Tuesday, April 3, 2012

மிஞ்சியது ஏமாற்றமே!!



வழக்கத்திற்கு மாறாக அன்று நான் மிகவும் குழம்பிய நிலையில் என்னுடைய அலுவலக பணிகளை செய்து கொண்டிருந்தேன். அந்த குழப்பத்திற்கான காரணத்தை யாரிடமாவது சொல்லவேண்டும் என்று என்னுடய மனம் எண்ணியது. மதிய இடைவேளை அப்போது. என்னுடைய நண்பன் அமீர் எனதருகில் வந்து "நீ ஏதோ குழம்பிய நிலையில் உள்ளாய். அதற்கான காரணம் என்ன?" என்று வினவினான்.


எனக்கோ ஒரு ஆறுதல் வந்தது போல, "ஆம். நானும் காலையில் தினசரிகளை புரட்டிய பிறகே என்னுடைய அலுவல்களை தொடங்கினேன். இன்றைய ஒரு செய்தி என்னை மிகவும் குழம்பிய நிலைக்கு கொன்டு சென்றுவிட்டது. அதுதான் ராணுவத்தில் நடந்த ஊழலை பற்றி ராணுவ தளபதி வி.பி. சிங் அளித்த பேட்டி" என்றேன்.

அதற்கு என் நண்பனோ, "இது தொன்று தொட்டு நடக்கும் நிகழ்ச்சி தான். இந்தியா சுதந்திரம் அடைந்த நாள் முதல் இது நடைபெறுகிறது" என்றவன் எடுத்துகாட்டாக ஒரு நிகழ்வை கூறினான்.


"1948-ல் இந்திய ஹை-கமிஷனராக இருந்த வி.கே. கிருஷ்ண மேனன் இந்திய ராணுவத்திற்கு ராணுவ ஜீப்பு வாங்கியதில் முறைகேடு நடைபெற்றது. அதன் அப்போதைய மதிப்பு சுமார் 80 லட்சம் ரூபாய். ஆனால் இவர் கூறியது வெறும் 14 கோடிதானே... இது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை" என்றவன், "சரி... எனக்கு பசிக்கிறது. என்னுடைய ஸ்பெஷல் தயிர் சாதம் வாசனை தூக்குது" என்றான்.


என் நண்பனின் பதிலில் திருப்தி இல்லை என்பதை என்னுடைய மனம் உறுதி செய்தது.


நாங்கள் இருவரும் உணவு உண்ணும் இடத்திற்கு சென்று சாப்பிட ஆரம்பித்தோம். அப்போது நான் கேட்டேன்; "ஒரு நாட்டின் பாதுகாப்பு இராணுவத்தின் பலத்தில்தான் உள்ளது. அப்படி இருக்கையில் ஏன் இந்த அரசியல்வாதிகள் இவ்வாறு செய்கின்றனர்? இது போன்ற அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கத்தினரும் மக்கள் மீதும் மக்கள் பாதுகாப்பின் மீதும் ஏன் அக்கறை கொள்ள மறுக்கிறார்கள்? இது ஒரு தேசிய தலைகுனிவு என்பது கூடவா இவர்களுக்கு தெரியவில்லை?" என்று அடுக்கடுக்காக என் கேள்வியை கேட்டேன்.


என்னுடைய நண்பனோ, "இப்போதெல்லாம் நேரடியாக சண்டை போடுவதற்கு பதிலாக கொல்லைப் புறம் வழியாக சென்று நாடுகளை பணிய வைப்பதில் முதலிடத்தில இருப்பது உலக ரவுடியான அமெரிக்காதான். நமது இந்திய அரசோ அதற்கு அடிமையாகிவிட்டது.


இதனால் கூட ஏன் இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று நமது அரசு நினைத்திருக்கலாம். அப்படி ஏதும் நடைபெற்றால் உலக நாட்டாமையிடம் புகார் தெரிவித்தால் போதுமானது என்று கூட நினைத்திருக்கலாம்" என்று நக்கல் அடித்தான்.


அவனது பதிலில் சிரிப்பு வந்தாலும் ஒவ்வொரு இந்தியனும் சிந்திக்கக் கூடிய விஷயம் இது என்று என்னுடைய அடிமனது எண்ணியது.


மேலும் இயல்பாக என்னுடைய மனதில் தோன்றிய கேள்விகளுக்கும் என்னுடைய நண்பன் சொன்ன பதில் பொருத்தமாகத்தான் இருந்தது.


