பெரம்பூர்: கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பெட்டிகளை உடைத்து 2 போலீசாரின் சம்பளப் பணம் மற்றும் அடையாள அட்டைகளை திருடிச் சென்றுள்ளனர். கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீசார் ஓய்வு எடுக்க ஓய்வு அறை ஒன்று உள்ளது. அந்த அறையில் சீருடையை வைப்பதற்காக ஒவ்வொருவருக்கும் ஒரு பெட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றிரவு 2 போலீசார் தங்களுடைய சம்பளப் பணம் மற்றும் சீருடையை அந்த பெட்டிகளில் வைத்து பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றனர்.
இன்று காலை பணிக்கு வந்த அவர்கள் பெட்டிகளைத் திறக்கப் போனபோது அவை உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஒரு பெட்டியில் ரூ.2,000 சம்பளப் பணம், ஐடி கார்டும் மற்றொரு பெட்டியில் ரூ.3,000 சம்பளப் பணமும், ஐடி கார்டும் திருடப்பட்டிருந்தது.
உடனே அந்த 2 போலீசாரும் இது குறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர். அவர்களது புகாரின்பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் வழக்குப் பதிவு செய்தார். துணை கமிஷனர் கார்த்திகேயன், உதவி கமிஷனர் கோவி.மனோகரன் ஆகியோர் கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு சென்று விசாரித்தனர். நேற்றிரவு பணியில் இருந்த போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்தனர். பணியில் இவ்வளவு அஜாக்கிரதையாக இருந்தால் மக்களை எப்படி பாதுகாப்பீர்கள் என்று கேட்டனர்.
No comments:
Post a Comment