டெல்லி: இந்திய நாடாளுமன்றத்தின் அறுபதாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு நாளை நடைபெறுகிறது.
மக்களவை, மாநிலங்களவை இரண்டும் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்குக் கேள்வி நேரமின்றி தொடங்குகின்றன. மக்களவையில் அவை முன்னவரான மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, "இந்திய நாடாளுமன்றத்தின் அறுபது ஆண்டு பயணம்' என்ற தலைப்பில் விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசுவார். அவரைத் தொடர்ந்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மக்களவையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் தலா ஒரு உறுப்பினர் நாடாளுமன்றத்தின் சிறப்பு குறித்து உரையாற்றுவர்.
மாலை 5.30 மணிக்கு மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் சிறப்புரையாற்றுகிறார். அவரைத் தொடர்ந்து மாநிலங்களவைத் தலைவரும் குடியரசுத் தலைவருமான ஹமீது அன்சாரி, மக்களவைத் தலைவர் மீரா குமார் ஆகியோரும் உரையாற்றுவர்.
மூத்த உறுப்பினர்களுக்கு சிறப்பு
இந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக காங்கிரஸ் மூத்த உறுப்பினர் ரிஷாங் கெய்சிங் (91), பாஜகவைச் சேர்ந்த ரேஷம் லால் ஜாங்டே ஆகியோர் சிறப்பிக்கப்படுவர். இவர்களில் கெய்சிங் முதலாவது மக்களவையிலும் மூன்றாவது மக்களவையிலும் உறுப்பினராக இருந்தவர். தற்போது மாநிலங்களவையின் உறுப்பினர் ஆவார். ஜாங்டே முதலாவது, இரண்டாவது மற்றும் ஒன்பதாவது மக்களவையில் உறுப்பினராக இருந்தவர்.
சிறப்பு நாணயங்கள்
நாடாளுமன்றத்தின் அறுபதாம் ஆண்டு விழாவை நினைவு கூரும் வகையில் ரூ. 5, ரூ. 10 நாணயங்களையும் சிறப்பு அஞ்சல் தலையையும் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வெளியிடுகிறார். இதைத் தொடர்ந்து, "முதல் மக்களவை', "மக்களவைத் தலைவர்கள்', "60 ஆண்டுகால மக்களவை: ஓர் ஆய்வு' என்ற தலைப்புகளில் எழுதப்பட்ட மூன்று புத்தகங்களைக் குடியரசுத் தலைவர் வெளியிடுகிறார். இதே போல், "பெண் உறுப்பினர்களின் குறிப்பிடத்தக்க பேச்சு', "மாண்புமிகு மாநிலங்களவைத் தலைவரை வரவேற்கிறோம்', "அறுபது ஆண்டுகால மாநிலங்களவை', "கணினிமயமான மாநிலங்களவை' ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட புத்தகங்களும் நிகழ்ச்சியில் வெளியிடப்படவுள்ளன.
மாலையில் சந்தூர் இசை மேதை பண்டிட் சிவசங்கர் சர்மா, சித்தார் கலைஞர் தேவு சௌத்ரி, கர்நாடக இசைப் பாடகர் மகராஜபுரம் ராமச்சந்திரன், பாடகி சுபா முத்கல், இக்பால் ஆகியோரின் கச்சேரி நடைபெறவுள்ளது.
No comments:
Post a Comment