Saturday, April 28, 2012

தெஹல்காவின் போலி ராணுவ பேர ஊழல் வழக்கு: பங்காரு லஷ்மணுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை!


Bangaru Laxmanடெல்லி: தெஹல்கா ஊடகம் அம்பலப்படுத்திய போலி ராணுவ பேர ஊழல் வழக்கில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் பங்காரு லஷ்மணுக்கு டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.
2001-ம் ஆண்டு பங்காரு லஷ்மண், பாரதிய ஜனதா கட்சித் தலைவராக இருந்தார். அப்போது அவரை அணுகிய தெஹல்கா ஊடக குழுவினர் தங்களது இங்கிலாந்தின் ஆயுத தளவாட தயாரிப்பு நிறுவன பிரதிநிதிகளாகக் கூறிக் கொண்டனர். இந்திய ராணுவத்துக்கு தளவடாங்களை தங்கள் நிறுவனத்திடம் இருந்து வாங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறி ரூ1 லட்சத்தை லஞ்சமாகக் கொடுத்தனர். இதனை பங்காரு லஷ்மண் பெற்றுக் கொள்ளுவதையும் அவருடன் பேசிய உரையாடல்களையும் பதிவு செய்து அம்பலப்படுத்தியது தெஹல்கா.

இதைத் தொடர்ந்து பங்காரு லஷ்மண் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய டெல்லி சிறப்பு நீதிமன்றம் பங்காரு லஷ்மணை குற்றவாளி என்று அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து நேற்றே கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவருக்கான தண்டனை இன்று வழங்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் பங்காரு லஷ்மண். அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் பொதுவாழ்வில் தூய்மையானவர் என்றும் அவர் தரப்பில் வாதிடப்பட்டது. சி.பி.ஐ. தரப்பிலோ அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிற்பகல் 2.30க்கு தீர்ப்பு வழங்குவதாகக் கூறியிருந்தார். 

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் பிற்பகலில் தீர்ப்பளித்த நீதிபதி பங்காரு லஷ்மணுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பங்காரு லஷ்மணுக்கு ரூ1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இத்தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக பங்காரு லஷ்மண் தரப்பு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment