Tuesday, April 17, 2012

இமயமலையில் சர்ச்சைக்குரிய அக்சாய் சின் பகுதியில் பிரம்மாண்ட வானியல் மையம் கட்டும் சீனா


Aksai Chinடெல்லி: ஜம்மு காஷ்மீரின் வடமேற்குப் பகுதியில் சர்ச்சைக்குரிய அக்சாய்சின் பகுதியில் பிரம்மாண்ட வானியல் கண்காணிப்பு நிலையம் அமைக்கும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளது. சீனாவுடன் இணைந்து இந்நிலையத்தை அமைக்க முன்வருமாறு தைவான், ஜப்பான், தென்கொரிய ஆகிய நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா-சீனா உறவு நிலை

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான எல்லைப் பிரச்சனை பல ஆண்டுகாலமாக நீடித்து வருகிறது. இதற்காக இந்தோ-சீனா யுத்தமும்கூட நடந்திருக்கிறது.

ஜம்மு காஷ்மீரின் வடமேற்குப் பகுதியான அக்சாய்சின்னை ஆக்கிரமித்திருக்கும் சீனா அதற்கு உரிமை கோரி வருகிறது. அருணாசல் பிரதேசத்தையே அவ்வப்போது தமக்குச் சொந்தமான பகுதி என்று உரிமை கோரி வருகிறது. இந்த எல்லைப் பிரச்சனைகளுக்கு அப்பால் இருநாடுகளும் தெற்காசிய பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தும் போட்டியிலும் முனைப்பை வெளிப்படுத்தி வருகிறது.

இந்தியாவைச் சுற்றிலும் முத்துமாலைத் திட்டம் என்ற பெயரில் அண்டை நாடுகள் அனைத்திலும் கால்பதித்து ராணுவ தளங்களை சீனா அமைத்து வருகிறது. இந்தியாவோ அமெரிக்காவுடன் கைகோர்த்துக் கொண்டு சீனாவை மிரட்டி வருகிறது. 

தென்சீனக் கடல்

இதன் உச்சமாக தலையில் குடைச்சல் கொடுத்த சீனாவுக்கு அதன் காலடியில் பதிலடி கொடுத்து வருகிறது இந்தியா. சீனாவின் தென்பகுதியில் உள்ள தென்சீனக் கடல் பரப்பில் வியட்நாமுடன் இணைந்து எண்ணெய் அகழாய்வுப் பணியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. இதற்கு சீனா தொடர்ந்து கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. ஒட்டுமொத்த தென்சீனக் கடற்பரப்புமே தமக்கு மட்டுமே சொந்தம் என்று சொல்லுகிறது சீனா. ஆனால் அது உலகத்தின் பொதுச்சொத்து என்றும் பல நாடுகளுக்கும் அதில் பங்கு இருக்கிறது என்றும் இந்தியா கூறிவருகிறது.

சீனாவின் பதிலடி?

தென்சீனக் கடல் பனிப்போரின் எதிரொலியாக இப்பொழுது ஜம்மு காஷ்மீரின் வடமேற்குப் பகுதியான அக்சாய் சின்னில் குடைச்சலைத் தொடங்கியிருக்கிறது சீனா. அக்சாய் சின் பகுதியில் அலி பிரதேசத்தில் ஆசியாவிலேயே மிகப்பிரம்மாண்ட வானியல் கண்காணிப்பு நிலையத்தை சீனா அமைக்க உள்ளது.

மிகப் பிரம்மாண்ட வானியல் தொலைநோக்கிச் சாதனங்கள் நிறுவப்பட உள்ள இந்த நிலையத்தில் தைவான், ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளின் வானியல் அறிஞர்கள் இணைந்து பணியாற்றவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த 12-ந் தேதியன்று சீன அறிவியல் கழகத்தின் தேசிய வானியல் நிலையம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவுக்கு நெருக்கடி

சீனாவின் அறிவிப்பை ஏற்று ஜப்பான், தைவான், தென்கொரியா ஆகியவை இந்த வானியல் மையத்தில் பணியாற்றும் நிலை உருவாகும்போது சர்ச்சைக்குரிய பகுதி என்ற நிலையை சீனா மாற்றிவிடும். இது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தக் கூடும்.

இந்திய-சீனா உறவில் மீண்டும் நெருடலை ஏற்படுத்தியுள்ள இந்த வானியல் மையம் குறித்த இந்திய அரசின் அதிகாரப்பூர்வ கருத்து இதுவரை வெளியிடப்படவில்லை.

No comments:

Post a Comment