வள்ளியூர்: கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பாளர்கள் வரும் மே மாதம் 1ம் தேதி முதல் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
இந்தோனேசியாவில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே கூடங்குளம் அணு உலை அமைக்கப்பட்டிருக்கும் பகுதியில் நிலவியல் மற்றும் பூகம்பவியல் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
கூடங்குளம் அணு உலையிலும் முழுமையான ஆய்வு நடத்த வேண்டும். வரும் மே 1ம் தேதி முதல் இடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருக்கிறோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இன்னும் 40 நாளில் 1000 மெகாவாட் திறன் கொண்ட முதல் அணு உலையில் மின் உற்பத்தி துவங்கும் என்று மத்திய இணையமைச்சர் வி. நாராயணசாமி தெரிவித்துள்ளார். தமிழக அரசின் உத்தரவையடுத்து மூடப்பட்டிருந்த கூடங்குளம் அணு மின் கடந்த மாதம் திறக்கப்பட்டு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. விரைவில் அங்கு மின் உற்பத்தியை துவங்க அணு மின் நிலைய ஊழியர்கள் இரவு பகல் பாராது பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கூடங்குளம் அணு மின் நிலையம் கடந்த மாதம் திறக்கப்பட்டதை கண்டித்து இடிந்தகரையில் உதயகுமார் உள்ளிட்ட 15 பேர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தனர். பின்னர் தமிழக அரசுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதால் 9 நாட்களுக்கு பிறகு உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.
No comments:
Post a Comment