டெல்லி: பெட்ரோல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைக்காவிட்டால் விலையை லிட்டருக்கு ரூ. 10 வரை உயர்த்துவோம் என்று மத்திய எண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து, பெட்ரோல்- டீசல் மீதான வரிகளைக் குறைத்த அரசு முடிவு செய்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போவதால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்த கோரிக்கை விடுத்து வருகின்றன.
பெட்ரோல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைக்காவிட்டால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 10 வரை உயர்த்துவோம் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு தயங்கி வருகிறது. பெட்ரோல் விலையை உயர்த்தினால் மக்களின் எதிர்ப்புக்கு ஆளாக வேண்டி வரும் என்பதாலும், டீசல் விலையை உயர்த்தினால் விலைவாசியும் பணவீக்கமும் உயர்ந்து மக்களிடம் அடி வாங்க வேண்டி வரும் என்பதாலும் மத்திய அரசு தயங்கிக் கொண்டே உள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்படாததால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில மாதங்களில் பல்லாயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துவிட்டன. இனியும் இழப்பை தாங்க இயலாது என்பதாலும், கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய பணமில்லை என்று எண்ணெய் நிறுவனங்கள் கூறி வருவதாலும், விலையை நாங்களே லிட்டருக்கு ரூ. 10 வரை உயர்த்துவோம் என மிரட்டி வருவதாலும் பெட்ரோல்-டீசல் மீது விதிக்கப்படும் வரிகளை குறைப்பது குறித்து மத்திய அரசு யோசித்து வருகிறது.
தானும் வரிகளைக் குறைப்பதோடு, மாநில அரசுகளையும் பெட்ரோல்- டீசல் மீதான வரிகளைக் குறைக்கச் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதன்மூலம் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்க முடிவதோடு, விலையைக் குறைக்கவும் முடியும். இதனால் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் வருவாய் இழப்பு ஏற்படும் என்பது தனிக் கதை.
தற்போது மத்திய அரசு பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ. 15 கலால் வரி வசூலிக்கிறது. மாநில அரசுகள் ரூ. 4 முதல் ரூ. 9 வரை விற்பனை வரி வசூலிக்கின்றன. டீசலை பொறுத்தவரை மத்திய அரசு ரூ. 5 கலால் வரி வசூலிக்கிறது. மொத்தத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மத்திய- மாநில அரசுகள் ரூ. 27 வரை வரிகளாக வசூல் செய்கின்றன.
முதல் கட்டமாக மத்திய அரசு தனது வரியைக் குறைப்பதோடு, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பெட்ரோல்- டீசல் மீதான வரி குறைப்பை செய்யும்படி கோரும் என்று தெரிகிறது. இதனால் மற்ற மாநில அரசுகளும் வரியைக் குறைக்க வேண்டிய நிலைக்கு நிச்சயம் தள்ளப்படும் என்பது நிச்சயம்.
No comments:
Post a Comment