Friday, February 17, 2012

தில்லி பாட்லா ஹவுஸ் பகுதியில் நள்ளிரவு சோதனை, போலீஸ் மக்கள் மோதலால் பரபரப்பு !


சமீபத்திய உத்தரபிரதேச தேர்தல்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பட்லா ஹவுஸ் என்கெளண்டரை நினைவுபடுத்தும் விதத்தில் புது தில்லி ஜாமியா நகரில் உள்ள பாட்லா ஹவுஸ் பகுதியில் காவல்துறையின் நள்ளிரவு சோதனையால் வெகுண்டெழுந்த மக்கள் காவல்துறையுடன் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உள்ளூர் காவல்துறை வராமல் தெற்கு தில்லியின் பங்களாதேஷ் பிரிவை சார்ந்த காவல்துறையினர் வியாழன் அதிகாலை 1.30க்கு ஜாமியா நகரில் உள் நுழைந்து சோதனை நடத்தினர். தில்லி குண்டு வெடிப்பு சம்பந்தமாக ஈரானிய இளைஞர்களை பிடிக்க காவல்துறை வந்திருப்பதாக பரவிய செய்தியால் உள்ளூர் மக்கள் 500 நபர்கள் வெகுண்டெழுந்து காவல்துறையுடன் மோதலில் ஈடுபட்டனர்.


ஒரு உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் மூன்று கான்ஸ்டபிள்களை மக்கள் சுற்றி வளைத்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். பின்னார் ஜாமியா நகரை சார்ந்த உள்ளூர் காவல்துறையினர் காற்றில் துப்பாகியால் சுட்டு அவர்களை மீட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சோதனைக்கு வந்த 6 காவல்துறையினர் இடைக்கால நீக்கம் செய்யப்பட்டதோடு இது குறித்த முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறிய கூடுதல் கமிஷனர் அஜய் சவுத்ரி அசாதரணமான நேரத்தில் சோதனைக்கு வந்திருக்க கூடாது என்றும் குறைந்த பட்சம் உள்ளூர் காவல்துறைக்கு தகவல் கொடுத்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ஜாமியா மில்லி இஸ்லாமிய பல்கலைகழக பேராசிரியர் ஒருவர் ‘”மும்பை தீவிரவாத எதிர்ப்பு படையால் கடந்த இரண்டு மாதங்களில் அப்பாவிகள் சிலர் தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டதால் , காக்கி எனும் பெயரே இங்குள்ள மக்களின் மனத்தில் பயத்தை உண்டாக்குகிறது” என்றார். ” சிறப்பு காவல்படையினர் என்று சொல்லி கொண்டு சிலர் மக்களின் வீடுகளில் கதவை தட்டி விசாரணைக்கு கூப்பிட்டனர். மக்கள் தங்கள் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்டை காட்டி காவல்துறையினரின் அடையாள அட்டையை கேட்டதற்கு காவல்துறையினர் மறுத்ததாலேயே நிலைமை மோசமானது “ என்று சம்பவத்தை நேரில் பார்த்த ஹாமித் அலி எனும் சமூக சேவகர் கூறினார்.

விசாரணையில் பிடிபட்ட யாருக்கும் தில்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு இல்லை என்று விடுவிக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment