நேற்று முன்தினம் 10 ரஷ்ய விஞ்ஞானிகள் கூடங்குளம் வந்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு கூடங்குளம் அணு உலையில் சிக்கல் இருப்பதையே காட்டுகிறது என்று அணு உலை எதிர்ப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக இந்த பகுதியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அணுமின் நிலையம் பேரிடர் மேலாண்மை பயிற்சி நடத்தும் விஷயத்தில் குறுக்குவழியைத்தான் கையாளுகிறது. இதற்காகத்தான் இந்த பகுதியில் உள்ள ஊராட்சி மன்றத் தலைவர்களை வரவழைத்து பேசியுள்ளனர்.
இத்தகு குறுக்குவழியை கைவிட்டு முறையான பேரிடர் மேலாண்மை பயிற்சி நடத்தப்பட வேண்டும். மேலும் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் அணுஉலையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அப்பொழுது உருவான கழிவுப்பொருட்கள் அகற்றப்படவில்லை. இதனை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக நாங்கள் கருதுகிறோம். அதனை சரி செய்வதற்கும், ஆய்வு செய்வதற்கும்தான் ரஷ்ய விஞ்ஞானிகள் வந்துள்ளதாக தெரியவருகிறது. என்றார்.
கூடங்குளம் அணுஉலை தொடர்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி இடிந்தகரையில் இன்று 178-வது நாளாக தொடர் உண்ணாவிரதம் நடைபெறுகிறது. இதற்கிடையே கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி இடிந்தகரையில் ஆந்திராவை சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் 72 மணிநேர தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் விஜயவாடா, கடப்பா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பல்வேறு கல்லூரி மாணவர்கள் இந்த தொடர் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்.
No comments:
Post a Comment