Sunday, April 8, 2012

மகனுடன் டெல்லி வந்தார் சர்தாரி- பிரதமருடன் சந்திப்பு- ஆஜ்மீர் தர்காவில் வழிபாடு!


Zardari and Manmohan Singh டெல்லி: 7 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி டெல்லி வந்தார். பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய அவர் மதிய உணவை அவருடன் இணைந்து சாப்பிட்டார். இதைத் தொடர்ந்து அவர் ஆஜ்மீர் தர்காவுக்குச் சென்று வழிபட்டு பின்னர் பாகிஸ்தான் திரும்பிச் சென்றார்.
பாகிஸ்தான் விமானப்படை விமானம் மூலம் சர்தாரி டெல்லி பாலம் விமான நிலையத்தில் இன்று பிற்பகல் வந்து இறங்கினார். அவருக்கு அங்கு இந்திய அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து சர்தாரி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமரின் இல்லத்திற்குச் சென்றார். அங்கு அவரை பிரதமர் வரவேற்றார்.

இதையடுத்து அவருக்கு மதிய உணவு விருந்து அளித்துக் கெளரவித்தார் பிரதமர். மதிய உணவின்போது இரு நாட்டு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் பேசிக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அவர் வரவில்லை.

சர்தாரியுடன் அவரது மகன் பிலாவல் சர்தாரி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் 13 பேர் உள்பட மொத்தம் 40 பேர் வந்தர். விமான நிலையத்தில் அவரை மத்திய அமைச்சர் பவன் குமார் பன்சால் வரவேற்றார்.

பிலாவல் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறையாகும். இதை தனது ட்விட்டர் மூலம் குறிப்பிட்டுள்ள பிலாவல், இந்தியாவில் அமைதி நிலவட்டும் என்று தெரிவித்திருந்தார்.

சர்தாரி இந்தியாவுக்கு கடைசியாக வந்தது 7 ஆண்டுகளுக்கு முன்புதான். அதன் பிறகு தற்போதுதான் முதல் முறையாக வருகிறார். மேலும் பிரதமர் மன்மோகன் சிங்கை அவர் 3 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக சந்திக்கிறார். கடைசியாக 2009ம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த மாநாட்டின்போது சந்தித்தார் சர்தாரி.

உண்மையில் ஆஜ்மீரில் உள்ள காஜா மொய்னுதீன் சிஷ்டி தர்காவுக்கு போவதற்காகவே டெல்லி வந்தார் சர்தாரி. இது அவரது தனிப்பட்ட பயணம்.

இன்றைய சந்திப்பின்போது பாகிஸ்தானுக்கு வருமாறு பிரதமருக்கு சர்தாரி அழைப்பு விடுத்தார். அதை பிரதமர் ஏற்றார்.

டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு ஜெய்ப்பூர் சென்றார் சர்தாரி. அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஆஜ்மீர் சென்ற அவர் பின்னர் அங்குள்ள தர்காவுக்குப் போனார். அங்கு சர்தாரிக்கும், அவரது மகன் உள்ளிட்டோருக்கும் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

சர்தாரியின் வருகையையொட்டி ஆஜ்மீரில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலை 5.30 மணியளவில் தர்காவுக்கு வந்தார் சர்தாரி. பின்னர் அங்கு அவர் வழிபட்டார். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த குறிப்பேட்டிலும் தனது கருத்தைப் பதிவு செய்தார். அதில், இங்கு வந்திருப்பது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. அதை விவரிக்க வார்த்தையே இல்லை. மனித குலத்தின் அனைத்துத் துயரங்களையும் அல்லா எடுத்துப் போட வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன் என்று எழுதினார் சர்தாரி.

சர்தாரி வருகையையொட்டி 1500 போலீஸார் பாதுகாப்புக்காக தர்காவின்னுள்ளும், வெளியிலும் நிறுத்தப்பட்டிருந்தனர். மேலும் அதி விரைவுப் பாதுகாப்புப் படையினர், தீவிரவாத எதிர்ப்புப் படையினரும் நிறுத்தப்பட்டிருந்தனர்.

கடைசியாக தனது மனைவி பெனாசிர் பூட்டோவுடன் 2005ம் ஆண்டு ஆஜ்மீர் தர்காவுக்கு வந்திருந்தார் சர்தாரி. மேலும் 2003ம் ஆண்டு பெனாசிர் மட்டும் இங்கு வந்திருந்தார். அப்போது சர்தாரி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரது விடுதலைக்காக வேண்டி பெனாசிர் தர்காவுக்கு வந்திருந்தார். அவர் விடுதலையான பின்னர் 2005ம் ஆண்டு கணவருடன் சேர்ந்து வந்திருந்தார்.

அஜாமீ்ர் பயணத்தை முடித்துக் கொண்ட சர்தாரி ஆறரை மணியளவில் தர்காவை விட்டு கிளம்பினார். பிறகு ஆறே முக்கால் மணியளவில் அவர் பாகிஸ்தானுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

No comments:

Post a Comment