காஸ்ஸா:இஸ்ரேல் மருத்துவமனையில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடரும் ஃபலஸ்தீன் மனித உரிமை ஆர்வலர் காதர் அத்னானின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது. சோசியல் நெட்வர்க் இணையதளங்களில் அத்னானுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் தங்களது கருத்துக்களை பதிவுச் செய்துள்ளனர்.
அத்னானை உடனடியாக விசாரணை செய்யவோ, விடுதலைச் செய்யவோ வேண்டும் என சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேசனல் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் கோரிக்கை விடுத்திருந்தது.
கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி அத்னானை, அவரது வீட்டில் வைத்து இஸ்ரேலிய போலீஸ் கைது செய்தது. கடந்த மாதம் 10-ஆம் தேதி இஸ்ரேலிய ராணுவ நீதிமன்றம் அத்னானை 4 மாதம் காவலில் வைக்க உத்தரவிட்டது. மே 8-ஆம் தேதி வரை இக்காவல் நீடிக்கும். ஆனால், இஸ்ரேல் அத்னானின் காவலை காலவரையற்று நீட்டிக்கொண்டே செல்ல வாய்ப்புள்ளது என ஆம்னஸ்டி கூறுகிறது.
மருத்துவமனை படுக்கையில் ஆயுதம் ஏந்திய இஸ்ரேலிய படைவீரர்கள் மத்தியில் படுத்துள்ளார் அத்னான். கடந்த 58 தினங்களாக அத்னான் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அத்னானுக்கு மருத்துவமனையில் போதிய சிகிட்சை அளிக்கப்படவில்லை என அத்னானை சந்தித்த பிறகு அவரது மனைவி குற்றம் சாட்டியுள்ளார். அவரது உடல்நலம் மோசமடைந்துள்ளது. அத்னான் தண்ணீர் கேட்டபொழுது மருத்துவர்கள் தண்ணீரை அளிக்காமல் அவரை கேலிச் செய்துள்ளனர் என அத்னானின் மனைவி கூறுகிறார்.
சிறைக்கு சென்ற பிறகு அத்னானின் உடல் எடை 27 கிலோ குறைந்துள்ளது. அத்னானுக்கு ஒற்றுமையை உணர்த்தும் விதமாக அவருடைய தந்தை மூஸா நேற்று முன் தினம் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கியுள்ளார்.
No comments:
Post a Comment