இந்தியாவையும் இந்திய மக்களையும் பாதுகாப்பேன் என்று ஒவ்வொரு முறையும் பதவி ஏற்கும்போது உறுதிமொழி எடுக்கிறார்கள். அது எதற்கு? ஒவ்வொரு பட்ஜெட் தொடரிலும் பாதுகாப்புத் துறைக்கென்று பல கோடிகளை ஒதுக்குகிறார்கள். அதெல்லாம் எங்கே போகிறது? என்று ஆதங்கத்துடன் என் மனதில் எழுந்த கேள்விகளுக்கு என் நண்பனோ அவனை அறியாமல் கூறிய பதில்; "யாரோ எழுதிக் கொடுத்ததை பதவி ஏற்பு விழாவில் படிக்கிறார்கள். அதை அன்றே மறந்தும் விடுகிறார்கள். திட்டங்கள் தீட்டினால் ஊழலில் சம்பாதிக்கலாம் என்பதுதான் அரசியல் வாய்ப்பாடு. அதைத்தான் இவர்கள் செவ்வனே செய்கிறார்கள். கடந்த பா.ஜ.க. ஆட்சியின் போது போரில் மரணமடைந்தவர்களுக்கு சவப்பெட்டி வாங்குவதில் கூட ஊழல் செய்தார்கள். இவர்கள் எந்த அளவிற்கு மோசமாக செயல்படுவார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். மேலும் காங்கிரசும் பா.ஜ.க-வும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை. ஒவ்வொரு பட்ஜெட்டின் போதும் ராணுவத்திற்கென்று ஒதுக்குகின்ற தொகையில் 70 சதவிகிதம் ஆயுத கொள்முதலுக்கு பயன்படுகிறது. அப்படியென்றால் அந்த பணமெல்லாம் எங்கே போகிறது? யாருக்கு போகிறது?


இந்த பட்ஜெட்டிலும் கூட 1 லட்சத்து 97 ஆயிரம் கோடி ஒதுக்கி இருக்கிறார்கள். ஆனாலும் கூட நமது ராணுவத்தில் தரமான ஆயுதங்கள் இல்லை என்று கூறுகிறார் ராணுவ தளபதி. ஆயுதங்களை தயாரிக்க தான் DRDO என்ற அமைப்பு செயல்படுகிறது. அவர்களெல்லாம் தூங்கிக்கொண்டு இருக்கிறார்கள் போலும். கோடிக்கணக்கான மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழுகின்றார்கள். ஆனால் புதுப் புது வரிகள் போட்டு மக்கள் மீது சுமையை ஏற்றுகிறார்கள். ஆனால் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஊழலில் முதலிடம் யாருக்கு என்பதில்தான் போட்டி நடைபெறுகிறது. அதில் பாதுகாப்புத்துறை மட்டும் என்ன விதிவிலக்கா?"


என் நண்பனின் பதிலில் ஆதங்கம் வெளிப்பட்டாலும் அதில் உண்மை இருப்பதை உணர்ந்தவாறே இருவரும் சாப்பிட்டு முடித்தோம். 


"நாமெல்லாம் சாதாரண குடிமக்கள்தானே... நம்மால் என்ன செய்ய முடியும்? இது போன்ற தேசிய அவமானத்தால் நாம் வேண்டுமென்றால் உணர்ச்சிவசப்படலாம், ஆதங்கப்படலாம். அதுவும் எந்தப் பலனும் தராது. நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் ஓட்டு. இதை மட்டும்தான் நம்மால் பயன்படுத்த இயலும். வேண்டுமானால் அடுத்த தேர்தலில் மாற்றி ஓட்டு போட்டால்..." என்று சொல்லிகொண்டே என் நண்பன் சிறிது யோசித்தவனாக சொன்னான்; "ஏமாற்றம் ஓன்றுதான் மிஞ்சும்."


எனது கைபேசி அலறியது. எடுத்துப் பார்த்தால் என் மேலாளரின் அழைப்பு. அவர் என்னிடம் சில ஆவணங்களைத் தயார்படுத்தச் சொல்லிவிட்டு வைத்துவிட்டார். நானும் அவர் கூறிய வேலையை முடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கிளம்பிவிட்டேன்.
-முஹம்மது அபூபக்கர்

1 comment:

Anonymous said...

சகோதர,,,
நீங்கள் எடுத்துக்கொண்ட தயிர் சாதமும்,,, இந்த செய்தியும் எங்களுக்கு ஒன்றாக தான் தெரிகிறது, ஏன் என்றால் இரண்டிலும் காரம் சாரம் இருக்காது,,, எங்களுக்கு இந்த செய்தி எல்லாம் சகஜமப்பா!!!! இப்படி கேட்டு கேட்டு பழகிட்டமுலே,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

Post a Comment