Thursday, April 26, 2012

பெற்றோர்களின் வெற்றி

இன்றோடு எனது பரீட்சை முடிந்து விட்டது நான் இனிமேல் நன்றாக விளையாடலாம், வெளியூர்களுக்கு செல்லலாம், உறவினர்களை பார்க்கலாம் என்று மனதில் ஒரு கற்பனை கோட்டையை கட்டிக் கொண்டு பரீட்சை முடித்து கோடை விடுமுறையை கொண்டாட வீட்டிற்க்கு வரும் குழந்தைகளுக்கு ஒரு அதிர்ச்சி "இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வேண்டும் அதனால் நாளை முதல் அடுத்த வகுப்புக்கு செல்ல வேண்டும்" என்ற தன் பெற்றோரின் அன்பான உத்தரவு. இதற்கு "இன்றைய இயந்திரதரமான வாழ்க்கையில் என்னுடைய பிள்ளைகள் எப்போதும் ஒரு படி மேலே தான் இருக்க வேண்டும், எஞ்ஜினியராகவோ, டாக்டராகவோ தான் வர வேண்டும் அப்போது தான் அவனுடைய வாழ்க்கை பிரகாசமாக இருக்கும், அதற்கு தேவையான பயிற்சிகளை இப்போதிருந்தே எடுக்க வேண்டும்" என்ற கற்பனையான காரணங்களை சொல்லும் பெற்றோர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். 

போட்டிகள் நிறைந்து விட்ட இவ்வுலகில் பெற்றோர்களின் இது போன்ற தவிப்பும்,ஏக்கமும் ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்று தான். ஆனால் சிறுவயதில் குழந்தைகள் சுவரை பிடித்து எழுந்திருப்பதையும், தானாக நடை பயிலுவதையும் மறைந்திருந்து பார்க்கும் பெற்றோர்கள் வளரத் தொடங்குகிற அந்த குழந்தை தன்னுடைய வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமைகளை விட்டுக்கொடுக்க மறுப்பது தான் விடை தெரியாத வினாவாக உள்ளது. 


தங்களுடைய வாழ்க்கையில் நிறைய ஏற்றத்தாழ்வுகளை கண்டிருக்கலாம் அதை போல் தன்னுடைய பிள்ளைகளும் கஷ்டப்பட கூடாது என்ற எண்ணத்தில் தவறேதும் இல்லை என்றாலும் அவர்கள் வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்து கொள்ளும் வாய்ப்பை மறுக்கிறோம் என்ற உண்மையை எல்லா பெற்றோர்களும் புரிந்து கொள்ள வேண்டும். 


பண்டிகை காலங்களில் புற்றீசல் போல் முளைக்கும் வியாபார கடைகளை போல் கோடை விடுமுறையில் தட்டச்சு பயிற்சி, கணினி பயிற்சி, வாகன பயிற்சி போன்ற நிறைய வகுப்புகள் தொடங்கபடுகின்றன. ஆர்வமுள்ள குழந்தைகள் தங்களுக்கு பிடித்த வகுப்புகளில் சேர்ந்து தங்களுடைய திறமையை வளர்த்து கொள்வதில் தவறில்லை. மாறாக அந்த குழந்தைகள் மீது அதை திணிக்கும் போது அந்த குழந்தைகளை மனதளவில் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் கல்வியின் மீது வெறுப்பை உருவாக்கிக்கொள்வதர்க்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதில் நம்முடைய பெற்றோர்கள் மூலகாரணமாக இருப்பது வேதனையாக உள்ளது. 


இன்றைய தலைமுறை குழந்தைகள் தன்னம்பிக்கை இல்லாதவர்களாக, பொருளாதார நிலை பற்றிய அறிவு இல்லாதவர்களாக, குடும்ப சூழல் குறித்த போதிய தெளிவு இல்லாதவர்களாக தான் வளர்க்கிறார்கள். இதற்கெல்லாம் பெற்றோர்களும்,சமூகமும் தான் காரணமென்றாலும், பெற்றோர்கள் தான் முதன்மை காரணிகளாக இருப்பார்கள். இதை எல்லாம் களைவதற்கு இது போன்ற கோடை விடுமுறையை பயன்படுத்தலாம்.


மாறிவரும் சமூக சூழலில் குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வளர வெள்ளையனை வீரமுடன் எதிர்த்து போரிட்ட திப்புசுல்தான்,மருதநாயகம் போன்ற தியாகிகளின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கூறலாம். மேலும் உங்கள் குழந்தையின் திறமையை அறிந்து கொண்டு அதை சார்ந்த தகவல்களையும்,அந்த துறையில் வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும் அவ்வப்போது எடுத்து கூறுங்கள்.


"தோல்விகள்தான் வெற்றியின் படிக்கட்டுகள்", "தோல்வியில் இருந்து தான் வெற்றிக்கான பாடம் கற்க முடியும்" என்றும் எடுத்துக் கூறி உங்கள் குழந்தையின் மனதை இளமையிலேயே திடப்படுத்தி மனதளவில் குழந்தைகளை சமூக மாற்றத்தை சந்திப்பதற்கு தயார்படுத்தலாம்.


குழந்தைகள் தங்களுடைய விருப்பத்திற்கும், ஆற்றலுக்கும் ஏற்ற எதிர்காலத்தை தேர்ந்தெடுப்பதில் பெற்றோர்கள் உந்து சக்தியாக இருந்தால் இது தான் ஒரு பெற்றோராக நாம் வெற்றி பெற்றதற்கான அடையாளமாக இருக்கும்.    
முஹம்மது அபூபக்கர் 

1 comment:

Anonymous said...

very Costly Article

Post a Comment