Tuesday, February 21, 2012

டில்லியில் பாகிஸ்தான் உளவாளி.. “தமாஷ் பண்ணாதிங்க சாப்!”


இந்தியாவில் 20 வருடங்களாக வாழ்ந்துவரும் நிலையில், பாகிஸ்தானிய உளவாளி என்ற குற்றச்சாட்டில் 39 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அறிவித்துள்ளது டில்லி போலீஸ். (அப்படியானால் இவர் 19 வயதில் இந்தியாவுக்கு வந்திருக்க வேண்டும்) இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான ரகசிய ஆவணங்கள் இவரிடம் இருந்து கைப்பற்றப் பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ளவரின் பெயர், காம்ரான் அக்பர். கடந்த 1992-ல் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்த அக்பர், கடந்த 20 ஆண்டுகளாக கொல்கத்தாவில் வசித்து வருகிறார். 2009-ல் இந்தியப் பெண் ஒருவரையும் மணந்து கொண்டார். டில்லி போலீஸ் வைத்திருக்கும் தகவல்களின்படி, அக்பர் இந்தியாவுக்கு வந்தது, ஒரு பாகிஸ்தானி பாஸ்போர்ட்டில். தரை மார்க்கமாக அத்தாரி எல்லைப் பகுதியைக் கடந்து இந்தியாவுக்குள் வந்த இவர், கொல்கத்தாவில் தமது உறவினர் ஒருவருடன் தங்கியிருக்கிறார். சுமார் 4 ஆண்டுகள் இந்தியாவில் வசித்த நிலையில், ஆசிஃப் ஹொசேன் என்ற பெயரில் இந்திய பாஸ்போர்ட் ஒன்றுக்கு விண்ணப்பித்தார். எதுவித சிக்கலும் இல்லாமல் பாஸ்போர்ட்டையும் பெற்றிருக்கிறார்.


1997-ம் ஆண்டு, அந்த இந்திய பாஸ்போர்ட்டுக்கு பாகிஸ்தானி விசா கேட்டு விண்ணப்பித்திருக்கிறார். பாகிஸ்தானி தூதரகம், 1 மாத சுற்றுலா விசா வழங்கியது. அதையடுத்து, ஒரு இந்தியராக பாகிஸ்தானுக்கு சென்றிருக்கிறார். அதன்பின்தான் கதை மாறுகிறது. பாகிஸ்தான் உளவுத்துறை அவரை அங்கே வைத்து வேலைக்கு அமர்த்தியது என்கிறது டில்லி போலீஸ். பாகிஸ்தானியரான இவர் இந்தியாவில் வசிப்பதாலும், இந்திய பாஸ்போர்ட் ஒன்றை வைத்திருப்பதாலும், இவரை சேர்த்துக் கொள்ள பாகிஸ்தானி உளவுத்துறை விரும்பியிருக்கலாம்.

அக்பரை வேலைக்கு அமர்த்தியது பாகிஸ்தானிய உளவுத்துறை ஐ.எஸ்.ஐ. அல்ல. அவர்களது ராணுவ உளவுத்துறை (MI – Military Intelligence) என்கிறது டில்லி போலீஸ்.புதிய வேலையுடன் இந்தியா திரும்பிய அக்பர், தொடர்ந்தும் கொல்கத்தாவில் வசித்து வந்தார். சமீபத்தில் பாகிஸ்தான் ராணுவ உளவுத்துறை இவருக்கு அஸைன்மென்ட் ஒன்றைக் கொடுத்தது. அதன்படி, டில்லிக்கு சென்று இந்திய பாதுகாப்பு துறையின் ரகசிய ஆவணம் ஒன்றைப் பெற்று, அதை பத்திரமாக பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அதன்படி டில்லி வந்து ஆவணத்தைப் பெற்றுக்கொண்டு, அதனுடன் கொல்கத்தா செல்ல புது டில்லி ரெயில்வே ஸ்டேஷன் சென்றபோதே அக்பர் கைது செய்யப்பட்டார் என்று தெரிவித்துள்ள டில்லி போலீஸ், அவர்வசம் இருந்த ரகசிய ஆவணத்தையும் கைப்பற்றி விட்டதாக கூறியிருக்கிறார் டில்லி போலீஸின் டி.சி.பி. (கிரைம் டிவிஷன்) அசோக் சந்த்.
இதோ, சில கேள்விகள்:
1) கல்கத்தாவில் வசிக்கும் அக்பர், இந்திய பாதுகாப்பு அமைச்சின் ரகசிய ஆவணத்தை டில்லியில் எப்படி பெற்றார்?
2) பாதுகாப்பு அமைச்சிலோ, ராணுவத்திலோ உள்ள யாராவது இந்த ஆவணத்தை கொடுத்தார்களா? அப்படியானால், அந்த நபர் தொடர்பான விபரங்கள் ஏன் வெளியாகவில்லை?
3) 1997-ல் இருந்து இப்போதுவரை 15 ஆண்டுகளாக அக்பர் இந்தியாவில் என்ன செய்து கொண்டிருந்தார்? ஆக்டிவ் உளவாளியா? ஸ்லீப்பிங் செல்லா? (அடித்துச் சொல்கிறோம்… எந்தவொரு MI-யிலும், நேரடி ராணுவ அனுபவமற்ற ஒரு வாக்-இன் ரெக்ரூட்டை, 15 வருடங்களாக ஸ்லீப்பிங் செல்லில் வைத்திருக்க மாட்டார்கள்)
4) இவரது கைகளில் இருந்தது ரகசிய ராணுவ ஆவணங்கள் (classified military documents) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் இது பெரிய விவகாரம். இந்திய ராணுவ உளவுத்துறை (DIA) அல்லது றோ இதில் தொடர்பு படாமல், டில்லி போலீஸ் கிரைம் டிவிஷன் இதை ஹான்டில் செய்கிறதா?
5) இந்த ஆவணங்களை ரிட்ரீவ் பண்ணுவது இவர்கள் சொல்வது போலவே, பாகிஸ்தானி ராணுவ உளவுத்துறை ஆபரேஷன் என்று வைத்துக் கொள்வோம். எடுத்த ஆவணத்தை கையடக்க ஸ்கேனரில் ஸ்கேன் செய்து, உடனடியாகவே ஒரு வெளிநாட்டு சேர்வரின் எஃப்.டி.பி.யில் போட்டு அனுப்பிவிட முடியும். (இ-மெயில் ட்ராக் பண்ணலாம்) அப்படிச் செய்யாமல், கொல்கத்தாவில் இருந்து ஒருவரை டில்லி வரச்சொல்லி, அவரது கையில் ஆவணத்தை ஒரு கவரில் போட்டு கொடுத்து, கொல்கத்தா ரயிலைப் பிடிக்க அனுப்பி… தமாஷாக இல்லையா?
மொத்தத்தில், இவர்கள் நிஜமாக எதையோ பிடித்திருந்தால், அது நிச்சயமாக இவர்கள் வெளியே சொல்லும் ரயில்வே ஸ்டேஷன் கதை அல்ல.

No comments:

Post a Comment