Wednesday, February 15, 2012

ஹரியானாவில் லஞ்சம் பெற்ற நீதிபதி கைது !


ஹரியானாவில் லஞ்சம் பெற்ற நீதிபதி கைதுஹரியானா மாநிலத்தில் மகேந்திரகர் என்ற பகுதியில் துணை-கோட்ட நீதிபதியாக (Sub-Divisional Magistrate) சத்பீர் சிங் ஜங்கு என்பவர் பதவி வகிக்கிறார். இவரது நீதிமன்ற உதவியாளராக இருக்கும் தரம்வீர் என்பவர் ராஜஸ்தான் - ஹரியானா சாலையில் வரும் வாகனங்களை நிறுத்தி டிரைவர்களிடம் லஞ்சம் கேட்டு வந்தார். உடனடியாக லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் நீதிபதி சத்பீர்சிங் கையெழுத்திட்ட சலானை கொடுத்து விடுவதாகவும், இதற்காக இவர் நீதிபதியின் அலுவலக வாகனத்தை உபயோகித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து பிவானி மாவட்டத்தை சேர்ந்த பர்தீப் என்பவர் மாநில லஞ்ச ஊழல் கண்காணிப்பு துறையிடம் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில் தனது லாரியில் ராஜஸ்தானில் இருந்து ஹரியானாவுக்கு வந்துகொண்டிருந்த போது தரம்வீர் ரூ.7000 லஞ்சம் கேட்டு தன்னை துன்புறுத்தியதாகவும், மேலும் இந்த தொகையை வழியில் இருக்கும் பாலத்தில் நிற்கும் ராஜ்குமார் என்பவரிடம் கொடுக்க வேண்டும் என்று தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் மாநகர நீதிபதி சுர்ஜித் சிங் தலைமையில் கண்காணிப்பு துறை அதிகாரிகளும் அவருடன் சம்பவ இடத்துக்கு சென்றனர். பர்தீப்பிடம் ஒரு தொகையைக் கொடுத்து ராஜ்குமாரிடம் கொடுக்கும்படி கூறினர். அதன்படி பர்தீப் கொடுத்த தொகையை ராஜ்குமார் பெற்றபோது, மறைந்திருந்த அதிகாரிகள் ராஜ்குமாரை கையும் களவுமாக கைது செய்தனர்.

ராஜ்குமாரிடம் விசாரித்தபோது மகேந்திரகர் நீதிமன்ற நீதிபதியின் உதவியாளர் தரம்சிங்கிற்காக தான் இதைச் செய்ததாக கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, தரம்சிங் கைது செய்யப்பட்டு கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் தரம்சிங், தான் லஞ்சமாக பெறும் எல்லா பணத்தையும் நீதிபதி சத்பீர் சிங் வாங்கிக் கொள்வார் என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி சத்பீர் சிங் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கிற்காக அவர் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது.

No comments:

Post a Comment