கரூர்: கரூர் மாவட்டத்தில் நேர்மையாக பணியாற்றிய ஆர்.டி.ஓ. சாந்தி திடீர் என்று உசிலம்பட்டிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி, அமராவதி, குடனகாறு போன்ற நதிகளில் இருந்து மணல் திருடிய சமூக விரோதிகளையும், அதிகார வர்கத்துடன் கைகோர்த்துக் கொண்டு அரசு அதிகாரிகள் கண்களில் மண்ணை தூவிவிட்டு அரசின் முறையான அனுமதி இன்றி ஆற்று மணலை லாரி லாரியாக கடத்திய கும்பலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆர்.டி.ஓ.வாக பொறுப்பேற்ற சாந்தி ஒழித்துக் கட்டினார்.
இப்படி 50க்கும் மேற்பட்ட திருட்டு மணல் லாரிகளைப் பிடித்து அபராதம் விதித்து, மணல் கொளளையர்களை திக்குமுக்காட வைத்தார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள 112 டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயம் செய்த விலையை விட அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதை அறிந்து பல மதுபான கடைகளுக்கு தானே நேரில் சென்று ஆய்வு செய்து மேல் மட்ட அதிகாரிகளுக்கு செல்ல வேண்டிய பல லட்ச ரூபாய் மாமூலலை தடை செய்தார்.
கரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில், கடந்த பல வருடங்களாக வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களை பயன்படுத்தி கார்களுக்கு கேஸ் நிரப்பி வந்தது குறித்து அறிந்து அங்கு சென்று திடீர் சோதனை நடத்தி 3 கார்கள் மற்றும் 17 கேஸ் சிலிண்டர்கள், 3 மின் மோட்டார்களை அதிரடியாக பறிமுதல் செய்தார். கரூர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களை வணிக நிறுவனங்ளுக்கு பயன்படுத்தியதை அறிந்து அங்கிருந்த கடைகளில் இருந்த 6 கேஸ் சிலிண்டர்களையும் பறிமுதல் செய்தார்.
அமராவதி ஆற்றில் பெரிய ஆண்டாங்கோவில் பகுதியில் அரசு அனுமதியின்றி 6 ஹெச்.பி. மோட்டார் மூலம் 3 லாரிகளில் தண்ணீர் திருடுவது தெரிய வந்ததை அடுத்து அந்த மோட்டார்களையும், லாரிகளையும் பறிமுதல் செய்தார்.
இப்படி சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை அடையாளம் கண்டு குற்றம் செய்தவர்கள் மீது தயவு தாட்சன்யம் இன்றி நடவடிக்கை எடுத்து வந்தார். இந்த அதிரடி நடவடிக்கைகளால் பெரிய பெரிய தொழில் அதிபர்களும், ஆளும் கட்சியைச் சேர்ந்த மிக முக்கிய பதவியில் உள்ளவர்களும் பெரும் நெருக்கடியை சந்தித்தனர்.
இதனால் ஆளும் கட்சி புள்ளிகளுக்கு தொல்லை தரக்கூடாது என மாவட்டத்தை நிர்வகிக்கும் ஒரு அதிகாரி மூலம் அறிவுரை வழங்கப்பட்டதாம். ஆனால் சாந்தி தனது அதிரடி நடவடிக்கையை நிறுத்தவில்லையாம். இதையடுத்து அவர் கரூரில் இருந்து மதுரை மாவட்டம், உசிலம்பட்டிக்கு அதிரடியாக மாற்றப்பட்டார்.
இதை அறிந்து கொதித்துப் போன சமூக சேவகர்களும், பொது மக்களும் சாந்தியை மாற்றக் கூடாது என தமிழக அரசுக்கு மனு மேல் மனு அனுப்பி வருகிறார்கள்.
No comments:
Post a Comment