சென்னை: முஸ்லீம் ஒருவரை அடுத்த ஜனாதிபதியாக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையிடம் திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளதாகத் தெரிகிறது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது பெண் ஒருவரை நிறுத்த வேண்டும் என்ற வலுவான கோரிக்கையை வைத்தார் கருணாநிதி. அவரது கருத்துக்கு ஆதரவு கூடியதையடுத்து பிரதீபா பாட்டீலை களமிறக்கியது காங்கிரஸ்.
இந் நிலையில் கருணாநிதியை நேற்று சென்னையில் சந்தித்துப் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.ஆண்டனி, அவரிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் திட்டம் குறித்து விவாதித்தார்.
அப்போது இப்போதைய துணை ஜனாதிபதி அன்சாரி, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, மக்களவை சபாநாயகர் மீரா குமார் ஆகியோரில் ஒருவரை ஜனாதிபதி பதவிக்கு நிறுத்தலாம் என சோனியா கருதுவதாக கருணாநிதியிடம் ஆண்டனி கூறினார்.
இதையடுத்து அடுத்த ஜனாதிபதியாக சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் வர வேண்டும், அந்த வகையில் அன்சாரியை நிறுத்தலாம் என்று கூறிய கருணாநிதி, அதே நேரத்தில் மற்ற கட்சிகளிடையே ஒருமித்த கருத்து உருவானால் பிரணாப் முகர்ஜியையும் ஆதரிக்கத் தயார் என்று கூறியதாகத் தெரிகிறது.
பிரணாப் முகர்ஜியை நிறுத்தினால் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மற்றும் இடதுசாரிகளின் ஆதரவும் கிடைத்துவிடும் என சோனியா கருதுகிறார். கடந்த ஜனாதிபதி தேர்தலிலேயே முகர்ஜியின் பெயரை இடதுசாரிகள் முன் வைத்தது நினைவுகூறத்தக்கது.
அதே நேரத்தில் அரசியல் சாராத ஒருவரையே ஜனாதிபதியாக்க வேண்டும் என்ற தேசியவாதி காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் கருத்தை சோனியா ஏற்கவில்லை என்று தெரிகிறது. இது குறித்து சரத் பவாரிடம் சோனியா ஏற்கனவே பேச்சு நடத்தியுள்ளார். அப்போது முஸ்லீம் அல்லது பிரணாப் என காங்கிரஸ் நிறுத்தும் வேட்பாளரை ஆதரிக்கத் தயார் என பவார் கூறிவிட்டதாகத் தெரிகிறது.
அதே போல மம்தாவிடமும் சோனியா ஒரு சுற்று பேச்சு நடத்திவிட்டார். அவர் பெங்காலியான பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தரத் தயாராக உள்ளதாகக் கூறியுள்ளார்,
மேலும் பிரணாப் முகர்ஜியையோ அல்லது ஒரு முஸ்லீமையோ நிறுத்தினால் பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், எந்தக் கூட்டணியிலும் இல்லாத முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், தேவ கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளம், ஒரிஸ்ஸா முதல்வரும் பிஜூ ஜனதா தளத் தலைவர் நவீன் பட்நாயக் மற்றும் இடதுசாரிகளின் ஆதரவைப் பெறுவதும் எளிதாகிவிடும் என்று சோனியா கருதுகிறார்.
இதன்மூலம் பாஜகவையும் அதிமுகவையும் தனிமைப்படுத்தி தனது வேட்பாளரை வெல்லச் செய்வது சாத்தியம் என்று சோனியா கருதுகிறார். இதற்கு கருணாநிதியையின் ஆதரவை காங்கிரஸ் பெற்றுவிட்டதாகவே தெரிகிறது.
காங்கிரசுக்கு தனிப்பட்ட மெஜாரிட்டி இல்லாததால் அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்ய கூட்டணிக் கட்சிகள் மற்றும் நடுநிலைக் கட்சிகளின் ஆதரவு அந்தக் கட்சிக்கு நிச்சயம் தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment