Saturday, April 28, 2012

இந்திய பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 6.9 தான்! - ஐ.எம்.எப்


டெல்லி: இந்தியா உட்பட ஆசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியானது நடப்பு 2012-ம் ஆண்டில் எதிர்பார்த்த இலக்கை எட்டாது என்று சர்வதேச நிதியமான ஐ.எம்.எப். கவலை தெரிவித்துள்ளது.
ஆசியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியானது 2011-ம் ஆண்டு 5.9 ஆக இருந்தது. நடப்பு ஆண்டில் 6 விழுக்காடு அளவுக்குத்தான் இருக்கும் என்று ஐ.எம்.எப். தெரிவித்துள்ளது. 2013-ம் ஆண்டிலும் கூட ஆசியாவின் பொருளாதார வளர்ச்சியானது 6.5 விழுக்காடு அளவுக்குத்தான் தடுமாற்றமான நிலையையே கொண்டிருக்கும் என்று அதன் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை, சீனா ஆகிய இரண்டு நாடுகளிலும்கூட 2011-ம் ஆண்டை ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதமான குறைந்தே காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.9 விழுக்காடாகவும் சீனாவின் பொருளாதார வளர்ச்சியானது 8.2 ஆகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாடுகளினது 2011-ம் ஆண்டு பொருளாதார வளர்ச்சியானது இதைவிடக் கூடுதலாக இருந்தது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. அதாவது 2011-ம் ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.1 விழுக்காடாகவும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 9.2 விழுக்காடாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் 2013-ல் 7.3 விழுக்காடுதான் பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்றும் ஐ.எம்.எப். கூறியுள்ளது.

சர்வதேச மாற்றங்களுக்கு அமைய நாட்டின் பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்பது ஐ.எம்.எப் வெளியிட்டுள்ள அறிக்கையின் சாராம்சமாக உள்ளது. இதற்கமைய நிர்வாக அமைப்பு முறைகளில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியதும் அவசியம் என்கிறது ஐ.எம்.எப்.

No comments:

Post a Comment