர் பிரதமர் மீது ஊழல் கரை படிந்திருப்பதாக கூறி அவரை பதவி விலக கோரி போராட்டங்கள் நடத்தி அதில் வெற்றியும் பெற்றனர். அதை தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் எதிர்கட்சியினர் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றினர்.இதில் பெரும்பான்மையினர் புதுமுகங்கள் பாராளுமன்றத்திற்கு. அதனால் இவ்வருட திருவிழா ஒரு வித்தியாசமான அனுபவமாகவே அமையும் என்பதில் மாற்று கருத்து இருப்பதற்கு இடமில்லை.


மாற்றங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் குவைத் மக்களுக்கு இவ்வருட திருவிழா மூலம் மாற்றத்திற்கான முன்னேற்பாடுகளை ஆட்சியாளர்கள் எடுதுவைப்பர்கள் என்று எதிர்பார்ப்புகளுக்கும் பஞ்சமிருக்காது. விடுமுறையை கொண்டாடும் வெளிநாடவருக்கோ கொண்டாடுவதற்காகவே விடுமுறை கிடைப்பதால் அவர்களும் இத்திருவிழாவை குவைத் மக்களோடு இணைந்தும், மகிழ்ச்சியோடும் கொண்டடுவார்கள். நாமும் அவர்களோடு சேர்ந்து ஹலா பிப்ரவரியை வரவேற்போம். 
சிக்கந்தர் பாஷா 

1 comment:

Anonymous said...

Post Hala February Update: 118 cases of fire-accidents, 150 million Dinars spent, 166 traffic accidents happened - Hala February, 2012.

Post a Comment