டெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பான இறுதி அறிக்கை நாளை மறுநாள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக ஐவர் குழுவில் இடம் பெற்றுள்ள தமிழக பிரதிநிதி ஏ.ஆர். லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த மறுத்து வரும் கேரள அரசு, அணை பலவீனமாக இருப்பதாக கூறி புதிய அணை கட்ட முயற்சித்து வருகிறது.
இந்தப் பிரச்சனை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அணையின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்ய முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் 5 பேர் கொண்ட உயர் மட்ட குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது.
இந்தக் குழு, அணையை சோதனையிட்ட 8 வல்லுனர் குழுக்களின் அறிக்கைகளை ஆய்வு செய்து வந்தது. இந் நிலையில் இந்தக் குழுவின் இறுதி கட்ட ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன், கேரள அரசின் சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ், தொழில்நுட்ப நிபுணர்களான தத்தா, மேத்தா ஆகியோர் பங்கேற்றனர்.
சுமார் 4 மணி நேரம் நடந்த இக் கூட்டத்தில், முல்லைப் பெரியாறு அணையின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய அணை சுவரில் துளைகளிட்டும், அணையில் நீரின் அடியில் சென்று சேகரிக்கப்பட்ட பொருள்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அறிக்கைகளை அடிப்படையாக வைத்து இறுதி அறிக்கையைத் தயாரிக்கும் பணியைக் குழுவினர் தொடங்கினர்.
இக்கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பிரதிநிதி ஏ.ஆர். லட்சுமணன், ஐவர் குழுவின் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுவிட்டது. அந்தப் பணி முழுமையாக முடிந்துவிட்டது. இந்த அறிக்கையை நாளை மறுநாள் அதாவது 25ம் தேதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றார்.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக ஆய்வு நடத்த இந்தக் குழுவை 2010ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் நியமித்தது. இந்தக் குழுவின் நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் இம்மாதம் 30ம் தேதியுடன் முடிவடைகிறது.
No comments:
Post a Comment