Friday, February 24, 2012

முதல்வர் பதவி கேட்டு கட்காரியுடன் மல்லுக்கட்டும் எடியூரப்பா

பெங்களூர்: கர்நாடக முதல்வராக தம்மை மீண்டும் நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் எடியூரப்பா பெங்களூரில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நிதின் கட்காரியை இன்று காலை சந்தித்துப் பேசினார். தம்மை கர்நாடக முதல்வராக மீண்டும் நியமிப்பது குறித்து பிப்ரவரி 27-ந் தேதிக்குள் தீர்மானிக்க வேண்டும் என்று கட்சித் தலைமைக்கு எடியூரப்பா கெடு விதித்திருந்தார்.

இந்நிலையில் கட்சி நிகழ்ச்சிக்காக பெங்களூருவில் முகாமிட்டுள்ள நிதின் கட்காரியை தமது ஆதரவாளர்களுடன் நேரில் சென்று சந்தித்த அவர், தமது அரசியல் எதிர்காலம் குறித்து கட்சி தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். எந்த குற்றமுமே செய்யாமல் தாம் சிறையில் இருக்க நேரிட்டதையும் கட்காரியும் எடியூரப்பா இன்றைய சந்திப்பில் சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது.

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராகவோ அல்லது மாநில முதல்வராகவோ தம்மை நியமிக்க வேண்டும் என்பது எடியூரப்பாவின் கோரிக்கை. சட்டவிரோதமாக சுரங்கங்களுக்கு அனுமதி கொடுத்த சர்ச்சையில் 6 மாதங்களுக்கு முன்பு எடியூரப்பா முதலமைச்சர் பதவியிலிருந்து விலக நேரிட்டது. புதிய முதல்வராக சதானந்தா கவுடா நியமிக்கப்பட்டார்.

தற்போதைய புதிய சிக்கல் குறித்து கருத்து தெரிவித்த சதானந்தா கவுடா, தமது முதலமைச்சர் பதவிக்கு எந்த ஒரு ஆபத்தும் எவராலும் இல்லை என்றார்.

புதிய கட்சியா?

கட்சி மேலிடம் தமது கோரிக்கையை ஏற்கமறுத்தால் பாஜகவை மிரட்டும் வகையில் புதிய கட்சியை எடியூரப்பா தொடங்கக் கூடும் என்று கூறப்படுகிறது. இதற்காகவே திட்டமிட்டு இந்த காலக்கெடுவை எடியூரப்பா விடுத்துள்ளதாக கர்நாடக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment