Sunday, May 6, 2012

எதிரி ஏவுகணைகளை அழிக்கும் ஏவுகணைகள் தயார்..2 நகரங்களில் நிறுத்தப்படும்!


 India S Missile Defence Shield Ready டெல்லி: இந்தியாவின் அதி நவீன ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைத் திட்டம் முழுமையாக தயாராகி விட்டது. இந்த வகை ஏவுகணைகளை விரைவில் 2 நகரங்களில் நிறுத்தத் திட்டமிட்டப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட அதி நவீன ஏவுகணைகளை வைத்துள்ள ஒரு சில நாடுகளின் வரிசையில் இந்தியாவும் தற்போது சேர்ந்துள்ளது.

மத்திய பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சிக் கழகமான டிஆர்டிஓ இதை உருவாக்கியுள்ளது. மேலும் இதை வெற்றிகரமாகவும் சோதித்துப் பார்த்துள்ளது. இந்த ஏவுகணைகள், 2000 கிலோமீட்டர் தூரம் வரை ஊடுறுவிச் சென்று எதிரிகளின் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் தன்மை கொண்டதாகும். இதை 2016ம் ஆண்டுவாக்கில் 5000 கிலோமீட்டர் வரை மேம்படுத்தும் திட்டத்தையும் டிஆர்டிஓ வைத்துள்ளது.

இதுகுறித்து டிஆர்டிஓ தலைவர் வி.கே.சரஸ்வத் கூறுகையில், தற்போது ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைத் திட்டம் தயாராகி, ஆயத்த நிலைக்கு வந்து விட்டது. இதை முதலில் 2 நகரங்களில் நிறுத்தி வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டு நகரங்கள் எது என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. அரசியல் மட்டத்தில் இதுதொடர்பான முடிவு எடுக்கப்படும் என்றார்.

பிருத்வி ஏவுகணையின் பல்வேறு வகைகளைக் கொண்டு இந்த ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகள் பரிசோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது.

சரஸ்வத் இதுகுறித்துக் கூறுகையில், மொத்தம் 6 முறை பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் புவியின் வளி மண்டலத்திற்கு வெளியேயும், உள்ளேயும் என இரு மட்டங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. ஏவுகணைகளைக் கண்டறிவது, அதை தடுத்து தாக்குவது உள்ளிட்ட அனைத்தும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைத் திட்டமானது தானாக இயங்கக் கூடியது. நமது எல்லைக்குள் எதிரி நாட்டு ஏவுகணைகள் ஊடுறுவுமானால் தானாகவே சென்று அதைத் தாக்கி அழிக்கும். அதை நிறுத்து வேண்டுமானால் மட்டுமே நாம் தலையிட்டு ஏவுகணையைக் கட்டுபடுத்த வேண்டும் என்றார்..

அமெரிக்காவின் பாட்ரியாட் 3 ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைக்குச் சமமானது இந்தியா உருவாக்கியுள்ள ஏவுகணை. 1990ல் நடந்த வளைகுடாப் போரின்போது பாட்ரியாட் ஏவுகணைகள் சிறப்பாக செயல்பட்டன என்பது நினைவிருக்கலாம்.

இந்த ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகளை 2006ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் முறையாக சோதனையிட்டுப் பார்த்தது இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது உலக அளவில் ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் தன்மை கொண்ட ஏவுகணைகள், அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் ஆகிய நாடுகளிடம் மட்டுமே உள்ளது. அந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment