டெல்லி: கலைஞர் தொலைக்காட்சிக்கு ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திடம் இருந்து ரூ.233 கோடி பெறப்பட்டது குறித்து விசாரித்து வரும் அமலாக்கப் பிரிவு, இது குறித்து விளக்கம் அளிக்குமாறு திமுக எம்பி கனிமொழிக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடந்த காலத்தில், ஸ்பெக்ட்ரம் வழக்கின் குற்றவாளியான, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திடமிருந்து கலைஞர் டிவிக்கு முறைகேடாக ரூ. 200 கோடி பெறப்பட்டது. இதை கடன் என்கிறது திமுக, ஆனால், லஞ்சம் என்கிறது சிபிஐ.
இந்தப் பணத்தை வட்டியோடு சேர்த்து திருப்பித் தந்துவிட்டது திமுக. ஆனால், 2ஜி விவகாரம் பெரிதான பின்னர் தான், அதை கடன் மாதிரி காட்ட வட்டியோடு திருப்பித் தந்தது கலைஞர் தொலைக்காட்சி என்கிறது சிபிஐ.
இந்நிலையில் கலைஞர் தொலைக்காட்சியில் கனிமொழிக்கு 20 சதவீத பங்குகள் உள்ளதால், இந்த பணப் பரிவர்த்தனை தொடர்பாக வரும் 26ம் தேதி, டெல்லியில் உள்ள அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி கனிமொழி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
2008ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டிற்குள் இந்தப் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. இது குறித்து சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கப் பிரிவு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கனிமொழிக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. 26ம் தேதி கனிமொழி சார்பில் அவரது ஆடிட்டர் ஆஜராகி, இந்த வழக்கிற்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பிப்பார் என்று தெரிகிறது.
தற்போது நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடந்து வருவதால் கனிமொழி அதில் பங்கேற்று வருகிறார். அடுத்த மாதம் 3வது வாரத்தில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்த பிறகு கனிமொழியிடம் அமலாக்கப் பரிவு அதிகாரிகள் விசாரணை நடத்துவர் என்றும் தெரிகிறது.
இலங்கை விவகாரத்தில் தனித் தமிழ் ஈழம் வேண்டும், அதை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி மத்திய அரசுக்கு நெருக்கடி தர ஆரம்பித்துள்ள நிலையில், கனிமொழிக்கு அமலாக்கப் பிரிவிடமிருந்து சம்மன் வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment