Tuesday, May 8, 2012

ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை குறையுங்கள்: இந்தியாவுக்கு ஹில்லாரி கோரிக்கை

 Hillary Clinton Meet Sm Krishna Hafiz Saeed
டெல்லி: அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை இன்று சந்தித்து பேசினார்.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் 3 நாள் சுற்றுப்பயணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா வந்தார். அவர் தனது பயணத்தின் கடைசி நாளான இன்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை சந்தித்து பேசினார்.

அப்போது ஆப்கானிஸ்தான் விவகாரம், தீவிரவாதம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஹில்லாரி கிருஷ்ணாவுடன் பேசினார். மேலும் இந்தியா ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவ்வாறு உலக நாடுகள் ஈரானிடம் இருந்து எண்ணெய்யை இறக்குமதி செய்வதைக் குறைத்தால் தான் டெஹ்ரான் அணு சக்தி திட்டம் தொடர்பான சர்வதேச கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறு அந்நாட்டை வலியுறுத்த முடியும் என்றார்.

இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவு மேலும் வலுப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். மேலும் பாதுகாப்பு விவகாரங்களில் இந்தியாவும், அமெரி்ககாவும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இது தவிர பாகிஸ்தானுடனான உறவு குறித்தும் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை குறைக்க இந்தியா முயற்சி செய்வதை ஹில்லாரி வரவேற்றார். பாகிஸ்தானிற்கு வெளியே இருந்து அமெரிக்கா, ஆப்கானிஸ்தானுக்கு நேரடி அச்சுறுத்தலாக இருக்கும் தீவிரவாத அமைப்புகளை கண்காணிக்கவிருக்கிறோம். தீவிரவாதி ஹபீஸ் சயீத் தலைக்கு பரிசு அறிவித்தது தீவிரவாதத்திற்கு எதிரான எங்களின் நிலையை உறுதிபடுத்தியுள்ளது. பாகிஸ்தான் அரசு தங்கள் நாட்டை தீவிரவாதிகள் கேம்ப்பாக பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பாகிஸ்தான் அரசிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறோம் என்றார் ஹில்லாரி. 

தீவிரவாத கும்பலுடன் மக்கள் சேர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார். 

இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவுகள், ஐடி நிறுவனங்கள் மற்றும் ஈரான் விவகாரம் குறித்து எஸ்.எம். கிருஷ்ணா பேசினார். வரும் ஜூன் மாதம் 13ம் தேதி வாஷிங்டனில் இந்தியா-அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடக்கவிருக்கும் நிலையில் நடந்த இந்த சந்தி்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. 

முன்னதாக நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த ஹில்லாரி மும்பை தாக்குதல்களுக்கு பின்னால் இருப்பவர்கள் நீதிக்கு முன்பு கொண்டு வரப்பட வேண்டும் என்று அமெரிக்கா விரும்புவதாகத் தெரிவித்தார்.

மேலும் அவர் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியையும் சந்தித்து பேசினார். சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு குறித்தும், டீஸ்டா நீர் பங்கீடு குறித்தும் அவருடன் பேசவில்லை என்று மமதா தெரிவித்தார். ஆனால் இந்த விவகாரங்கள் குறித்து அவர்கள் பேசியதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

ஹில்லாரி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் நேற்று சந்தி்த்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment