Tuesday, May 1, 2012

ஜனாதிபதி தேர்தல்: பாஜக கூட்டணியிலும் பிளவு!


Sharad yadav and Sushma swarajடெல்லி: ஜனாதிபதி தேர்தலில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் யாரையும் ஆதரிக்க மாட்டோம் என்ற பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜின் பேச்சு அவரது சொந்தக் கருத்தாகும் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கியக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் பாஜக கூட்டணியில் இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்து இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற விஷயத்தில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆளுக்கு ஒரு பெயரை கூறி வருகின்றன. அதே போல எந்தக் கூட்டணியிலும் இல்லாத கட்சிகளும் வாய்க்கு வரும் பெயர்களை சொல்லி வருகின்றன.

இந்நிலையில் பாஜக கூட்டணியிலும் ஒற்றுமை இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

அப்துல் கலாம் போட்டியிட விரும்பினால் அவரை ஆதரிக்கத் தயார் என்றும் அதே நேரத்தில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் யாரையும் ஆதரிக்க மாட்டோம் என்றும் சுஷ்மா ஸ்வராஜ் கூறியிருந்தார்.

முகர்ஜி தீவிரமான அரசியலில் உள்ளார். அன்சாரிக்கு ஜனாதிபதி பதவிக்கான தகுதி கிடையாது என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று பேட்டியளித்த பாஜக கூட்டணியின் மிக முக்கிய கட்சியான ஐக்கிய ஜனதா தளத் தலைவரான சரத் யாதவ், சுஷ்மாவின் பேச்சு முழுக்க முழுக்க அவரது சொந்தக் கருத்து. அது கூட்டணியில் கருத்து அல்ல. இந்த விஷயத்தில் நாங்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார்.

No comments:

Post a Comment