Monday, April 23, 2012

தமிழகத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடங்கியது: 80 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறை!


Censusசென்னை: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு இன்று தொடங்கியது. இந்த கணக்கெடுப்பு 40 நாட்கள் நடைபெற உள்ளது. கிட்டத்தட்ட 80 வருடங்களுக்குப் பின் நாட்டில் இந்த சாதிவாரி சென்ஸஸ் நடக்கிறது.
சமூக, பொருளாதார மற்றும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்துத் தரப்பு மக்களின் பொருளாதார நிலை, அவர்கள் வசிக்கும் வீடுகள், வேலை, வருமானம், வெளிமாநிலத்தவர்கள் குறித்த விவரம், மாற்றுத் திறனாளிகள், வீடு இல்லாத நபர்கள் குறித்த தகவல்களை சேகரிக்க இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

கடந்த 2010-ம் ஆண்டில் வீடுகள் குறித்த கணக்கெடுப்பு நடந்தது. 2011-ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. 2012-ம் ஆண்டில் சமூக, பொருளாதார மற்றும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

இது குறித்து தமிழக மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில்,

சென்னை நீங்கலாக தமிழ்நாடு முழுவதும் சாதி மற்றும் சமூக, பொருளாதார அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கியுள்ளது. சுமார் 3,000 பணியாளர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

வீடு வீடாக சென்று ஒவ்வொரு குடும்பத்தினரின் படிப்பு, பொருளாதார நிலை, வீட்டு வசதி மற்றும் சாதி உள்பட 32 கேள்விகள் கேட்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்வார்கள். ஜூன் மாத இறுதிக்குள் கணக்கெடுப்பு பணியை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. 

சென்னை நகரில் மே 1ம் தேதி முதல் கணக்கெடுப்பு பணி தொடங்க உள்ளது என்றார். 

நாட்டில் கடைசியாக சுதந்திரத்துக்கு முன் 1931ம் ஆண்டில் தான் நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடந்தது. அதன் பின்னர் இப்போது தான் நடக்கிறது.

No comments:

Post a Comment