டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சி சார்பில் பிரணாப் முகர்ஜி நிறுத்தப்படுவார் என்பது உறுதியாகிவரும் நிலையில் அவரை ஆதரிப்பதாக வெளிப்படையாகவே கூட்டணிக் கட்சிகள் அறிவித்திருப்பது டெல்லி அரசியலில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரணாப் முகர்ஜி
குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜியே வேட்பாளராக இருப்பார் என்கிற வகையில் ஊடகங்கள் அனல் பறக்க விவாதங்களை முன் வைத்து வருகின்றன. இருப்பினும் பிரணாப்பை நிதி அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவித்து கட்சிப் பொறுப்பிலிருந்தும் விடுவித்து குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக முன் நிறுத்தினால் ஏற்படும் இழப்புகளை காங்கிரஸ் கட்சி கணக்கிட்டு ஒரு ஊசலாட்டமான போக்கில்தான் காங்கிரஸ் இருந்து வந்தது.
பிரதமர் கனவு
பிரணாப் முகர்ஜியும் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட 1984-ம் ஆண்டிலேயே தம்மை பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்திக் கொண்டவர். அவரைப் பொறுத்தவரையில் பிரதமர் பதவி என்பது நிறைவேறாத 30 ஆண்டுகால கனவுதான் என்று சொல்ல வேண்டும். தன்னை பிரதமராக அறிவிக்க அப்போது பிரணாப் முயற்சித்ததால் ராஜிவ் காந்தியின் கோபத்துக்கு ஆளானவர். இருப்பினும் அவரது சீனியாரிட்டியும் சின்சியாரிட்டியும் ராகுல்காந்தி காலம் வரை தாக்குப் பிடித்து நம்பர் 2- என்ற நிலையில் இருக்க வைத்திருக்கிறது.
அதேபோல் காங்கிரஸ் கட்சி ஒன்றும் தனித்து பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கவில்லை. காங்கிரஸை அசைத்துப் பார்க்கக் கூடிய கூட்டணிக் கட்சிகளுடன் அந்தரத்தில் தொங்கிக் கொண்டுதான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற பெயரில் ஆட்சி அமைத்திருக்கிறது. ஏதோ ஒரு விவவாகரத்தில் எப்படியாவது ஒரு கூட்டணிக் கட்சி முறுக்கிக் கொண்டுதான் நிற்கும்.
குறிப்பாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருக்கக் கூடிய திமுகவும் மமதாவின் திரிணாமுல் காங்கிரஸும் தவிர்க்க முடியாத கட்சிகள். இந்த இரண்டு கட்சிகளும் முறுக்கிக் கொண்டால் சமரச தூதராக சென்று சாதிக்கக் கூடியவராக இருப்பவரும் பிரணாப் முகர்ஜிதான். இன்னும் இரண்டு ஆண்டுகாலத்துக்கு சிந்தாமல் சிதறாமல் ஆட்சி காலத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று கருதி கொஞ்சம் பிரணாப்பை முன்னிறுத்த காங்கிரஸ் தயக்கம் காட்டி வந்தது.
பவாரும் பிரணாப்பையே ஆதரிக்கிறார்
இந்நிலையில் கூட்டணிக் கட்சியான திமுகவின் கருணாநிதி முழுவதுமாக பிரணாப்பை ஆதரிக்கிறார்- சரத்பவாரும் பிரணாப்பையே ஆதரிக்கிறார் என்பதால் நேற்று இரவு சோனியாவுடனான சந்திப்பின் போது மமதா பானர்ஜியிடமும் இதுபற்றி ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. இதன் பின்னர் பிரணாப்பை முன்னிறுத்தும் மனநிலைக்கு காங்கிரஸ் வந்ததாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கூட்டணிகள் ஆதரவு
டெல்லியைப் பொறுத்தவரையில் அங்கு மையம் கொண்டிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளருக்கான புயல் மெல்ல மெல்ல கரையைக் கடப்பதுபோல் இப்போது பிரணாப் முகர்ஜி என்ற ஒற்றை மனிதரை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி ஒருபக்கம் ஊசலாட்டமான நிலையில் இருந்தாலும் கூட்டணிக் கட்சிகள் விடுவதாக இல்லை என்ற நிலையே இப்போது.
கருணாநிதி ஏற்கெனவே ஆதரித்திருக்கிறார்
குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜியை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திமுக தலைவர் கருணாநிதி ஏற்கெனவே ஆதரித்திருக்கிறார்.
மற்றொரு முக்கிய கூட்டணிக் கட்சியான திரிணாமுல் காங்கிரஸும் வெளிப்படையாகவே பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதாக அறிவித்திருக்கிறது. இதேபோல் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரும் பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதாக அறிவித்திருக்கும் நிலையில் புதிய திருப்பமாக ராஷ்டிரிய லோக்தளத்தின் அஜித்சிங்கும் பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதாக அறிவித்திருக்கிறார்.
மேலும் குடியரசுத் தலைவருக்கான தகுதியும் திறமையும் கொண்டவர் பிரணாப் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று ஆணித்தரமாகவும் அஜித்சிங் கூறியிருக்கிறார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைப் பொறுத்தவரையில் குடியரசுத் தலைவர் வேட்பாளர் பிரணாப் முகர்ஜிதான் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக அடுத்தடுத்த காட்சிகள் அரங்கேறி வருகின்றன.
No comments:
Post a Comment