தொலைக்காட்சி மற்றும் கம்யூட்டர்களில் அதிக நேரம் மூழ்கியிருக்கும் குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. எனவே குழந்தைகள் வெளியிடங்களுக்குச் சென்று விளையாடும் நேரத்தை அதிகரிக்கவேண்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தம் குறித்து இங்கிலாந்தின் பிரிஸ்டோல்ஸ் பல்கலைக்கழகத்தின் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் 4 முதல் 12 வயதுடைய 1486 குழந்தைகளிடம் இந்த ஆய்வினை மேற்கொண்டனர்.
அவர்களில் ஒரு பிரிவு குழந்தைகள் தொலைக்காட்சி, டிவிடி, வீடியோ கேம், கணினி போன்றவைகளை பார்க்கவைத்து கண்காணிக்கப்பட்டனர். மற்றொரு பிரிவு குழந்தைகளை வெளியிடங்களில் விளையாட வைத்தும், புத்தகம் படிக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். பின்னர் இந்த குழந்தைகளின் நிலை குறித்து அவர்களின் பெற்றோரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
இதில் மூன்று மணி நேரத்திற்கும் மேல் தொலைக்காட்சி, கம்யூட்டர் முன்பு அமர்ந்திருந்த குழந்தைகளின் சிந்தனை மற்றும் யோசிக்கும் திறன், பள்ளிகளில் சம மாணவர்களுடன் பழகும் தன்மை ஆகியவை குறைந்து காணப்பட்டதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். அவர்கள் ஒரு வித அழுத்தத்துடனே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதே சமயம் டி.வி., பார்க்காத குழந்தைகளின் செயல்திறன் அனைத்து விஷயங்களிலும் அதிகரித்து உள்ளதையும் கண்டறிந்தனர்.
குழந்தைகள் டி.வி மற்றும் கம்ப்யூட்டர்களை அதிகம் பார்ப்பதால் மனஅழுத்தம் நோய் அதிகம் உண்டாகிறது என ஆராய்ச்சியின் முடிவில் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்த ஆய்வு முடிவு இங்கிலாந்தில் வெளியாகும் குழந்தைகள் தொடர்பான இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு மன அழுத்தம்
தமிழ்நாட்டிலும் பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கு சென்று வந்த நேரம் தவிர அநேக நேரம் அவர்கள் தொலைக்காட்சியிலும், வீடியோ கேம் விளையாடுவதிலுமே பொழுதை கழிக்கின்றனர். அதனால் ஏற்படும் மன அழுத்தமே அவர்களை வன்முறையாளர்களாக மாற்றுவதாக உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே குழந்தைகளை அடிக்கடி பூங்காக்கள், விளையாட்டுக்கூடங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களை விளையாட விடலாம். நல்ல நீதி நெறி புத்தகங்களை படிக்க வலியுறுத்துவதன் மூலம் பெற்றோர்கள் அவர்களை பண்புள்ளவர்களாக்கலாம் என்றும் உளவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment