Tuesday, February 28, 2012

சங்கரன்கோவிலில் அமைச்சர்கள்: காத்து வாங்கும் தலைமைச் செயலகம்


சென்னை: அமைச்சர்கள் அனைவரும் இடைத்தேர்தல் பணி செய்ய சங்கரன்கோவிலுக்கு சென்றுள்ளதால் தலைமைச் செயலகம் வெறிச்சோடி காணப்படுகிறது. சங்கரன்கோவிலில் வரும் மார்ச் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதையொட்டி தேர்தல் பணி செய்ய முதல்வர் ஜெயலலிதா தனது அமைச்சரவையில் உள்ள 34 பேரையும் சங்கரன்கோவில் அனுப்பியுள்ளார். இதனால் தலமைச் செயலகமே சங்கரன்கோவிலுக்கு மாறிவிட்டது போன்று உள்ளது. ஆனால் சென்னையில் உள்ள தலைமைச் செயலகம் அமைச்சர்கள் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.



அமைச்சர்கள் 34 பேரும் தலைமைச் செயலகத்தில் இருந்தால் அவர்களைப் பார்க்க அதிகாரிகள், கட்சிக்காரர்கள், பொது மக்கள் என பலரும் வருவார்கள். அதனால் தலைமைச் செயலகம் எப்பொழுது பார்த்தாலும் கூட்டமாக இருக்கும். தற்போது முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அமைச்சர்கள் மட்டும் சென்னைக்கு வந்து ஓரிரு நாட்கள் இருந்துவிட்டு சங்கரன்கோவிலுக்கு சென்றுவிடுகின்றனர். மற்ற அமைச்சர்கள் சங்கரன்கோவிலிலேயே முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். 



அமைச்சர்கள் இல்லாததால் அவர்களது அறைகள் காலியாக உள்ளன. அவர்களைப் பார்க்க வரும் கூட்டமும் தற்போது வராததால் தலைமைச் செயலகம் அமைதியாக உள்ளது. இந்நிலையில் அமைச்சர்களுக்கு வரும் கோப்புகள் தேங்கி வருகின்றது. முக்கிய கோப்புகள் மட்டுமே அமைச்சர்களிடம் கையெழுத்து வாங்க சங்கரன்கோவிலுக்கே அனுப்பி வைக்கப்படுகிறது. 



மார்ச் மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருப்பதால் தங்களது துறைக்கான மானியக் கோரிக்கையை அமைச்சர்கள் தயாரிக்க வேண்டியுள்ளது. ஆனால் அவர்கள் ஊரில் இல்லாததால் இது தொடர்பான ஆய்வுக் கூட்டங்கள் நடக்கவில்லை. தேர்தல் முடியும் வரை இந்த நிலை தான் தொடரும். இப்படி அமைச்சர்கள் கூண்டோடு சங்கரன்கோவிலில் முகாமிடாமல் சுழற்சி முறையில் சென்றால் பட்ஜெட் பணிகள் பாதிக்காது என்பது அரசு அதிகாரிகளின் கருத்து. 



அதிமுக வேட்பாளர் முத்துசெல்வி அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் புடை சூழச் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். எந்த தேர்தலுக்காகவும் அமைச்சரவையே அந்த தொகுதியில் முகாமிட்டு பிரச்சாரம் செய்ததில்லை என்று சில அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன. 

No comments:

Post a Comment